இதனால் மிகுந்த மன உளைச்சலுக்குள்ளான பாதிக்கப்பட்ட மாணவி என்னிடம் தனிப்பட்ட ரீதியில் உதவி கோரியதன் அடிப்படையில் “ அலைகள்” ஊடகத்துடன் தொடர்பு ஏற்படுத்தி உதவி கோரப்பட்டது.
அலைகள் ஊடகத்தின் சார்பாக பேசக் கூடிய மதிப்பிற்குரிய திருமிகு அருள்க்குமார் அவர்களால் நேர்காணல் வழங்குவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண் தனது தரப்பு நியாயங்களையும் உண்மைகளையும் மக்களிடம் தெரிவிப்பது தனது தார்மீக கடமை என கருதியதால் இந்த முயற்சி மேற்க் கொள்ளப்பட்டது.நேர்காணலுக்கான நேரமும் வழங்கப்பட்டிருந்தது.
ஏதோ தனிப்பட்ட காரணங்களால் நேர்காணல் தள்ளிப் போவதால் முதலில் கூறப்பட்டது. மறுநாள் தொடர்புக்கு வந்த திருமிகு அருள்க்குமார் அவர்கள் நேர்காணலை உடனடியாக செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதற்கு அவர் கூறிய காரணம் பேராசிரியரின் மனைவி தன்னை தொடர்பு கொண்டு ஒன்றரை மணிநேரம் கதைத்து ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த நேர்காணலை எடுக்க வேண்டாம் என்று கோரிக்கை வைத்ததாக கூறினார்.
இந்த நேர்காணல் தொடர்பில் மிகவும் நம்பிக்கைக்குரிய ஒரு சிலருக்கு மட்டுமே தகவல்கள் தெரியும். அப்படி தெரிந்தவர்களில் சிலருக்கு எந்த ஊடகம் நேர்காணல் செய்யப் போகிறார்கள் என்பதே தெரிவிக்கப்படவில்லை. அப்படியிருக்க இந்த தகவல் எப்படி பேராசிரியரிடம் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் ஒரு தனிப்பட்ட இரு நபர்களுக்கு இடையேயான ஒரு தனிப்பட்ட விவகாரம் இல்லை. ஒரு தோல்வியடைந்த பல்கலைக்கழகத்தின் நிர்வாக சீர்கேட்டால் ஏற்பட்டுள்ள பாரிய பிரச்சினையாகும்.
பல்கலைக்கழக்திற்கு கல்வி கற்க வரும் மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பை யாழ்ப்பாண பல்கலைக்கழகம் வழங்கத் தவறியது மட்டுமல்லாமல் அதனை கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக மூடி மறைக்க முயற்சி செய்துள்ளது. குறித்த மாணவியின் விடாமுயற்சியும் துணிவும் தான் இந்த பாலியல் சுரண்டல் விவகாரம் அம்பலத்திற்கு வந்துள்ளது.
இது தொடர்பான விசாரணைகள் காலம் தாழ்த்தி ஆரம்பிக்கப்பட்டு நடந்து வரும் சூழலில் ஓடியோக்கள் கசிய விடப்பட்டுள்ளன. இதன் மூலம் பாதிக்கப்பட்ட பெண்ணை தனது நீதி கோரிய பயணத்தில் இருந்து விலக்குவது கூட ஒரு நோக்கமாக இருக்கும் என்று அப்பெண் சந்தேகிக்கிறார்.
இந்தச்சூழ்நிலையில் நேர்காணலை ஏற்பாடு செய்தவரை தொடர்பு கொண்டு பேராசிரியரின் மனைவி நேர்காணலை தடுத்தது சந்தேகத்தை எழுப்புகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணே இந்த விவகாரத்தில் சாட்சியாக இருப்பதால் இது சாட்சியை பயமுறுத்தும் செயற்பாடாகவும் கருத முடியும். ஆகவே நேர்காணல் தடுக்கப்பட்டதால் முகநூலினூடாக இந்த விவகாரத்தை மக்கள் மன்றுக்கு கொண்டு வந்துள்ளோம்.
பாதிக்கப்பட்ட இளம்பெண் கிட்டத்தட்ட கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தனக்கு யாழ்ப்பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரால் இளைக்கப்பட்ட பாலியல் சுரண்டல் குற்றங்களுக்காக நீதி கேட்டு போராடி வருகிறார். இந்த விவகாரம் ஒன்றும் தூசு தட்டப்பட்ட பழைய விவகாரம் இல்லை.
