ஆசிரிய உதவியாளர்கள் தமது உரிமைகளுக்காய் அணித்திரள வேண்டும்

(மக்கள் ஆசிரியர் சங்கம்)

 

ஆசிரிய உதவியாளர்கள் பல நெருக்கடிகளை சந்தித்து வருகின்ற போதும் அவர்களின் பிரச்சினைகளை தீர்க்கவும் உரிமைகளை நிலைநாட்டவும் அவர்கள் அணித்திரள வேண்டும் என மக்கள் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் திரு எஸ்.மோஹன் அச் சங்கம் 12.03.2016 அன்று கொட்டகலை ஆசிரியர் கலாசாலையில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் உரையாற்றும் போது குறிப்பிட்டார். சுமார் 250ற்கும் அதிகமான ஆசிரிய உதவியாளர்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது, ஆசிரியர்கள் தங்கள் உரிமைகளை வென்றெடுக்கவும் மாணவர்களின் கல்வி உரிமையையும் வென்றெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். எனினும் ஆசிரிய உதவியாளர்கள் ஆசிரியர் என்ற அந்தஸ்த்தை சட்டரீதியாக பெற்றக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றார்.

பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு கடந்த வருடம் வழங்கப்பட்ட ஆசிரியர் உதவியாளர்களின் நியமனத்தில் நிலவும் குளறுபடிகள் தொடர்பில் மக்கள் ஆசிரியர் சங்கம் மலையகமெங்கும் நடாத்தி வரும் கூட்டத் தொடரில் மற்றுமொறு கூட்டமாக இது இடம்பெற்றது.
இதன் போது சங்கத்தின் செயலாளர் திரு.நெல்சன் மோகன்ராஜ் தனது உரையில் மக்கள் ஆசிரியர் சங்கம் இதுவரை காலமும் ஆசிரியர் உதவியாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அக்கறையுடன் செயற்பட்டு வந்துள்ளதை சுட்டிகாட்டினார்.

ஆசிரியர் உதவியாளர் நியமனத்தில் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளமை தொடர்பில் சங்கத்தினால் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கு முறைபாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அது விசாரிக்கப்பட்டு வருகின்றமை; குறிப்பிட்டார். ஊவா, சபரகமுவ, மத்திய மாகாணங்களில் ஆசிரிய உதவியாளர்களை அவர்களது ஆசிரிய பயிற்சிக்கு விடுவிக்காமை தொடர்பில் சங்கம் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்து பயிற்சிக்கு விடுவிக்க செய்தமை ஆசிரிய உதவியாளர்களின் தொழில் உரிமைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் கூட்டங்கள் கஹவத்தை, பதுளை, ஹபுத்தளை ஆகிய இடங்களில் கூட்டங்களை நடாத்தியமை என்பவற்றை எடுத்துகாட்டினார்.

இதன் போது ஆசிரிய உதவியாளர்கள் தாங்கள் எதிர் நோக்கும் தொழில்சார் பிரச்சினைகள் பலவற்றை எடுத்து கூறினர். இவற்றை உரியவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்து பிர்ச்சினையை தீர்த்து வைப்பதாக செயலாளர் உறுதியளித்தார். மேலும் ஆசிரிய உதவியாளர்களின் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கு ஆசிரிய உதவியாளர்கள் முன்வர வேண்டும் எனவும் மக்கள் ஆசிரியர் சங்கம் முன்னின்று உழைக்கும் எனவும் குறிப்பிட்டார்.