தெருவில் நிற்கின்ற ஒரு நாயை ஓர் இளைஞர் உதைக்க, “அதுவும் ஓர் உயிரினம்; அதற்கும் உரிமை உண்டு; அதுமட்டுமன்றி, அது யாத்திரையில் கலந்து கொண்டிருந்தது” என்ற விடயங்கள் அளவுக்கு அதிகமாகத் தூக்கிப் பிடிக்கப்பட்டதால், நிலைமைகள் விபரீதமாகியுள்ளன. இதனை முஹம்மது நபியுடனும் இஸ்லாத்துடனும் தொடர்புபடுத்தி விமர்சித்தமைக்காக, சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டவருக்காக இரு நாடுகளுக்கும் இடையில் ராஜதந்திரத்தை கையாள வேண்டிய கட்டத்திற்கு இவ்விவகாரம் சென்றிருக்கின்றது.
நாய் ஒன்றைத் தாக்கியமை ஒரு தனிநபரின் செயலாகும். அதனை ஒரு சமூகத்தோடு, மதத்தோடு தொடர்புபடுத்தி அபத்தமான கருத்துக்களை வெளியிட்டமை இன்னும் சில தனி நபர்களின் கைங்கரியங்களாகும். ஆனால், ஒரு சிறிய விடயமும் பக்குவமில்லாத ஒரு சிலரால் எந்தளவுக்குப் பாரதூரமான விவகாரங்களாக மாற்றிவிடப்படலாம் என்பதற்கு, கல்முனையில் நாய் தாக்கப்பட்ட சம்பவம் ஒரு நல்ல உதாரணமாகும்.
இலங்கை ஏற்கனவே நீண்டகால இன முரண்பாடுகள், உள்நாட்டு யுத்தம், மனித உரிமை மீறல்கள் மற்றும் பரஸ்பர நம்பிக்கையின்மை போன்ற பல கசப்பான அனுபவங்களைச் சந்தித்த நாடாகும்.
பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட சமூக நல்லிணக்க முயற்சிகள் இன்னும் முழுமையான வெற்றியை அடையாத நிலையிலேயே உள்ளன. இத்தகைய சூழலில், எந்தவொரு சம்பவத்தையும் உணர்ச்சிக்கு இடமளிக்காமல், பொறுப்புடனும் நிதானத்துடனும் அணுகுவது அனைத்து சமூகங்களினதும் பொறுப்பாகும். ஆனால், கல்முனையில் நிகழ்ந்த சம்பவம் அதற்கு நேர்மாறான ஒரு விளைவைத் தூண்டியுள்ளது.
வடக்கிலிருந்து கதிர்காமம் நோக்கி யாத்திரை மேற்கொண்டிருந்த பக்தருடன் சென்ற ‘சுப்பிரமணி’ என்ற நாய் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதும், விவாதத்தின் மையம் விலங்கு நலனிலிருந்து இன, மத அடையாளங்களின் பக்கம் நகர்ந்தது.
சம்பவத்தில் தொடர்புடைய இளைஞர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதையே சிலர் முன்னிறுத்தி, முழு முஸ்லிம் சமூகத்தின் மீதும் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கு ஒரு சில தமிழ் இளைஞர்கள் முற்பட்டனர். பின்னர் இஸ்லாம் மதத்தையும் அதன் அடையாளங்களையும் குறிவைத்து இழிவான கருத்துக்களும் பரப்பப்பட்டன. இதனை ஒரு சிலரே செய்தனர் என்பது கவனிப்பிற்குரியது.
நாயைத் தாக்கியது எப்படி ஒரு தனிமனிதத் தவறோ, அதேபோலவே இதனை இஸ்லாமிய மதத்தோடு சம்பந்தப்படுத்திப் பேசியதும் சில தனிமனிதர்களின் தவறே ஆகும். ஏனெனில், இதனைத் தமிழ்ச் சமூகம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை முஸ்லிம்கள் மறந்துவிடக் கூடாது.