குறித்த மாணவி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவில் ஊடக கற்கைத் துறையில் சிறப்பு பட்டம் பெற்று 2020 இலிருந்து 2021 வரை அதேபிரிவில் Demonstrator ஆக பணியாற்றியுள்ளார். அதனைத்து தொடர்ந்து 2024 ஓகஸ்ட் மாதம் வரை யாழ்ப்பல்கலைக்கழகத்தில் ஏதோவொரு பொறுப்பு கொடுத்து ஊடகக் கற்கைத் துறையிலேயே பணியாற்ற வைக்கப்பட்டுள்ளார்.
இக்காலப்பகுதியில் மாணிவி மீது பாலியல் சுரண்டலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படும் பேராசிரியரின் ஆலோசனையின் பேரில் அவரது வழிநடத்தலில் தனது மேற்படிப்பையும் கண்டி பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டிருந்திருந்தார்.
இந்தப்பின்னணியில் குறித்த மாணவியின் நலன் விரும்பி என்ற பெயரில் மாணவியின் சகல விடயங்களையும் பேராசிரியரே திட்டமிட்டு ஆலோசனைகள் வழங்கி வழிநடத்தி வந்துள்ளார்.
தந்தையை இழந்த ஒரு பெண்ணிடம் தான் அதீத அக்கறையும் வாஞ்சையும் காட்டுவதாக பேராசிரியர் காட்டிக் கொண்டார். அதற்கான ஆதாரங்கள் தாராளமாக உள்ளன.
ஒரு கட்டத்தில் பேராசிரியரின் நடத்தையில் பேச்சில் வித்தியாசத்தை உணர்ந்து கொண்ட குறித்த மாணவி பதறிவிட்டார். அஞ்சி நடுங்கியுள்ளார். இது தொடர்பில் அவர் தனது பல்கலைக்கழக நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். “Sir வித்தியாசமாக கதைக்கிறார். மாற்றம் தெரிகிறது “என புலம்பியுள்ளார்.
பேராசிரியரின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றத்தால் மிகவும் மன உளைச்சலுக்குள்ளான பாதிக்கப்பட்ட மாணவி அவர் தன்னுடன் மேற்கொண்ட உரையாடல்களை பதிவு செய்து வைத்துக் கொண்டார். ஊடகக்கற்கை துறையில் கல்வி பயின்று பட்டம் பெற்று அத்துறையில் பணியாற்றும் பெண் ஒருவர் தனது பாதுகாப்பு கருதி சில உரையாடல்களை பதிவு செய்து வைத்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை.
ஊடகக் கற்கை துறை பேராசிரியராக இருப்பவருக்கு தனது அந்தரங்க எல்லை மீறிய உரையாடல்கள் ஒரு ஊடகவியலாளராக பட்டம் பெற்ற பெண்ணால் பதிவு செய்யப்பட சாத்தியம் இருக்கும் என்ற தூரநோக்கற்ற அறிவுச் சிந்தனை இல்லாமையால் கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்.
ஒரு குடும்பத் தலைவர், தந்தை மற்றும் சமூகத்தில் நற்பெயர் சம்பாதித்த ஒருவருக்கு தன்னை நம்பி பழகும் பெண் மீது தன்னுடைய அதிகாரத்தை பிரயோகிப்பது தவறு என்று தெரியாதிருக்க முடியாது. பாதிக்கப்பட்ட மாணவி ஆரம்பத்தில் பயந்த போதும் பேராசிரியர் தனது சகல வித அழுத்தங்களையும் பிரயோகித்து மாணவியை தன் வழிக்கு கொண்டு வர செய்த பிரயத்தனங்கள் எல்லாம் ஆதாரங்களுடன் உள்ளன.
மாணவியை தான் காதலிப்பதாகவும் அவரை தான் மனைவியாகவே கருதுவதாகவும் தங்களுடைய உறவு தெய்வ சங்கல்ப்பம் என்றும் பசப்பியுள்ளார்.
