‘சலசலப்புக்கு நாம் அஞ்சோம்’

“பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ( ஈ.பி.ஆர்.எல்.எவ்), சலசலப்புக்கு அஞ்சாது” என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் தமிழரசுக் கட்சியினுடனான கொள்கை முரண்பாடு காரணமாக, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில் புதிதாக இணைந்துகொண்ட சிலர் தமிழரசுக் கட்சியால் உள்வாங்கப்பட்டு வரும் நிலையிலேயே, தான் இவ் அறிக்கையை மக்களுக்குத் தெளிவுபடுத்தும் நோக்கில் வெளியிடுவதாக அதில் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டபோது அதில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் மற்றும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளை உள்ளடக்கியதாக இருந்தது. பின்னர், சில கட்சிகள் வெளியேற, தமிழரசுக் கட்சியும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமும் உள்வாங்கப்பட்டது.

“ஒருபொதுவான கொள்கையின் அடிப்படையிலேயே இந்த ஐக்கியம் உருவாக்கப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் தனிநாட்டுக்கான ஒரு போராட்டத்தை நடத்திக்கொண்டிருந்தார்கள். அதனையும் அங்கிகரித்தே இந்தக் கூட்டு உருவாக்கப்பட்டது. பின்னர், இந்தக் கூட்டுக்கு, “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு” என்ற பெயரையும் தமிழீழ விடுதலைப் புலிகளே சூட்டினர்.

“2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததன் பின்னர், இந்தக் கூட்டின் கொள்கையில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டது.

இணைக்கப்பட்ட வடக்கு-கிழக்கு என்பது தமிழர்களின் அரசியல், நிர்வாக அலகாக இருக்க வேண்டும்.
“தமிழ் மக்களின் இறையாண்மை என்பதும் அதனடிப்படையில் அவர்களது சுயநிர்ணய உரிமையும் அங்கிகரிக்கப்படவேண்டும்.

இதனடிப்படையில், ஒரு சமஷ்டி அரசியல் அமைப்புமுறை உருவாக்கப்பட வேண்டும்.

“இவையனைத்தின் அடிப்படையில் தமிழ் மக்களுக்கு ஒரு மாநில சுயாட்சி வழங்கப்படவேண்டும் என்ற முடிவு எட்டப்பட்டது. ஒருமித்த நாட்டுக்குள் இவ்வாறான ஒரு தீர்வை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. இதனடிப்படையில்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நாடாளுமன்ற, மாகாணசபை மற்றும் உள்ளூராட்சித் தேர்தல்களை எதிர்கொண்டது.

“ஆனால், துரதிர்ஷ்டவசமாக இதில் அங்கத்துவம் பெற்ற இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் மூலம் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களைத் தனது கட்சியில் இணைத்துக்கொள்ளும் அநாகரிக வேலைகளை ஆரம்பத்தில் இருந்தே செய்துவந்திருக்கின்றது.

“இதனை நாங்கள் பலதடவை கண்டித்தும்கூட, தமிழரசுக் கட்சி அதனை நிறுத்திக்கொள்ளவில்லை. இத்தகைய அநாகரிகமான நடவடிக்கைகள் கூட்டமைப்புக்குள் இடைவெளிகளை அதிகரிக்க வாய்ப்பாக அமைந்தன என்பதும் பகிரங்கமான விடயம். அதன் தொடர்ச்சியாகத்தான் இன்றும் ஏனைய கட்சிகளிலிருந்து மாகாணசபை உறுப்பினர்களை விலைகொடுத்து வாங்குவதற்கான நடவடிக்கைகளை பகிரங்கமாகவே, தமிழரசுக் கட்சி செய்ய ஆரம்பித்திருக்கின்றது.

“ஏற்கெனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வகுத்துக்கொண்ட கொள்கையிலிருந்து தமிழரசுக் கட்சி விலகிப் போவதும் அதனை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பலத்த விமர்சனங்களுக்கு உட்படுத்துவதும் இதன் காரணமாக அவர்கள் பல கேள்விகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுவதும் தமிழரசுக் கட்சிக்கு ஈ.பி.ஆர்.எல்.எவ்.மீது கோபம் வருவதற்குக் காரணமாக இருக்கலாம். இதன் காரணமாக ஈ.பி.ஆர்.எல்.எவ்.வை முடக்கிவிட வேண்டும் அல்லது அழித்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டி, தமிழரசுக் கட்சியின் உயர் மட்டத்தினர் இணைந்து வேலை செய்துவருகின்றனர்.

