இம்ரான் உயிருடன் உள்ளாரா? சிறையில் நடந்தது என்ன?

பாகிஸ்தான் முன்னாள்பிரதமரான இம்ரான் கான் ஊழல் புகார்களில் இஸ்லாமாபாத் அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சில வாரங்களாகவே இம்ரான் கானை சந்தித்த யாருக்கும் அனுமதி தரப்படவில்லை. அவரை சந்திக்கச் சென்ற அவருடைய சகோதரிகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் இம்ரான் கான் உடல்நிலை குறித்து இணையத்தில் பல்வேறு தகவல்கள் பரவின.

இம்ரான் கான் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் அங்கு அவர் மீது மோசமான தாக்குதல்கள் நடந்ததாகவும் தகவல் பரவின. இந்தத் தாக்குதலில் அவர் உயிரிழந்துவிட்டதாகவும் அவரது உடல் அடியாலா சிறையில் இருந்து அகற்றப்பட்டு விட்டதாகவும் கூடச் சொல்லப்பட்டது. இதனால் சில நாட்களாகவே இம்ரான் கான் குறித்து பலவிதத் தகவல்கள் பரவின. 

இந்தச் சூழலில் தான் முதலில் பாகிஸ்தான் சிறை நிர்வாகம் இது தொடர்பாக விளக்கம் கொடுத்தது. இம்ரான் கான் நலமாகவே இருப்பதாகச் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரும் கூட இம்ரான் கான் உயிரிழந்ததாகப் பரவிய தகவல்களை மறுத்திருந்தார். இதற்கிடையே இப்போது இம்ரான் கானின் பிடிஐ கட்சியில் இருந்தே சில தகவல்கள் வந்துள்ளது.

இம்ரான் கான் மரணம் குறித்த வதந்திகளுக்கு மறுப்பு தெரிவித்த இம்ரான் கான் கட்சி எம்எல்ஏ குர்ரம் சீஷான், அவர் உயிருடன் இருப்பதாகவும், தற்போது அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பாகிஸ்தானை விட்டு வெளியேற இம்ரான் கானுக்கு அழுத்தம் கொடுக்கவே அவரை தனிமைச் சிறையில் அடைத்துள்ளதாகவும் சீஷான் தெரிவித்தார். மேலும், இம்ரான் கானின் செல்வாக்கைக் கண்டு ஷெரீப் அரசு அஞ்சுகிறது என்றும் இதன் காரணமாகவே அவரது போட்டோ வீடியோ கூட வெளியிடவில்லை என்றும் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அவர் கிட்டத்தட்ட ஒரு மாதமாகத் தனிமையில் இருக்கிறார். அவரது குடும்பத்தினர், வழக்கறிஞர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கூட அவரை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. இது மனித உரிமைகளை அப்பட்டமாக மீறுவதாகும். ஏதோ விஷயத்திற்காக இம்ரான் கானை கட்டாயப்படுத்துகிறார்கள். இம்ரான் கான் உயிருடன் இருக்கிறார் என்பதை உறுதி செய்யும் தகவல்கள் கிடைத்துள்ளன. அவர் இப்போது அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் நலமாக இருக்கிறார்.

அவர்கள் இம்ரான் கானுக்கு பிரஷர் போடுகிறார்கள். பாகிஸ்தானில் இருந்து வெளியேறக் கட்டாயப்படுத்துகிறார்கள். பாகிஸ்தானிலிருந்து வெளியேறி, அமைதியாக இருக்க ஒப்புக் கொண்டால் எந்தவொரு நாட்டிற்கும் அனுப்பி வைக்கத் தயார் என இம்ரான் கானை ஷெரீப் அரசு கட்டாயப்படுத்துகிறது. அப்படிப்பட்ட தலைவர் அவர் இல்லை.

சிறையில் இருந்தாலும், இம்ரான் கானின் செல்வாக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எங்கள் பிடிஐ கட்சியின் செல்வாக்கும் உயர்ந்து வருகிறது. குறிப்பாக பாகிஸ்தான் இளைஞர்களிடையே எங்கள் கட்சி செல்வாக்கு அதிகரித்தே வருகிறது. எங்கள் கட்சிக்கு ஒரு பிரகாசமான எதிர்காலம் உள்ளது” என்றார்.