அந்தப் பெண் இதனை நம்பத் தொடங்க முன்னரே அவர் கேட்டுள்ளார் “உங்களுக்கு நல்ல அன்பான மனைவி மற்றும் பிள்ளைகள் நல்ல அழகான குடும்பம் உள்ளது. பிறகு ஏன் இப்படி என்றும் “கேள்வி எழுப்பியுள்ளார். பேராசிரியர் தன்னோடு ஏற்படுத்திக் கொள்ள விரும்பும் உறவு “சோறு சாப்பிட்ட வீட்டுக்கு செய்யும் நம்பிக்கை துரோகமாகாத?”என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கும் பேராசிரியர் இது துரோகம் இல்லை. அன்பு பகிரப்படுகிறது என்று கதையளந்துள்ளார். தன்னுடைய வீட்டுக்கும் அழைத்து குடும்பத்துடன் பழக விட்டுள்ளார். கோயில் பூஜைக்கு குடும்பத்துடன் தன்னுடைய காரில் அழைத்துச் சென்று வந்து உள்ளார். நீயும் குடும்பத்தில் ஒருவர் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளார்.
ஒரு வழியாக மாணவியின் மனதில் “ நம்பிக்கைக்குரியவர் “இடத்தைப் பிடித்துக் கொண்டார்.அதேநேரம் தொடர்ந்து அவர் பாலியல் ரீதியாக மாணவியை ஒத்துழைக்கும் படி அழுத்தம் கொடுத்து வந்துள்ளார். இப்படியான உறவுகள் இரகசியமாக இருக்க வேண்டும் என்று வெகு தந்திரமாக மாணவிக்கு பேராசிரியர் புரிய வைக்கும் குரல்ப் பதிவு மிகுந்த அதிர்வலையை ஏற்படுத்துகிறது.
எவ்வளவு இலாவகமாக ஒரு பாலியல் சுரண்டல் இடம் பெற்றிருக்கிறது என்பதை கட்டியம் கூறுகிறது. இந்நிலையில் பாரம்பரியமான குடும்ப பின்னணியில் வந்த அந்த பெண் தாலி மற்றும் சட்டப்படியான திருமண உறவினை வலியுறுத்துகிறார் .
அதற்கும் பல்வேறு பொய் வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கான ஆதாரங்களும் இருப்பதாகவும் அப் பெண் . கூறுகிறார்.ஒரு கட்டத்தில் இந்த விவகாரம் யாழ்ப்பல்கலைக்கழக ஊடக கற்கை துறையில் அரசல் புரசலாக பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் சுதாரித்துக் கொண்ட பேராசிரியர் அவருக்கு கீழ் மாணவியாகவும் பல்கலைக்கழக ஊழியராகவும் இருந்த பெண்ணை அச்சுறுத்துகிறார். விவகாரம் கொஞ்சம் பெரிதாக பேராசிரியர் மாணவி மீதே பழியை திருப்பி விட்டுள்ளார். மற்றவர்கள் முன்னிலையில் அவரை அவமரியாதை செய்துள்ளார்.
இதனால் குழப்பமும் மனவிரக்தியும் அடைந்த பாதிக்கப்பட்ட பெண் மேற்படிப் இந்த விவகாரத்தை முதலில் தன்னுடைய சக பெண் விரிவுரையாளர்களிடமே கூறி ஆலோசனை கேட்டுள்ளார். அவர்களும் இந்த விவகாரத்தை மூடி மறைக்க முற்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணிடம் மேலதிகமாக பயமுறுத்தும் கதைகள் கூறி இதுவெல்லாம் இங்கு சாதாரணமாக நடப்பது . பெரிய இடங்களை பற்றி முறைப்பாடு செய்யக் கூடாது. அவர்கள் உன்னை பின் தொடர்வார்கள். அவர்களால் எதுவும் செய்ய முடியும் என்று முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயன்றுள்ளனர்.
இங்கே அவர்கள் என்பது பேராசிரியரும் அவரோடு சம்மந்தப்பட்ட நிர்வாகமும் என்பதாக பொருள்படும். பாதிக்கப்பட்ட பெண் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை பல்கலைக்கழகத்திற்கு வெளியில் முறையிட சென்றது முதலில் பிரபல தமிழ்த் தேசிய “என்ஜியோ ( NGO)சட்டத்தரணி” என்று கருதப்படுகிற சட்டத்தரணியிடமேயாகும்.
அவர் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் அறம் தொடர்பில் வகுப்பெடுத்து விட்டு வழக்கை எடுக்காது நழுவி விட்டார். அறம் பேசிய சட்டத்தரணிக்கு தொழில் அறம் தெரியாதோ என்னும் படியாக பாதிப்பை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்படும் பேராசிரியரின் வக்காலத்தாகியுள்ளார் என்று பேராசிரியரின் மனைவி தற்போது கூறி வருகிறார்.
