ஆப்பிரிக்க கம்யூனிஸ்ட் தலைவர் தாமஸ் சங்கரா

ஆப்பிரிக்க கம்யூனிஸ்ட் தலைவர் தாமஸ் சங்கரா, இன்றைக்கும் பூர்கினாபாசோ நாட்டு மக்கள் மத்தியில் பிரபலமானவராக இருக்கிறார். “மார்க்சியம் தோற்று விட்டது, கம்யூனிசம் காலாவதியாகி விட்டது” என்று நினைத்துக் கொண்டிருக்கும் கிணற்றுத் தவளைகளின் கவனத்திற்கு:

ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள பூர்கினா பாசோ ஒரு காலத்தில் சோஷலிச நாடாக இருந்தது. ஆப்பிரிக்க சேகுவரா என்று புகழப் பட்ட, மார்க்சிய லெனினிச கொள்கையில் உறுதியாக நின்ற தாமஸ் சங்கரா அதன் ஜனாதிபதியாக இருந்தார்.

பூர்கினா பாசோ மக்கள் மத்தியில் பிரபலமான தாமஸ் சங்கரா, பிரான்ஸ் ஏகாதிபத்திய தலையீட்டின் காரணமாக நடந்த இராணுவ சதிப்புரட்சியில் கொல்லப் பட்டார். இறக்கும் பொழுது அவரிடமிருந்த சொத்துக்கள் சில புத்தகங்களும், கிட்டார் மற்றும் பழைய சைக்கிள், இவை மட்டுமே!

பல ஆப்பிரிக்க நாடுகளின் ஜனாதிபதிகள், பிரான்சிலும், இங்கிலாந்திலும் கூட, மாளிகை மாதிரி வீடு வாங்கியிருக்கிறார்கள். அப்படி இருக்கையில், தாமஸ் சங்கரா, அவர் வாழ்ந்த வீட்டிற்கு கூட வாடகை கட்டிக் கொண்டிருந்தார்! அப்படி ஒரு ஜனாதிபதியை நமது நாட்டில் கற்பனை செய்தும் பார்க்க முடியாது.

தாமஸ் சங்கரா படுகொலைக்கு பின்னர், நீண்ட காலத்திற்கு பிளேஸ் கொம்பாரே என்ற சர்வாதிகாரியின் கொடுங்கோல் ஆட்சி நடந்தது. 2015 ம் ஆண்டு, அங்கு நடந்த மக்கள் எழுச்சியின் பின்னர் பதவியில் இருந்து தூக்கி எறியப் பட்டார்.

அந்தப் புரட்சிக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள ஜனநாயக சூழலில் மீண்டும் தாமஸ் சங்கராவின் புகழ் பரவி வருகின்றது. மக்கள் அவரை என்றென்றும் மறக்கவில்லை. தலைநகரில் அரசியல் தலைவர்களின் படங்களை விற்கும் வியாபாரி, தாமஸ் சங்கராவின் படம் பெருமளவில் விற்பனையாவதாக தெரிவித்தார்.

பூர்கினா பாசோ புரட்சி பற்றிய ஆவணப்படம்:

(Kalai Marx)