இலங்கை: கொரனா செய்திகள்

அளுத்கம சதொச கிளையின் முகாமையாளருக்கும் மற்றமொரு பணியாளருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, குறித்த வர்த்தக நிலையத்தை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன்னர் குறித்த சதொச நிறுவனத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கும் மற்றுமொருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம் கஹடகஸ்திகிலிய  கட்டுகொலியாவ பகுதியில் நடத்தப்பட்ட தன்சலில் பங்கேற்ற 09 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து, அப்பகுதியில் வசிக்கும் 36 குடும்பங்களை சேர்ந்த நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த பிரதேசத்தின் பொதுசுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார். பொசன் போயா தினத்தில், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி இவ்வாறு தன்சல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சுமார் ஒரு மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த மட்டக்களப்பு நகரில் மீண்டும் வர்த்தக நிலையங்களைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று திங்கட்கிழமை (28) தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணிவரை மட்டக்களப்பு நகரிலுள்ள வர்த்தக நிலையங்களைத் திறந்து வியாபாரம் செய்ய முடியும். இரவு 9 மணிக்கு பின்னர் திறந்திருக்கும் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக தீர்மானிக்கப்பட்டது.