இரண்டாவதாக தமிழ்த்தேசிய மூத்த அரசியல் வாதியின் உளவள ஆலோசனைக்கு சென்றுள்ளார். குறித்த தமிழ்த் தேசிய அரசியல் வாதி வெளிநாட்டிலும் வாழ்ந்துள்ளார். இலங்கை தேசிய இனப்பிரச்சினையின் முக்கிய கட்டங்களான சமாதானப் பேச்சு வார்த்தைகள் மற்றும் இறுதிப் போரின் வெள்ளைக் கோடியோடு இராணுவத்திடம் வரும் திட்டத்திலும் முக்கிய பங்காற்றியதாக கூறப்படுகிறது ( சம்பந்தப்பட்டவர் தான் இத்தகவலை உறுதிப்படுத்த வேண்டும்)
அந்தப் தமிழ்த் தேசிய போர்வையில் உள்ள பிரபலம் “சேற்றில் காலை மிதித்தால் கழுவி விட்டு செல்வது போல் மறந்து விடுங்கள்” என்று அவர் ஆலோசனை கூறியுள்ளார்.மேலும் சம்பந்தப்பட்ட பேராசிரியருடன் தான் மிகுந்த நட்பில் இருப்பதால் இந்த விவகாரத்தை பேராசிரியர் காதில் போடுவதாகவும் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்களித்துள்ளார்.
பாலியல் சுரண்டல் குற்றத்தை படித்த யாழ்ப்பாண சமூகம் கையாண்ட விதம் இப்படியாக இருந்தது. பாதிக்கப்பட்ட பெண் சரி விடயத்தை தமிழ்த்தேசியத்தின் மீது விமர்சனம் வைக்கின்ற யாழ் பல்கலைகழக விரிவுரையாளர் ஒருவர் காதுக்கும் கொண்டு சென்றுள்ளார். அங்கும் ஏமாற்றம் தான் மிஞ்சியது.
பாதிக்கப்பட்ட பெண் மீண்டும் யாழ்ப்பாண முன்னாள் பல்கலைக்கழக உப வேந்தரிடமும் , யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திடமும் முறைப்பாடு செய்தார். விவகாரம் கிடப்பில் போடப்பட்டு மூடி மறைக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட பெண் தொடர்ச்சியாக தனக்கு இழைக்கப்பட்ட பாலியல் சுரண்டலுக்காக போராட பேராசிரியர் பொலிஸ்சில் முறையிட்டார். பொலிஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு அங்கு வைத்து மாணவியும் குடும்பத்தினரும் விவகாரத்தை பெரிதாக்காமல் கை விட வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கப்பட்டது.
குடும்பத்தினரது கோபத்திற்குள்ளான பாதிக்கப்பட்ட பெண் ஒரு கட்டத்தில் குடும்பத்தினர் ஆதரவை இழந்தார்.ஓன்றாக படித்த சக பல்கலைக்கழக மாணவ மற்றும் மாணவிகள் அதாவது நண்பர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை புறக்கணித்தார்கள். . கேலி பேசினர். இவர்கள் வேறு யாரும் அல்ல ஊடகத் துறையில் அதே பேராசிரியரிடம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கற்றவர்கள்.அதில் சிலர் பல்வேறு ஊடகங்களிலும் பணியாற்றிக் கொண்டும் இருப்பவர்கள்.
தங்களுடன் படித்த நண்பிக்கு நடந்த பாலியல் சுரண்டலுக்காக குரல் கொடுக்காத பேராசிரியரின் மாணவர்கள். ஊடக தர்மத்தை பற்றி கிஞ்சிதமும் அறிவற்றவர்கள். அவர்கள் ஏன் ஊடக கற்கை நெறியை பயின்றார்கள் என்றே கேள்வி எழுகிறது. அதிகாரத்தால் ஒடுக்கப்படும் குரலற்றவற்றர்களின் குரலாக இருக்க வேண்டியவர்கள் ஒடுக்குபவர்கள் பக்கம் நின்றார்கள்.
எல்லா இடமும் ஓடிய பாதிக்கப்பட்ட பெண் இறுதியில் தனக்கு நன்கு அறிகுமான யாழ் நீதவான் மற்றும் நீதிபதியாக கடமையாற்றிய பெண் நீதிபதியிடமும் ஓடினார். தன்னிடம் உள்ள குரல்ப்பதிவு ஆதாரங்களையையும் சமர்ப்பித்து பாதுகாக்கும்படியும் தனக்கு உதவும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார்.அந்த பெண் நீதிபதி ஆதாரங்களை மடிக்கணணியில் சேமித்துக் கொண்டு உதவுவதாக வாக்களித்தார்.
