அன்பின் சூத்திரம் ஆசிரியருக்கு!

கலைஞர் தொடர்பாக ராம் எழுதி நீங்கள் வெளியிட்டுள்ள கட்டுரையில் நான் வடக்கு கிழக்கு மாகாண சபை காலத்தில் எங்களுக்கு நெருக்கடிகள் ஏற்பட்ட பின்னர் கடைசி நேரத்தில்த்தான் அவரை நாடியது போன்று அர்த்தம் தொனிக்கும் வகையில் எழுதப் பட்டிருக்கின்றது. அது மிகத் தவறானது. அதனைத் திருத்தும் வகையில் நான் கீழே குறிப்பிட்டுள்ளதை பதிப்பிப்பதுடன், அதனை எழுதிய ராமுக்கும் இந்தத் தகவலை அறியத் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.

நான் முதலமைச்சராகியது 1988 டிசம்பரில் அப்போது தமிழ் நாட்டில் எம் ஜி ஆரின் மனைவி ஜானகி அவர்களும் ஆட்சி நடத்த முடியா நிலை ஏற்பட்டு ஆளுநர் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அத்துடன் தமிழ்நாட்டு சட்டசபைக்கான தேர்தற் களமும் சூடு பிடித்திருந்தது. தேர்தற் களத்தில் இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தை அவர் கடுமையாக விமர்சித்தார். இந்திய அமைதிப் படையினருக்கு எதிரான பிரச்சாரத்தையே செய்தார். கலைஞர் 1989ம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலமைச்சரானார் நான் முதலமைச்சராக 1989 மார்ச்சில் முதன் முறையாக டெல்லி சென்றேன். அங்கிருந்து தமிழ்நாட்டுக்குச் சென்று கலைஞரைச் சந்திப்பதே திட்டமாக இருந்தது. அதற்கான தேவை ஏற்படவில்லை. ஏனெனில் நான் டெல்லி சென்ற வேளை கலைஞரும் அங்கே வந்திருந்தார். அங்கேயே அவரைச் சென்று சந்தித்தேன். அப்போது அவர் ராஜீவ் காந்திக்கு எதிரான அரசியலைக் கொண்டிருந்தாலும் பிரதமரான ராஜீவ் காந்தியைச் சந்திப்பதற்காகவே வந்திருந்தார். அவரை சென்று மாலையிட்டு மரியாதை செலுத்திய போது அவரும் என்னை மாலையிட்டே வரவேற்றார். அப்பொழுது நான் அவரைச் சந்தித்த பொழுது எங்களது உறவும் உரையாடல்களும் இனிதாகவே இருந்தன.

இந்திய அரசாங்கத்துடன் அவருக்கு இருந்த மாறுபாடான அரசியல் நிலைப்பாடுகள் பற்றி எனது கருத்துக்களை அவர் அறிந்து கொள்ள முயலவில்லை. அதற்கான தேவை எனக்கும் இருக்கவில்லை. மாகாண சபையின் செயற்பாடுகள், அதன் அதிகாரங்கள், அது எதிர்நோக்கிய பிரச்சினைகள் பற்றி அறிவதிலேயே ஆர்வம் காட்டினார். அதுவே எமது தேவையாகவும் இருந்தது. எமது உரையாடல் முடிந்து நான் மரியாதை செய்து புறப்பட்ட வேளை எழுந்து எனது முதுகில் தட்டி வாழ்த்தியனுப்பினார். அப்போது புலிகளும் பிரேமதாசாவும் ஒன்றிணையாத காலம்.

அ. வரதராஜா பெருமாள்
09 – 08 – 2018