சந்திரயான் -2 : முன்னணி அயல்நாட்டு ஊடகங்கள் கூறுவது என்ன?

இந்நிலையில் அயல்நாட்டு ஊடகங்களில் இது குறித்து கலவையான எதிர்வினைகள் எழுந்துள்ளன. இந்தியாவின் மிகப்பெரிய மைல்கல் சாதனையான சந்திரயான் -2 பற்றி தி நியூயார்க் டைம்ஸ், தி வாஷிங்டன் போஸ்ட், தி பிபிசி, தி கார்டியன் உள்ளிட்ட ஊடகங்கள் சந்திரயான் – 2 பற்றி செய்தி அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.

அமெரிக்க மேகசீன் ஒயர்டு, “சந்திரயான் 2 திட்டம் இந்தியாவின் ஆகப்பெரிய லட்சியத் திட்டமாகும் ஆனால் இன்னும் முழுமையடையவில்லை” என்று கூறியுள்ளது.

மேலும் இதே செய்தி அறிக்கையில் அந்த ஊடகம் தெரிவிக்கும் போது, “விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் ஆகியவற்றின் தொடர்பு இழக்கப்பட்டது இந்திய விண்வெளித்திட்டத்துக்கு ஒரு அடிதான். ஆனால் அனைத்தையும் இழந்து விடவில்லை” என்று கூறியுள்ளது.

நியூயார்க் டைம்ஸ் ஊடகம், “பொறியியல் சாதனை, ஆற்றல் பல பத்தாண்டுகளான விண்வெளி வளர்ச்சி” என்று பாராட்டியதோடு ‘இந்தியா தன் லேண்டிங் முயற்சியில் முதல் முறை சரியாக அமையாமல் இருந்திருக்கலாம் ஆனால் பல பத்தாண்டுகளின் விண்வெளி ஆய்வு வளர்ச்சி, அதன் உலகளாவிய லட்சியங்களுடன் கூடிய இந்தியாவின் ஆற்றலை முக்கியாம்சப்படுத்துகிறது. சந்திரயான் திட்டத்தின் பகுதியளவு தோல்வி நிலவின் மேற்பகுதியைத் தொட்ட பிற உயர் நாடுகளின் லீகில் இந்தியா இணைவதை தாமதப்படுத்தியுள்ளது. ஆனால் ஆர்பிட்டர் ஆப்ரேஷனில்தான் உள்ளது” என்று நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

பிரிட்டன் நாளேடான தி கார்டியன், “இந்தியாவின் நிலவைத் தொடும் திட்டம் கடைசி நிமிட தொடர்பிழப்பினால் பாதிப்படைந்துள்ளது” என்று தலைப்பிட்டு பிரான்ஸ் விண்வெளி முகமை சி.என்.இ.எஸ்.இன் இந்தியப் பிரதிநிதி மாத்யூ வெய்ஸ் என்பவர் கூறிய “அடுத்த 20, 50 அல்லது 100 ஆண்டுகளில் நிலவில் மனிதன் குடியேறும் வாய்ப்புள்ளதை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது” என்று கூறியுள்ளது.

தி வாஷிங்டன் போஸ்ட், நிலவில் லேண்டர் இறங்குவதில் முதல் முயற்சி தோல்வியடைந்தது போல் தெரிகிறது ஆனால் மிகப்பெரிய தேசியப் பெருமைக்கான ஆதாரம் என்று எழுதியுள்ளது.

பிபிசி சந்திரயான் பற்றி கூறும்போது, “அவெஞ்ச்ர்ஸ் எண்ட்கேம் பட்ஜெட் 356 மில்லியன் டாலர்களாக எதிர்பார்த்ததை விட இருமடங்குக்கும் அதிகம். ஆனால் சந்திரயான் 2 குறைந்த செலவில் அனுப்பப்பட்டதுதான் உலகத்தை கவர்ந்தன. ஆனால் இது முதல் முறையல்ல, இந்தியாவின் செவ்வாய் கிரக திட்டமும் 74 மில்லியன் டாலர்கள் செலவில்தான் நடந்தேறியது. அமெரிக்காவின் மேவன் ஆர்பிட்டரை ஒப்பிடும் போது 10-ல் ஒரு பங்குதான் இந்தச் செலவினமாகும்.

பிரான்ஸின் புகழ் பெற்ற ‘ல மோண்ட்’ பத்திரிகை தன் கட்டுரையை ‘உடைந்த கனவு’ என்று தொடங்கியுள்ளது.

எனவே இந்திய முயற்சிக்கு அயல்நாட்டு முன்னணி ஊடகங்களில் பெருமையும் வருத்தமும் தோய்ந்த புகழாரங்கள் என்று கலவையான எதிர்வினைகள் எழுந்துள்ளன.