‘தீப்பொறி’

தமிழகத்திலிருந்து இலங்கை திரும்பிய எம். கே. அந்தனிசில் ‘தீப்பொறி’ ஆசிரியராகக் கனல்கக்கும் செய்திகள் – கட்டுரைகளை எழுதிவந்தார்.
அவரது அடுக்கு வசனச் செய்தித் தலைப்புகள் பலரின் கவனத்திற்குள்ளாகின.
.
தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளராகச் செயற்பட்ட காலத்தில் அங்கு ”பாதை தெரியுது பார்” என்ற திரைப்படத்திலும் அந்தனிசில் நடித்திருந்தார்.

இலங்கை வந்த அவர் அன்று ‘சீனச்சார்பு’ என்று அழைக்கப்பட்ட இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளராகச் செயற்பட்டார்.

கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் என். சண்முகதாசன் அட்டன் மாநகரில் பத்திரிகைக்கென ஓர் அச்சகத்தையும் உருவாக்க உதவினார்.

அக்காலம் மலையகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் ‘செங்கொடிச் சங்கம்’ – (தோட்டத் தொழிலாளர் சங்கம்) மிகவும் பலம் பெற்றிருந்தது.. !

வெளியூர்ப் பதிப்பு – மலையகப் பதிப்பு எனத் ”தீப்பொறி” வாரந்தோறும் வெளியாகியதுமுண்டு.

தனிப்பட்ட நபர்களைத் தாக்கிச் செய்திகள் – கட்டுரைகளையும் அந்தனிசில் வெளியிட்டு வந்தார்.

” பப்பா செல்வா விடாதே கப்சா”

”கன்னா.. பின்னா.. பொன்னா..”

”பொய்யிலே பிறந்து
பொய்யிலே வளர்ந்த
பொன்னன் கட்சி…”

”கல்லூரி அதிபர் கன்னிப் பெண்களுக்குக்
கடவுள் காட்டுகிறாராம்..”

”தொண்டமான் கும்பலுக்கு..
தொழிலாளி பணம் சம்பல்..!”

”செல்வநாயகத்தின் ஏடே
கொல்லைப்பக்கம் ஓடு.;!”

”நா வேண்டான் – நா வெந்தான் – நாய் வேந்தன் —————– நாவேந்தன்..”

இப்படி எத்தனையோ வசைச் சித்திரங்களை அவர் எழுதிப் பலரின் வெறுப்புக்கும் ஆளாகினார்.

பின்னர் அவரது தனிப்பட்ட நடவடிக்கைகளும் கம்யூனிஸ்ட் கட்சியினரை வெறுப்படைய வைத்ததாக தெரிகிறது.

அவர் மிகுந்த சாப்பாட்டுப் பிரியருங்கூட..
சிறிது காலத்தில் பத்திரிகைச் செய்தி காரணமாக அவர் நீதிமன்ற நடவடிக்கைக்குள்ளானார்.

ஒரு வருடத்திற்கு மேலான சிறைவாசங்கண்டார் எனத் தெரிகிறது. பத்திரிகையும் தடைக்குள்ளானது.

இந்த நீதிமன்ற நடவடிக்கைக்குப் பின்னணியில் இவரது எழுத்துக்களால் மிகுந்த கோபத்திற்குள்ளான தமிழ்க் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜீ. ஜீ. பொன்னம்பலம் இருந்திருக்கலாம் எனச் சொல்லப்பட்டதுண்டு..!

அன்று தமிழரசுக் கட்சியின் இளந்தலைவர்களில் ஒருவராகவும் இலக்கியப் பிரதிநிதியாகவும் மேடைப் பேச்சாளராகவும் விளங்கிய எமது மூத்த சகோதரர் நாவேந்தனையும் திட்டித் தீர்த்து அந்தனிசில் தீப்பொறியில் இரண்டு பக்கம் நிறையக் கட்டுரை வரைந்திருந்தார்.

அவ்வேளை நாவேந்தன் தமிழரசுக் கட்சிக்கு ஆதரவாக வெளியிட்டு வந்த ”சங்கப்பலகை” என்ற பத்திரிகையில் ”எமகாதகன்” என்ற நாடகத்தைத் தொடராக எழுதி வந்தார்.

அதில் அந்தனிசில் உட்படத் தமது அரசியல் – இலக்கிய எதிர்த்தரப்பினைச் சாடி வந்தார்.

பின்னர் ”கலைவாணி” அதிபர் கு. வி. தம்பித்துரைக்கு (புங்குடுதீவு கிராமசபைத் தலைவராகவும் விளங்கியவர்) புங்குடுதீவில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பேச்சாளராகக் கலந்துகொண்ட அந்தனிசிலும் நாவேந்தனும் சமரசமாகினர்.

அதன் பின்னர் பத்திரிகைத் தாக்குதலை இருவரும் பரஸ்பரம் நிறுத்திக்கொண்டனர்.

சிறையிலிருந்து திரும்பிய அந்தனிசிலை அவரது நடவடிக்கைகளில் வெறுப்படைந்திருந்த கம்யூனிஸ்ட் கட்சியினர் அரவணைத்துக்கொள்ளவில்லை.

அந்தனிசில் ”ஒரு தீப்பொறி” என்ற பெயரில் பத்திரிகையை ஒரு சில இதழ்கள் வெளிக்கொணர்ந்தார்.

பின்னர் தமிழரசுக் கட்சிக்கு ஆதரவாக ”பல்கலை” என்ற பத்திரிகையை ஒரு சில இதழ்கள் வெளியிட்டார்.

இறுதிக் காலத்தில் அவரில் பல மாற்றங்கள்..!
கொழும்பில் தங்கியிருந்து நிறைய வாசித்துப் பழந்தமிழ் – வரலாற்று ஆய்வுக் கட்டுரைகளைப் பத்திரிகைகளுக்கு எழுதிவந்தார்.

தினகரன் பத்திரிகையில் தொடர்ந்து எழுதினார்.
தமது பெயரையும் ம. க. அந்தனிசில் எனத் தமிழ் ஒலிக்கச் செய்தார்.

வாட்ட சாட்டமான உடல்வாகு கொண்ட அந்தனிசில் தமிழகத்தில் வாழ்ந்த காலத்தில் குத்துச் சண்டையும் பயின்றிருந்தார்.

அன்று யாழ்ப்பாணத்தில் கை மடிக்கப்பட்ட ‘சேட்’ அணிந்தபடி பலத்த சத்தம் எழுப்பும் பெரிய ‘கான்ட் கியர் மோட்டார் சைக்கிளில்’ அவர் செல்வதைப் பலரும் நின்று வேடிக்கை பார்ப்பதுண்டு.

இறுதியாகக் கொழும்பில் எனது இலக்கிய – மருத்துவ நண்பர் ஒருவரின் இருப்பிடத்தில் அவரோடு அரசியல் – இலக்கிய – வரலாற்று ஆய்வுகள் குறித்து மகிழ்வுடனிருந்து உரையாடியமை இன்றும் நினைவில் நிற்கிறது..!

இறுதிக் காலத்தில் நோயுற்று மட்டக்களப்பில் 2005 – ம் ஆண்டு காலமானார் எனத் தெரியவருகிறது.

– வி. ரி. இளங்கோவன்.