கிழக்கில் அமல், பிள்ளையான், கருணா, டக்ளஸ், கணேசமூர்த்தி, வரதராஜப்பெருமாள் மற்றும் பலர் இணையும் கூட்டு கட்சி உதயம்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான ஊடக சந்திப்பு திங்கட்கிழமை (17) காலை 11.30 மணியளவில் இடம்பெற்றது.

இவ் ஊடக சந்திப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அரசியல் ஆலோசகர் சின்னா மாஸ்டர், மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் கே.காந்தராஜா, கட்சியின் கல்லடி பிரதேச அமைப்பாளர் எம்.மோகன், கொம்மாதுறை பிரதேச அமைப்பாளர் எஸ்.சிறிகாந் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டார்கள்.

இதன்போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் மேலும் தெரிவிக்கையில்…
உண்மையில் மிக முக்கியமன காலகட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்காக பலராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருக்கின்றோம். பல்லின சமூகத்தினர் பரந்துபட்டு வாழும் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் ஆளுமைமிக்க அரசியல் இருப்பை நிலைப்படுத்த வேண்டிய அவசியமாக இருக்கின்றது.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் கிழக்குத் தமிழர்களின் பிரநிதித்துவமானது வாக்குகளால் சிதறடிக்கபடுமிடத்து தமிழர்களின் பிரதிநிதித்துவம் என்பது கேள்விக்குறியாகி போகவேண்டிய சூழல் இருக்கின்றது. இந்நிலையினை ஆராய்ந்து பரந்துபட்ட எமது சமூகத்தின் சமூக அமைப்புக்கள்,

பல்கலைகழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரிய சமூகத்தினர், வர்த்தக சமூகத்தினர், சிவில் அமைப்புக்கள், சமூகத்தை நேசிக்கும் புத்திஜீவிகள், தனி மனிதர்களிடம் கிடைக்கப்பெற்ற தீர்மானத்தை சிறப்பாக அலசி ஆராய்ந்து இறுக்கமான தீர்மானத்திற்கு தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி வந்திருக்கின்றது.

இந்நிலையில் கிழக்குத் தமிழர்களின் நிலைபேறான ஆளுமைமிக்க அதிகாரத்தை உறுதிப்படுத்தி பயணிப்பதற்காக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது கிழக்கு மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்வதற்கு விண்ணப்பித்துள்ள, சமூகத்தை நேசிக்கின்ற சிவில் அமைப்புக்கள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளையும்,

தேர்தலில் களமிறங்கவுள்ளவர்களை ஒன்றாகவும், ஒரே குடையின் கீழ் இணைத்து கிழக்கு மாகாணத்தில் ஒரு ஐக்கியமான, எல்லோரும் இணைந்து ஒரு ஐக்கிய முன்னணியாக பயணிப்பதற்கான ஒரு முனைப்புடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன் தலைமையில் கடந்த காலத்தில் பயணத்தை மேற்கொண்டிருந்தது. இதனடிப்படையில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும்,சமூக ஆர்வலர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தது.

எல்லோரும் அறிந்த விடயமாக அந்த அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் செயற்படுகின்ற கிழக்குத் தமிழ் கூட்டமைப்பு, கிழக்குத் தமிழர் ஒன்றியம், முன்னாள் வடகிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தலைமையிலான தமிழ் சமூக ஐக்கிய கட்சி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டீ.பீ கட்சி, முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மானின் கட்சி, பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் தலைமையிலான கட்சி,

முன்னாள் பிரதியமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் சோ.கணேசமூர்த்தியினால் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட கட்சி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மாகாண சபை உறுப்பினருமான ஞா.கிருஸ்ணப்பிள்ளை, சிவில் அமைப்புக்கள், வர்த்தக சமூகத்தினர் உட்பட அனைத்து தரப்பினருடனும் உத்தியோகபூர்வமாகவும், சிநேகபூர்வமாகவும் கலந்துரையாடல்கள் மேற்கொண்டுள்ளோம்.

கிழக்கின் மண்ணை பாதுகாப்பதற்காகவும், கிழக்கு மக்களின் அதிகார மையங்களை பெற்று கிழக்கு தமிழ் மக்களுக்கான எதிர்காலத்தை வழிநடாத்துவதற்காகவும், ஒரே குடையின் கீழ் ஒற்றுமையுடனும், எல்லோரும் பொதுவாக இணைந்து பயணிப்பது தொடர்பாக ஆராய்ந்துள்ளோம்.

அதில் பெருமளவு வெற்றியும் கண்டுள்ளோம். பொதுச்சின்னம் பற்றியும், கட்சிகளின் ஸ்திரத்தன்மையான நிலைமை பற்றியும் ஆராய்ந்து வருகின்றோம். இவ்விடயமாக விரைவில் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தகவல்களை வெளிப்படுத்தவுள்ளோம் எனத் தெரிவித்தார்.