‘இனப்பிரச்சினைக்கு தீர்வு கிட்டாமைக்கு பேரினவாத தேசியக் கட்சிகளே முட்டுக்கட்டை’

‘நாட்டு மக்கள் எதிர்நோக்கியுள்ள இனப்பிரச்சினை தொடர்பில், தந்தை செல்வா முதல் சம்பந்தன் ஐயா வரை அனைவரும் பேச்சுவார்தைகளில் ஈடுபட்ட போதிலும், இதுவரை இறுதி முடிவு கிடைக்காமைக்கு, பேரினவாத தேசிய கட்சிகளே காரணம்” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

‘இந்த பேரினவாத தேசியக் கட்சிகள், இனவாதத்தை மூலதனமாகக் கொண்டு செயற்படுபவை. அவ்வாறான கட்சிகள் ஆட்சிக்கு வருவதற்காக, மக்கள் மத்தியில் இனவாதத்தை முதலீட்டு செய்து வருகின்றன” என்றும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு, சின்னஊரணியில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அலுவலகத்தை, நேற்று(06) மாலை திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,

‘ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியானது, அடிப்படைப் பேரினவாதத்துடன், 1951ஆம் ஆண்டு ஆரமப்பிக்கப்பட்டது. 1956ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெறுவதற்காக ஆட்சிக்கு வந்ததால், 24 மணிநேரத்துக்களுள் தனிச் சிங்களச் சட்டத்தை அமுல்படுத்துவதாக, தமிழ் மக்களுக்கு விரோதமான கொள்கைகளை முன்வைத்து, சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றது.

‘1958இல், தமிழர்களுக்கு எதிராக மிக மோசமான இனக்கலவரம் அரங்கேற்றப்பட்டது. அதில் குழந்தைகள் கூட பலிக்கடாக்களாக்கப்பட்டனர். . இவ்வாறு அநியாயம் செய்த கட்சி, 1964 சிறிமா – சாஸ்த்திரி ஒப்பந்தம் மூலம், மலையகத் தமிழர்களை, நாட்டை விட்டு வெளியேற்றியது.

1972ஆம் ஆண்டு, புதிய அரசியல் யாப்பிலே சிங்களம் அரச கரும மொழி, பௌத்தம் அரச மதம் என மொழி ரீதியாகவும் மத ரீதியாகவும் தமிழர்கள் பின்னிலைப்படுத்தப்பட்டார்கள். 1987இல் கொண்டுவரப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்தார்கள். 1957ஆம் ஆண்டு பண்டா – செல்வா ஒப்பந்தம் கொண்டுவரப்பட்ட போது, அதனைக் கிழித்தெறிய வேண்டும் என கண்டிப் பாதயாத்திரை செய்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஜே.ஆர்.ஜயவர்தன, அந்த ஒப்பந்தத்தைக் கிழித்தெரியச் செய்தார்.

1965இல், டட்லி – செல்வா ஒப்பந்தத்தை நிறைவேற்றாமல் கைவிட்டதும், ஐக்கிய தேசிய கட்சிதான். 1983இல், மிக மோசமான இனக்கலவரத்தை அரங்கேற்றியதும், ஐக்கிய தேசியக் கட்சி தான். பயங்கரவாத தடைச் சட்டம் என்ற மோசமான சட்டத்தைக் கொண்டுவந்து, சாட்சியங்களே இல்லாமல் இளைஞர்கள் மற்றும் யுவதிகள் வேட்டையாடப்பட்டதும் ஐக்கிய தேசிய கட்சி காலத்திலே தான். இந்த இரண்டு தேசிய கட்சிகளும், எங்களுடைய பிரச்சினையைத் தீர்த்துவைக்கவில்லை. தற்போது தீர்த்துவைப்பதாகக் கூறிப் போலியாகச் செயற்படுகிறார்கள்” என்றார்