பின்னர் அந்த ஆதாரங்கள் அழிந்து விட்டன என்று கையை விரித்துள்ளார். அத்தோடு நிக்காமல் அந்த பெண் நீதிபதி பொலிஸ் நிலையத்திற்கு அழைப்பு எடுத்து குறித்த பெண் உளநலன் பாதிக்கப்பட்டவர் . தனக்கும் இந்த விவகாரத்திற்கும் சம்பந்தம் இல்லை என்றும் கூறியுள்ளார். இது யாழ் பெண் நீதிபதி நீதியை நிலைநாட்டிய விதமாகும்.
இறுதியில் பாதிக்கப்பட்ட பெண் சென்ற இடம் எல்லா இடத்திலும் உதவி கிடைக்காமல் தனக்கு அநீதி இழைத்த பேராசிரியரின் வீட்டிற்கு சென்றுள்ளார். பேராசிரியர் வீட்டில் அவரது மனைவியும் அவரும் அந்தப் பெண்ணை கைகளை முறுக்கி முரட்டுத்தனமாக கையாண்டதோடு மிரட்டப்பட்டுள்ளார். அவதூறாக திட்டியுள்ளனர். பொலிஸார் வர வழைக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
தற்சமயம் இந்த விவகாரம் மனித உரிமைகள் ஆணைக்குழு உட்பட உரிய இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மானியங்கள் ஆணைக்குழுவின் பரிந்துரையில் யாழ்ப்பல்கலைக்கழகம் ஆமை வேகத்தில் ஒரு தனிநபர் விசாரணையை மாணவியிடம் மேற் கொண்டுள்ளது.
ஆனால் பேராசிரியர் தொடர்ந்து எந்த விதமான குற்ற உணர்ச்சியும் இன்றி யாழ்ப் பல்கலைகழகத்தில் பணியாற்றுகிறார். போதாக்குறைக்கு பேராசிரியர் மாணவியின் உரையாடல் பதிவும் இணையத்தில் கசிய வைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவி மீது பல்வேறு அவதூறுகள் பரப்படுகின்றன. அவருடைய உளநலம் தொடர்பில் வதந்திகள் பரப்ப படுகின்றன.
பேராசிரியரின் மனைவி “ அலைகள்” ஊடகத்தை தொடர்பு கொண்டு மாணவி மீது அவதூறு கூறியுள்ளார். உண்மைக்கு புறம்பாக என் மீதும் குற்றச்சாட்டை வைத்துள்ளார். தமிழ்த் தேசியத்திற்கு தன்னுடைய கணவர் ஆற்றிய பங்களிப்பை மழுங்கடிக்கவே இந்த விவகாரம் வெளி வந்துள்ளதாக கூறியுள்ளார்.
ஒரு தனிப்பட்ட பேராசிரியர் எதிர் கொள்ளும் பாலியல் குற்றச்சாட்டுக்கும் தமிழ்த் தேசியத்திற்கும் என்ன தொடர்பு? என்ற கேள்வி எழுகிறது. மொட்டம் தலைக்கும் முழங்காலுக்கும் ஏன் முடிச்சு போடப்படுகிறது.
தமிழ்த் தேசியத்திற்காக இன விடுதலைக்காக தமது இன்னுயிர்களை கொடுத்த மாவீரர்கள் , போராளிகளின் மற்றும் மக்களின் தியாகத்தை பாலியல் சுரண்டலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படும் ஒரு பேராசிரியரை பாதுகாக்க ஏன் ஆயுதமாக எடுக்கப்படுகிறது.
