கறுப்பு மணலின் கறுப்பாடுகள்

இயற்கை எமக்களித்த வளங்களை நாம் துஸ்பிரயோகம் செய்ய எப்பொழுது ஆரம்பித்தோமோ, அப்பொழுதில் இருந்தே, எமக்கு இன்னல் கொடுக்கத் தொடங்கியது. தாமே தமது கண்களைக் குத்திக்கொள்ளும் மூடர்களாக, மனித குலம் வெறும் பணத்துக்காக அனைத்தையும் இன்று இழந்து நிற்கின்றது.

எம்மை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ், வாழ்க்கையின் தத்துவத்தை எமக்கு உணர்த்திய பின்னரும், இதுவரை நாம் இன்னும் மாறாமல் இருக்கிறோம்; இனிமேலும் என்றும் நாம் மாறமாட்டோம் என்பதையே அண்மைய போக்குகள் நன்கு உணர்த்தி நிற்கின்றன.

அம்பாறை மாவட்டம், பொத்துவில் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட முருகந்தனை கடலை அண்டிய பகுதியில் சட்டத்துக்கு முரணாக, எந்தவோர் அனுமதியும் இன்றி, கரையோர பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரது தலைமையில் கனிய வள இல்மனைட் ஆராச்சியில் ஈடுபட்டுள்ளார்கள் என இப்பகுதிவாழ் மக்கள் விசனம் தெரிவித்து போராட்டங்களையும் மேற்கொண்டிருந்தார்கள்.

எனவே, அனுமதிகள் பெறப்படாமல் களவாக இடம் பெறும் இச்செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறும் எமது பகுதி சூறையாடப்படுவதை தடுத்து நிறுத்துமாறும் எமது பிரதேசத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இப்பகுதிவாழ் மக்கள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்துவருகின்றார்கள்.

திருக்கோவில் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படவுள்ள இல்மனைட் அகழ்வு காரணமாக பிரதேச மக்கள் பெரும் பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என்பது உலகளவில் நிருபிக்கப்பட்ட உண்மையாகும். பாலைவனமாகும் ஆபத்தில் இருந்து கிழக்கு மண்ணைப் பாதுகாத்து, இப்பிரச்சினைகளிலிருந்து விடுபட, இத்தகைய நடவடிக்கை​களை எதிர்த்து போராட பொதுமக்கள் ஒன்று சேரவேண்டும் என, பொது மக்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

திருக்கோவில், தம்பிலுவில், வினாயகபுரம், உமிரி பகுதியில் வானுயர வளர்ந்துள்ள தென்னை அனைத்தும் இத்தகைய அகழ்வு நடவடிக்கையால் படிப்படியாக அழிந்துவிடும்; பல நூற்றுக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் அழிந்துவிடும் ஆபத்து காத்திருக்கின்றது.

இல்மனைட் வழக்கமாக ‘நிர்வாணச் சுரங்க முறை’யில் எடுக்கப்படுகிறது. அதாவது புவிப் பரப்பின் மீதுள்ள அனைத்துத் தாவரங்களும் அழித்தொழிக்கப்பட்டு, பூமியை நிர்வாணமாக்கி, தாதுக்களைத் தோண்டியெடுக்கிறார்கள். மேல் மண்ணை அகற்றி வைத்துவிடுவார்கள். தாதுப்பொருள் அடங்கிய கீழ் மண் எவ்வளவு ஆழம்வரை கிடைக்கிறதோ அதனை எடுத்து முதல் கட்டச் சுத்திகரிப்புக்கு அனுப்புவார்கள்.

கிழக்கு மண்ணில் ஆறு மீற்றர் முதல் 20 மீற்றர் ஆழம் வரை தோண்டப்படும் எனத் தகவல்கள் கிடைத்துள்ளன. நமது அரசியல்வாதிகள், கட்டுப்பாட்டு அமைப்புகளின் பணப்பசியைப் பார்க்கும்போது, எவரும் எவ்வளவு ஆழம் அகழ்வு செய்யப்படுகின்றது என்பதை கண்டும் காணாமல் இருப்பார்ககள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது.

நிர்வாணச் சுரங்கம், உள்ளூர்ச் சுற்றுச்சூழல்மீது நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆழமாகத் தோண்டுவது நிலத்தடி நீர்வளத்தைப் பாதிக்காது என்றாலும், நிலத்தடியை ஒட்டிய ஆழம்குறைவான நீர்வளமும் ஓடைகளும் வடிகால்களும் குளங்களும் மறைந்துபோக நீர்வளம் குறைய ஆரம்பிக்கும்.

நிலத்தின் மீதுள்ள தாவரங்கள் அகற்றப்படும்போது, வெப்பம் நேரடியாகப் பூமியைத் தாக்கும். அருகாமைக் கடலிலிருந்து வரும் குளிர்ந்த காற்று வெப்பமடையும். இதன் காரணமாக உள்ளூர் மழையின் அளவும் தன்மையும் முறையும் மாற்றமடையும்.

