நல்லாட்சி

நீலவானனும் பச்சைமாலனும்
பொற்காசுக்கு அடிமையாகி
பெற்றதாயைத்துகிலுரிந்து
பிறத்தியார்க்கு அம்மணங்காட்டி
துச்சாதனம் பண்ணுகிறார்;
வாளுடைய சிங்கமாய்
கொம்புடைய யானையாய்
செங்கொடிச் சிறுத்தைகளுடன்
பேருக்குக் கூட்டுச்சேர்ந்து
நல்லாட்சி நாமம்வைத்து
நடக்கிறது தர்பார்கூத்து.

பனங்காட்டு நரிகளெல்லாம்
நல்லாட்சி இதுவோ? என்று
நச்சரித்துத் திரிகின்றன,
பார்வையில் கொடுமைவைத்த
வேங்கையும் விமர்சிக்கிறது:
வகைதொகையாய் நரர்விழுங்கி
ஏப்பமிட்ட முதலைகளும்
விழுந்தாலும் மீசையிலே
மண்படவில்லை என்று
சண்டித்தனம் செய்கின்றன.

நடப்பினை நாடிபார்த்து
நடனத்தை விட்டமயில்
சமாதானம் சுமந்துசெல்லும்
வெண்புறாவைச் சந்தித்து
நல்லாட்சி என்றால் என்ன?
கேள்வியை அகவியது;
மவுனமாய்ச் சிலகணங்கள்
கண்மூடி நின்றபுறா
கண்களுக்குள் எகிப்துமன்னன்
ஹமுரபி வந்து நின்றான்.

“கண்ணெண நோயாளியை
எண்ணிப்பராமரிக்க
தவறிடும் தாதியர்க்கு
கடுமையானதண்டனை,
கவனக்குறைவினாலே
சத்திரசிகிச்சை நோயாளி
சாவுக்கு உள்ளானால்
சத்திரசிகிச்சை நிபுனரின்
விரல்களை வெட்டல் சட்டம்.

கற்பழிப்பு ஆள்கடத்தல்
சிறுமியரை வன்புணர்தல்
திருடுதல் வழிப்பறிப்பு
நிர்வாகத்தில் இலஞ்ச ஊழல்
தரங்குறைந்த பியர்செய்தல்
இவைபோன்ற குற்றங்கட்கு
கேள்விக்கு கணமுமில்லை
வேள்விதான் மரணந்தான்.

வீடுபுகுந்து கொள்ளையிட்ட
கொள்ளையரைக் காலம்வைத்து
காவலர்கள் கைதுசெய்து
கொள்ளைப்பொருள் மீட்காவிட்டால்,
அந்நிலயக் காவலர்கள்
வேலைநீக்கம் செய்யப்பட்டு,
திருட்டுப்போன பொருள்மதிப்பை
திருட்டுப்போன வீட்டாணுக்கு
அரசாங்க நிதித்துறையர்
நட்டஈடு கட்டல்சட்டம்”

எகிப்துமன்னன் ஹமுரபியின்
நல்லாட்சி இதுஎன்று
வெண்புறாச் சொன்னசெய்தி
வெடியெனக் காதில்விழ,
கழுத்தை நீட்டிச்சொண்டுயர்த்தி
ஒருபக்கம் பார்த்தபடி
மயிலம்மை தான்நடந்தாள்.

(Jeganathan Visuvasam)