உன்னதமான தியாகங்களால் கட்டப்பட்ட தமிழ்த் தேசிய இனத்தின் சொத்தான சித்தாந்ததை ஒரு கேவலமான விடயத்திற்கு போர்வையாக போடுவது ஏற்புடையதல்ல. பேராசிரியரின் மனைவியும் மற்றும் யாழ்ப்பல்கலைக்கழகமும் தமிழ்த் தேசியத்தை தமது சுயநலத்திற்கு பயன்படுத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
பேராசிரியர் மனைவி பாதிக்கப்பட்ட பெண் சார்பாக கொடுக்கப்பட இருந்த நேர்காணலை சிறிது காலம் தள்ளிப் போடும்படி அலைகள் ஊடகத்திற்கு கடும் அழுத்தம் கொடுத்துள்ளார். பேராசிரியர் மனைவி நடந்து கொண்ட விதம் பாதிக்கப்பட்ட பெண் பொதுவெளியில் தன்னுடைய பக்கத்து நியாயத்தை வெளிக் கொண்டு வரும் அடிப்படை மனித உரிமையான கருத்துச் சுதந்திரத்தின் மீதான மோசமான தாக்குதலேயாகும்.பாதிக்கப்பட்ட பெண்ணின் குரலை நசுக்க உதவி கேட்ட பாதிப்பை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்படும் பேராசிரியரின் மனைவிக்கு அலைகள் ஊடகம் கால அவகாசம் வழங்கியுள்ளது.
“அலைகள் “ யுரியூப் சனலின் இத்தகைய செயல் அவர்களது தமிழ்த் தேசிய உணர்வு மற்றும் நடுநிலமைத் தன்மை இரண்டிலுமான முரணான தன்மையையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இவை எல்லாம் ஒரு புறமிருக்க குற்றம் சாட்டப்படும் பேராசிரியரின் சட்டத்தரணியின் என்ஜியோவாக கருதப்படும் “ அடையாளம்” அமைப்பினரும் இந்த விடயத்தில் பேராசிரியரை பாதுகாக்கும் நடவடிக்கையை மேற் கொண்ட கைங்கரியமும் நடந்தேறியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாதுகாப்பான தங்குமிடமும் வேலையும் பெற்றுத் தருவதாக மறைமுக பேரமும் பேசப்பட்டதுமேலும் கடந்த இரண்டு நாட்களாக யாழ்ப்பல்கலைக்கழக ஊடக கற்கை மாணவர்கள் ஐவர் ஒன்றாக குழுவாக வட்ஸ்அப் அழைப்பை ஏற்படுத்தி பாதிக்கப்பட்ட பெண்ணான தமது முன்னாள் நண்பியோடு நயமாகவும் நேரடியாகவும் உரையாடி வருகின்றனர்.
மூன்று வருடங்களாக காணாமல் போயிருந்த நட்பு மீண்டும் புதுப்பிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பெண் மீது மறைமுக அழுத்த த்தைக் கொடுக்கின்றனர். பேராசிரியரால் தனக்கு நிகழ்த்தப்பட்ட அநீதிக்கு எதிராக போராடி வருபவரை சோர்வைடையச் செய்யும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.
“ உனக்கும் ஒரு வாழ்க்கை இருக்கு தானே”, “ உன் முன்னால் கடவுள் வந்து நின்றால் என்ன வரம் கேட்பாய்” என பல்வேறு அப்பத்தமான கேள்விகளை கேட்டு mobbing செய்துள்ளனர்.இத்தகைய நடவடிக்கைகள் இனிவரும் காலத்தில் செய்யப்படின் சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்புக் கூற வேண்டி வரும். இத்தகைய வட்ஸ்அப் தொலைபேசி அழைப்புக்கள் பேராசிரியர் தரப்பால் தூண்டி விடப்பட்டு செய்யப்படுகிறதா? அல்லது அவர்களாகவே தன்னிச்சையாக செய்கிறார்களா? என்பதையும் ஆராய வேண்டியுள்ளது.
உண்மையாகவே வட்ஸ்அப்பில் வந்து பாதிக்கப்பட்ட பெண்ணோடு உரையாடும் யாழ்ப்பல்கலைக்கழக மாணவர்கள் பொதுவெளியில் வந்து குரல் கொடுத்தால் அவர்கள் ஊடகத்துறையில் படித்து பட்டம் பெற்றதற்கு பலனாக இருக்கும்.
யாழ்ப்பாண சமூகம் நீண்ட விடுதலைப் போரில் இருந்தும் பெண்கள் விடுதலை மற்றும் உரிமைகள் தொடர்பில் எதனையும் கற்றுக் கொள்ளவில்லை என்பதனை தொடர்ச்சியாக நிரூபித்து வருகிறது.
2009 முன்னர் இருந்த நிலமையில் கூட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இடம்பெற்று இருந்தாலும் அவற்றை சமூகம் எதிர் கொண்ட விதம் அக்குற்றங்களை கணிசமாக குறைத்திருந்தது. அவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபட ஒரு வித அச்சம் இருந்தது.