அனைத்தையும்விட மிக முக்கியமானது, கடல் அருகாமையில் இருப்பதால் நிலத்தடியில் கடல் நீர் புகுவதாகும். இதனால் குடிப்பதற்கும் வாழ்வதற்குமான நீர் அரிய பொருளாகிவிடும். நிர்வாணச் சுரங்கத்தால் எழும் தூசு அருகாமைத் தாவரங்களில் படிந்து ஒளிச்சேர்க்கையைத் தடுத்து, இருக்கும் பசுமையையும் சாகடிக்கும்.

நண்டு இனம் முற்றாக அழிக்கப்படும். வினாயகபுரம் பகுதியில் கண்டல் தாவரங்கள் அழிவடையும். இதனால், இறால் வளம் முற்றாக அழியும். இதனை நம்பி தொழிலில் ஈடுபடும் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழப்பர்.

உலகில் பாதுகாக்கப்பட வேண்டிய இனமாக அறிவிக்கப்பட்ட கடலாமைகள் முட்டையிட்டு இனம்பெருக்கும் நம் அழகிய திருக்கோவில், கோமாரி கடற்கரைகளுக்கும் இதே நிலைமைதான் ஏற்படப்போகின்றது.

இயற்கையான அமைப்பை நாம் தொந்தரவு செய்யாத வரையில், கதிரியக்கத் தனிமங்களின் நிலைத்தன்மை பாதிக்கப்படாதவரையில் அவை அபாயகரமான கதிரியக்கத்தை வெளிப்படுத்துவதில்லை.

தோண்டி எடுத்து அவற்றைப் பிரித்தெடுத்துச் சுத்தம் செய்யும் போது, அவை கதிரியக்கத்தை வெளிப்படுத்துகின்றன. அதன் காரணமாகத் தொழிலாளர்களும் அருகாமை மக்களும் புற்று நோய், குறையுள்ள குழந்தைப் பிறப்புகளுக்கு ஆளாகிறார்கள். (கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் பரவலான ஆரோக்கியக் குறைவை ஏற்படுத்தியுள்ளது)

எவ்வளவு கஷ்டமான சூழ்நிலையிலும், ஒருவனை அவன் காலம் காலமாக வாழ்ந்த இடத்திலிருந்து அகதியாக அவனை இன்னுனோர் இடத்துக்கு துரத்துவது கொடுமையானது. ஆனால், அதைச் செய்வதற்கு தற்பொழுது அனைவரும் ஒன்று திரண்டிருக்கின்றனர். அவர்கள் அனைவரும் இந்தப் பகுதியை ஏதோ பாலைவனம் போல மாற்றப் போகிறார்களா?

இல்மனைட் ஆலையில் இருந்து வெளியேறும் இரும்பு குளோரைடு மற்றும் அமிலக் கழிவுகள் சுற்றியுள்ள நிலத்தையும், நிலத்தடி நீரையும் பாழ்படுத்த வாய்ப்பிருக்கிறது. ஆலையில் பிரித்தெடுக்கப்படும் ஜிர்க்கான் கனிமம் கதிரியக்கத் தன்மையைக் கொண்டிருப்பதால் ஆலையை சுற்றி 20 கிலோ மீ‌ற்றர் தூரத்திற்குள் வாழும் மக்களுக்கும், உயிரினங்களுக்கும் மரபணு நோய்களும், பல்வேறு வகைப் புற்றுநோய்களும் (தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, மணவாளக்குறிச்சியைச் சுற்றி வாழும் மக்களைப் போல) உருவாக வாய்ப்பிருக்கிறது.

கேரளாவில் சவரா என்னும் ஊரில் கேரளா மினரல் & மெட்டல் என்னும் நிறுவனம் இல்மனைட் ஆலையை நடத்தி வருகிறது. அந்த ஆலையிலிருந்து வெளியேறிய கழிவுகள் நிலத்தடி நீரை மாசுபடுத்திவிட்டன என்று உச்ச நீதி மன்றக் கண்காணிப்புக் குழு 2004இல் குற்றஞ்சாட்டியது.

2006 ஓகஸ்ட்டில் சீனாவின் ஜிங்சூ மாகாணத்தில் இல்மனைட் ஆலை நானி ஆற்றில் 3,000 தொன் சுத்திகரிக்கப்படாத கழிவை வெளியேற்றிய குற்றத்திற்காக மூடப்பட்டது. அந்தக் கழிவு ஆற்றைக் கொன்று போட்டது. ஆற்றங்கரையில் உள்ள ஊர்மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டனர்.

அவர்கள் போராடினார்கள்; தடுத்தார்கள். ஆனால், இங்கு, அரசியல் கட்சிகள் அனைத்தும் இந்த டைட்டானியத் தொழிற்சாலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விவரங்களைப் பார்க்கத் தவறுகின்றன.

இதில் முன்நிற்பவர்கள் அரசா, குறித்த நிறுவனமா என்பது முக்கியமல்ல. யார் தோண்டினாலும் இல்மனைட் 30 ஆண்டுகளில் தீர்ந்துபோகும். அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டவரும் உலகப் பணக்காரர்களில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துவிடுவார். அதே சமயம் திருக்கோவில், கோமாரி, வினாயகபுரம், தம்பிலுவில் பகுதி செழிப்பிழந்து, அழிந்து, மதிப்பிழந்து போயிருக்கும். ‘இன்றே செய் அதை நன்றே செய்; ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு; இல்லையேல் நம் அனைவருக்கும் சாவுதான்.