இலங்கை தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடக்கம்; தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன

இலங்கையின் எட்டாவது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று முடிந்தது. இந்த முறை ஜனாதிபதி தேர்தலுக்காக 1 கோடியே 59 லட்சத்து 92 ஆயிரத்து 96 வாக்காளர்கள், வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

நாடு முழுவதும் 12,845 வாக்களிப்பு நிலையங்களில் இந்த முறை ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.

“எந்த வன்முறையும் இல்லாமல் தேர்தல் நடந்து முடிந்ததில் மகிழ்ச்சி. இப்படி முடிந்த முதல் ஜனாதிபதி தேர்தல் இதுதான்” என்று தேர்தல் ஆணையத் தலைவர் கூறியுள்ளார்.

இலங்கை வரலாற்றிலேயே அதிகளவிலான வேட்பாளர்கள் போட்டியிடும் ஜனாதிபதி தேர்தலாக இது பதிவாகியுள்ளது. மொத்தம் 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இப்போது தேர்வு செய்யப்படும் ஜனாதிபதி, எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்கு இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.