2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் பெண்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் சம பங்கு வகித்திருந்தமையும் அதற்கு ஒரு காரணமாக இருந்தது.2009 ஆம் ஆண்டுக்கு பின்னரான சூழமைவில் வடக்கு கிழக்கில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருக்கின்றன. அதில் பெண்களுக்கு மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பெருகியிருக்கின்றன.
பெரும்பாலான சம்பவங்களில் பெண்கள் வந்து தமக்கு நடந்த அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க அஞ்சுகின்றனர். அப்படியிருந்தும் துணிவாக வந்து குரல் கொடுக்கும் பெண்களை மனநலம் குன்றியவர்கள், ஒழுக்கம் தவறியவர்கள் என சமூக அவதூறை பரப்பி அவர்களை பயமுறுத்தி பின்வாங்க வைக்க அனைத்து வளங்களையும் பயன்படுத்துகிறார்கள்.
இந்தக் குறிப்பிட்ட பேராசிரியர் தன் மீது சுமத்தப்பட்ட பாலியல் சுரண்டல் குற்றச் சாட்டை நேர்மையாக எதிர்கொள்ளாமல் தனது மனைவியை கொண்டு வந்து முன்னிறுத்தி தப்பிக்க பார்க்கிறார். தனது அதிகாரம், செல்வாக்கு மற்றும் பணம் அனைத்தையும் பயன்படுத்தி பல மட்டங்களிலும் பாதிக்கப்பட்ட பெண்ணை முடக்க முயலுகிறார்.
குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியரின் மனைவி ஒரு அரச ஊழியராக இருப்பவர். சுயமாக சிந்திக் கூடிய கல்வியறிவு பெற்றவர். குடும்ப கௌரவம் கருதியோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ பாதிக்கப்பட்ட பெண்ணை தனக்கு எதிராளியாக கருதிச் செயற்படுவது ஏற்புடையதல்ல. பேராசிரியர் ஒரு பெண்ணுக்கு எதிராக இன்னொரு பெண்ணை நிறுத்தும் பாரம்பரிய ஆண்மையவாத தந்திரோபாயத்தை தான் கையாண்டுள்ளார்.
இப்படியான காலத்திற்கு ஒவ்வாத கோமாளித்தனங்களுக்கு ஆதரவான கருத்துக்களையும் சமூக வலைத்தளங்களில் காணக் கூடியதாக உள்ளது. திருமணமான ஆண் என்று தெரிந்து ஏன் நீ அவருடன் கதைத்தாய்? நீ பல்கலைக்கழகத்தில் படித்தனி தானே என்று பல கேள்விகளை பாதிக்கப்பட்ட பெண்ணை நோக்கி வைக்கின்றனர்.
அதேநேரம் குற்றம்சாட்டப்படும் பேராசிரியர் தான் திருமணமானவர் தானே என்பதும், அவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பொறுப்பான பதவியில் இருந்தவர் என்றோ பிரக்ஞை இல்லாமல் நடந்து கொண்டதை நியாயப்படுத்த முடியாது. அவரிடமும் அதே கேள்விகள் கேட்கப்பட வேண்டும். அதிகாரத்தில் இருப்பவர்களால் மேற்கொள்ளப்படும் பாலியல் சுரண்டல்களை பல சந்தர்ப்பங்களில் அதிகாரம் குறைந்தவர்கள்பொறுத்து போவார்கள்.
ஆனால் இந்த விடயத்தில் பாதிக்கப்பட்ட பெண் தனது எம்எஸ்சி மேற்படிப்பையையும் பிரகாசமான எதிர்காலத்தையையும் பணயம் வைத்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம் பெற்ற பாலியல் சுரண்டல் விவகாரத்தை வெளிக் கொணர்ந்துள்ளார்.