ஒரு உயிரினத்தைத் தேவையின்றித் துன்புறுத்துவது எந்தச் சூழ்நிலையிலும் நியாயப்படுத்த முடியாத செயலாகும். இந்தப் பின்னணியில், இச்சம்பவம் தொடர்பில் குற்றச்சாட்டுக்கு உள்ளான இளைஞர் கைது செய்யப்பட்டதோடு, அவர் மன்னிப்பு கோரியதாகவும் தகவல்கள் வெளியாகின.
அவ்வளவிலேயே அந்த விடயத்தைப் பேசித் தீர்த்திருக்க வேண்டும். ஒளிப்படமாகச் சமூக வலைத்தளங்களில் பரப்ப வேண்டியதில்லை. சரி, அப்படிச் செய்தாலும், சட்டம் தனது பொறுப்பை நிறைவேற்றத் தொடங்கிய பிறகும் சமூக ஊடகங்களில் தொடர்ச்சியாக வெளியான தூண்டுதல் நிறைந்த கருத்துக்கள், இந்த விவகாரத்தை தேவையற்ற அளவுக்குப் பெரிதாக்கின.
எந்தவொரு சமூகத்திலும் தனிமனிதத் தவறுகள் நடப்பது இயல்பு. ஒரு தனிநபரின் வன்முறையையோ அல்லது முதிர்ச்சியற்ற நடத்தையையோ ஒரு குறிப்பிட்ட மதத்தின் மீதோ அல்லது ஒட்டுமொத்த சமூகத்தின் மீதோ சுமத்துவது முற்றிலும் தவறானது.
அந்த வகையில், இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இஸ்லாம் மதத்தையும், நபி முஹம்மது (ஸல்) அவர்களையும் இழிவுபடுத்தும் வகையில் வெளியான கருத்துக்கள் கண்டிக்கப்பட வேண்டியவையாகும்.
எந்த மதமும் தேவையற்ற கொடுமையை ஆதரிப்பதில்லை. இஸ்லாம் உட்பட உலகின் முக்கிய மதங்கள் அனைத்தும் உயிரினங்களிடம் இரக்கம் காட்டவும், அவற்றை அநியாயமாகத் துன்புறுத்த வேண்டாம் என்றும் போதிக்கின்றன. எனவே, ஒருவரின் தவறை ஒரு மதத்தின் போதனையாக மாற்றிப் பேசுவது அறியாமையையும் வெறுப்பையும் மட்டுமே வளர்க்கும்.
ஒரு மருத்துவர் தவறு செய்தால் மருத்துவத்துறையே குற்றவாளியாக மாறுவதில்லை; ஒரு ஆசிரியர் ஒழுக்கம் மீறினால் கல்வி அமைப்பே குற்றம் சாட்டப்படுவதில்லை. அதுபோல, ஒரு முஸ்லிம் இளைஞரின் தவறை முஸ்லிம் சமூகத்தின் பண்பாகச் சித்தரிப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.
ஒரு போதைப்பொருள் வியாபாரியின் செயலுக்காக அவனது மதம் குற்றக்கூண்டில் நிறுத்தப்படுவதில்லை; ஒரு பாலியல் குற்றவாளியின் இனம் அந்தச் சமூகத்தின் அடையாளமாக மாறுவதில்லை; அவ்வாறே, சமய முக்கியஸ்தர்கள் செய்யும் தனிப்பட்ட தவறுகளுக்காக ஆன்மீகக் கோட்பாடுகள் இழிவுபடுத்தப்படுவதில்லை.
விடுதலைப் புலிகள் அங்குமிங்கும் முஸ்லிம்களைக் கொன்றார்கள் என்பதற்காக அது தமிழ்ச் சமூகத்தின் தவறு என்று முஸ்லிம்கள் பார்ப்பதில்லை. அதேபோல் சஹ்ரான் என்ற பயங்கரவாதி முஸ்லிம் சமூகத்தில் பிறந்தவன் என்பதற்காக, அந்தக் குழு நடத்திய பயங்கரவாதத் தாக்குதலுக்கான பழியை முஸ்லிம் சமூகத்தின் மீது தமிழர்களோ கத்தோலிக்கர்களோ போடுவதில்லை.
