இலங்கை: கொரனா செய்திகள்

உடன் அமுலுக்குவரும் வகையில் நாட்டில் 3 மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேவகர் பிரிவுகள்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இன்று(01) அதிகாலை 6 மணி முதல் குறித்த பகுதிகள் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் கண்டி, நுவரெலியா, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 4 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன

யாழ்ப்பாணம் மாவட்டத்தில், கோவிட்-19 தடுப்பூசியின் 2ஆவது டோஸை ஏற்றத் தவறியோருக்கு சனிக்கிழமை (03), அந்த சந்தர்ப்பம் பெற்றுக்கொடுக்கப்படுமென்று, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பில், அவர் இன்று (01) விடுத்துள்ள அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில், யாழ். மாவட்டத்தில், ஜுன் 28ஆம் திகதி முதல், கோவிட்-19 தடுப்பூசியின் 2ஆவது டோஸ் ஏற்றும் பணி முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணி, நாளை (02) வரை இடம்பெறவுள்ள நிலையில், இந்த ஐந்து நாள்களிலும் இரண்டாவது  தடுப்பூசியைப் பெற தவறியவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது என்றும், அவர் கூறினார்.

இதற்கமைய, சனிக்கிழமை (03), அந்தந்த பிரதேசத்துக்குரிய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளில். காலை 8 மணி முதல், தடுப்பூசி வழங்கப்படுமெனவும், அவர் கூறினார்.

அத்துடன், ‘தடுப்பூசி அல்லது வேறு மருந்துகளால் ஒவ்வாமை ஏற்படுபவர்களுக்கான முதற்கட்ட தடுப்பூசி, யாழ். போதனா வைத்தியசாலையிலும் தெல்லிப்பளை, பருத்தித்துறை, சாவகச்சேரி, ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலைகளிலும் வழங்கப்பட்டிருந்தது. இவர்களுக்கான 2ஆவது தடுப்பூசி, சனிக்கிழமை (03) 8 மணி முதல் அதே வைத்தியசாலைகளில் வழங்கப்படும்’ என்றும், அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.