ஒரு உயர்கல்வி நிறுவமான யாழ்ப்பல்கலைக்கழகத்தில் குறிப்பாக கலைப்பீடத்தில் இத்தகைய குற்றச் சாட்டுகள் நீண்டகாலமாக இருந்து வருகின்றன. எந்தவொரு பாதிக்கப்பட்ட பெண்ணும் துணிவோடு இந்த விடயத்தை வெளிக் கொணரவில்லை. அப்படி எடுக்கப்பட்ட முயற்சிகளும் “ போலித் தமிழ்த்தேசிய முலாம்” பூசி மறைக்கப்பட முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
ஒரு நாகரீகம் அடைந்த சமூகம் யாதெனில் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் எதிரான குற்றங்களை மூடி மறைக்காது அவற்றை தடுப்பதை நோக்காக கொண்டு செயற்படும். பாதிக்கப்பட்ட பெண்ணின் பொறுப்புக் கூறலில் குற்றத்தைச் சுமத்தி விட்டு பாதிப்பை ஏற்படுத்திய ஆண்களை பாதுகாப்பதில் இறங்க கூடாது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர் தனது தனிப்பட்ட தவறான நடத்தைக்கு தமிழ்த் தேசிய சாயம் பூசி அரசியல்மயப்படுத்த முயல்வது அவர் தனது தவறை மறைமுகமாக ஒத்துக் கொள்வதாக உள்ளது. இந்த விவகாரத்தில் சதிக்கோட்பாட்டை ( Conspiracy theory ) பயன்படுத்தி தண்டனையிலிருந்தும் தப்பிக்கும் முயற்சிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதற்காக போலி முகநூல் கணக்குகள் மற்றும் சமூக ஊடக கணக்குகளை ஆரம்பித்து புனையப்பட்ட கருத்துக்கள் பரப்ப படுகின்றன. குறித்த பேராசிரியர் தனது முகநூல் கணக்கில் குறிப்பிட்டபடி தன்மீதான குற்றச்சாட்டுக்களை சட்டநடவடிக்கைகளினூடாக அணுகாது மனைவி மூலம் மற்றவர்களை செல்வாக்கு செலுத்தி சாட்சிகளையும் ஆதாரங்களையும் கலைக்க முற்படுவது கோழைத்தனமானதும் துரதிர்ஷ்டவசமானதுமாகும்.
மேலும் ஈழத்தமிழ்ச் சமூகமாக பாலியல் சுரண்டல் குற்றச்சாட்டுக்கள் ஆதாரங்களுடன் வெளிக் கொணரப்படும் போது பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கம் நிற்க வேண்டும். அது தான் அறமாகும். அதன் மூலம் இவ்வாறான குற்றங்களை செய்பவர்கள் திருந்துவார்கள். தமது உள மற்றும் நடத்தைப் பிறழ்வு நடத்தைகளுக்களுக்கு தமக்கான மருத்துவ உதவிகளை பெற்றுக் கொண்டு தமது கொழுப்பை அடக்கி வைத்துக் கொள்வார்கள்.
ஆகவே சமூகமாக பாலியல் குற்றங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் வரும் போது விழிப்புணர்வுடன் அவற்றை எதிர் கொண்டு எதிர்காலத்தில் இவ்வாறான குற்றங்களை தடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண் சார்பாக அவரின் சம்மதத்துடன் நான் பொது ஊடகங்களில் வந்து பேசத் தயாராக உள்ளேன்.“ மடியில் கனம் இருப்பவர்களுக்கு தான் வழியில் பயம்” இருக்க வேண்டும்.
என்னை ஊடகம் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் தொடர்பு கொள்ள விரும்பினால் அணுக வேண்டியவர்கள் உள் பெட்டியில் வந்து இலக்கத்தை தந்து தங்களை அறிமுகம் செய்து உறுதிப்படுத்தினால் தொடர்பு ஏற்படுத்தப்படும்.
முகநூலின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு சம்பந்தப்பட்டவர்களின் பெயர்கள் தவிர்க்கப்பட்டுள்ளது. அதேநேரம் நடக்காத எந்த ஒரு சம்பவமும் இங்கு விபரிக்கப்படவில்லை. விபரிக்கப்பட்ட சம்பவங்கள் அனைத்துக்கும் வலுவான ஆதாரங்கள் உள்ளன என்பதையும் இதன் மூலம் அறியத் தரப்படுகிறது.
இந்த விவகாரம் பேராசிரியரின் தனிமனித ஒழுக்கேடாக கடந்து செல்ல முடியாது. பேராசிரியர் அதிகாரமுடைய ஒரு உயர்கல்வி நிறுவனத்தில் பொறுப்பான பதவியில் இருந்துள்ளார். பல சமயங்களில் துணைவேந்தரின் கடமைகளையும் ஆற்றியுள்ளார்.
அவர் தனது பதவியை துஸ்பிரயோகம் செய்தமை தொடர்பிலான குற்றச்சாட்டு முறையாகவும் பக்கச்சார்பற்றும் விசாரிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். (ஜேர்மனியிலிருந்து கங்கா)