இதனைப் புரிந்துகொள்ளாமல், ஒரு சாதாரண இளைஞனின் அறியாமையை முன்னிறுத்தி இஸ்லாமிய மதக்கோட்பாடுகளையும் இறைத்தூதரையும் அவமதிக்கும் வகையில் ஒரு சிலர் கருத்துக்களைப் பகிர்வது கண்டிக்கத்தக்கது.
அதேவேளை, இத்தகைய வன்மத்தைக் கக்குபவர்கள் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் பிரதிநிதிகள் அல்லர் என்பதையும் முஸ்லிம் சமூகம் உணர்ந்து கொள்ள வேண்டும். முதிர்ச்சியற்ற ஒரு சிலரின் கருத்துக்களுக்காகத் தமிழ் மக்களைப் பொதுப்படையாகக் குறை காண்பது நல்லதல்ல.
மறுபுறம், இவ்வாறான அவதூறுகளுக்குப் பதிலளிக்கும் நோக்கில் முஸ்லிம் சமூகத்தின் சில தரப்புகளிலும் உணர்ச்சிவசப்பட்ட பதில்கள் வெளியாகின. சமூகத்தின் கண்ணியத்தைப் பாதுகாப்பது இயல்பானதே. ஆனால் அதற்காக மேலும் கடுமையான மொழியைப் பயன்படுத்துவது பிரச்சினையைத் தீர்க்காது. மாறாக, அது சமூகங்களுக்கிடையிலான நம்பிக்கையை மேலும் சீர்குலைக்கும். பொறுப்பற்ற பதிவுகளுக்குப் பதிலாக பொறுப்புள்ள விளக்கங்களும் பக்குவமான அணுகுமுறைகளுமே அதிக பயனளிக்கும்.
இந்த விவகாரத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த பல அறிவுஜீவிகள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொறுப்புள்ள சமூக ஊடகப் பதிவாளர்கள் அமைதியையும் நிதானத்தையும் வலியுறுத்தினர். அவர்கள் முன்வைத்த கருத்துக்கள் சமூகப் பொறுப்புணர்வின் வெளிப்பாடாக அமைந்தன. உணர்ச்சிகளைத் தூண்டுவதற்குப் பதிலாக, புரிந்துணர்வை வளர்க்கும் குரல்களே இன்று நாட்டிற்கு மிகவும் தேவையானவை.
தமிழர்களும் முஸ்லிம்களும் பல நூற்றாண்டுகளாக ஒரே நாட்டில் வாழ்ந்து வரும் சமூகங்கள். அவர்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் வரலாற்றின் ஒரு பகுதியாக இருந்தாலும், ஒத்துழைப்பும் பரஸ்பர மரியாதையும் அதைவிட நீண்ட வரலாற்றைக் கொண்டவை.
எனவே, தமிழர்களும் முஸ்லிம்களும் காத்திரமாக விவாதிப்பதற்கு நிறைய விடயங்கள் உள்ளன. ஒரு நாயின் விவகாரத்தை விட அவை பல்லாயிரம் மடங்கு முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும். ஆனால், ஒரு நாயைச் சுற்றி நடந்த சம்பவம் நாடு முழுவதும் உணர்ச்சிகரமான விவாதமாக மாறியிருப்பது, நமது சமூகத்தின் முன்னுரிமைக்குரிய விடயங்கள் பற்றிச் சிந்திக்கத் தூண்டுகிறது.
உண்மையில், உயிரினங்களின் உரிமைகள் முக்கியமற்றவை என்று இதன் பொருள் அல்ல. உயிரினங்களுக்காகச் சண்டையிடுவதை விட, இன உறவு முக்கியம் என்ற யதார்த்தத்தை விளங்கிக்கொள்வது அவசியமாகும்.