“முக்கியமாக பல்வேறுபட்ட விதங்களில் எமது அங்கத்தவர்களுடன் பேரங்கள் பேசப்படுவதாகவும் அது பணமாகவோ, எதிர்காலப் பதவிகளை இலக்குவைத்து உத்தரவாதங்கள் வழங்கப்படுவதாகவோ அறிய முடிகிறது. இந்தனடிப்படையில்தான் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற வட மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனும் சில பேரங்களுக்கு உட்பட்டே கட்சி மாறியுள்ளார்.

“கடந்த ஒக்டோபர் மாதம் வவுனியாவில் நடைபெற்ற எமது கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் அரசியல் சாசன விடயங்கள், தமிழரசுக் கட்சி அதனைக் கையாளும் முறைமை உள்ளிட்ட பல விடயங்கள் விவாதிக்கப்பட்டு தமிழரசுக் கட்சி பிழையான பாதையில் செல்கிறது என்பதை து. ரவிகரன் உள்ளிட்ட சமுகமளித்த சகல மத்திய குழு உறுப்பினர்களும் ஏற்றுக்கொண்டார்கள்.

“நிலைமை அவ்வாறிருக்க, தேசியத் தலைவர் காட்டிய வீட்டுச் சின்னத்தை விட்டு என்னால் வெளிவரமுடியாது என்று கூறிக் கொள்கைகளை முற்றுமுழுதாகக் கைவிட்டுவிட்டு, அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டுவரும் தமிழரசுக் கட்சியுடன் இன்று அவர் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார்.

“கொள்கையை விட்டு விலகிச் செல்பவர்களை தேசியத் தலைவர் எப்பொழுதும் போராளியாக ஏற்றுக்கொண்டதில்லை. போராட்டம் முழுவீச்சில் நடைபெற்றுக்கொண்டிருக்கையில், ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தவர்களும் எட்டி நின்றவர்களும் இன்றைய அரசியலில் தம்மைப் போராளிகளாகக் காட்டிக்கொள்வதையும், தலைவர்களின் பெயர்களைக் காட்டி தமது கதிரைகளைப் பலப்படுத்திக்கொள்வதையும் நோக்குகின்ற பொழுது எமது மக்கள் செய்த தியாகங்களைக் கொச்சைப்படுத்துவதற்காகவே இவர்கள் அரசியலுக்கு வந்திருக்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

“மக்களுக்காகவும், ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் விடுதலைக்காகவும் குரல் கொடுப்பதாகக்கூறி மக்களின் ஆணையைப் பெற்றவர்கள் அந்த ஆணைக்கு எதிராக செயற்படத் துணிந்தவர்களை நாம் மக்களிடம் ஒப்படைப்பதைத் தவிர எமக்கு வேறுவழியில்லை. இவர்கள் குறித்த தீர்ப்பை மக்களே எழுத வேண்டும் என்றும் அவர்களே எமது எஜமானர்கள் என்றும் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

“ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தனது பயணத்தில் பல சவால்களையும் நெருக்கடிகளையும் சந்தித்துள்ளது. எத்தகைய இடர் வரினும் எமது மக்களுக்கான விடியலை முன்னெடுத்துச் செல்வதில் நாம் ஒருபோதும் பின்னிற்க மாட்டோம்.

“தனது இருப்பை நிலைநிறுத்திக் கொள்வதற்காகவும் பெரும்பான்மையைக் காட்டி தனது மேலாதிக்கத்தை வலுப்படுத்திக்கொள்வதற்காகவும் அங்கத்துவக் கட்சிகளின் வெற்றிபெற்ற மக்கள் பிரதிநிதிகளைத் தனது கட்சிக்குள் உள்ளீர்த்துக் கொள்ள ஆரம்பித்த தமிழரசுக் கட்சி, இன்று மக்கள் ஆணைக்கு விரோதமான தனது செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்ல, அதனை எதிர்ப்பவர்களை அச்சுறுத்துவது என்ற அடிப்படையிலும், அழித்தொழிப்பதென்ற அடிப்படையிலும் பல காய் நகர்த்தல்களைச் செய்து வருகின்றது. இதன் ஒரு படிநிலையே ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினரை இலக்குவைத்து உள்வாங்கும் நடவடிக்கையாகும்.

“தமிழரசுக் கட்சியின் இத்தகைய போக்கானது விடுதலைக்காகப் போராடுகின்ற நிலை மாறி, பதவி சுகங்களைத் தேடுகின்ற, கொள்கையற்ற மிலேச்சத்தனமான அரசியல் கலாசாரம் ஒன்றை வடக்கு-கிழக்கில் வலிந்து திணிக்கின்ற நடவடிக்கையாகவே நாம் அவதானிக்கின்றோம். இது தேசிய இன விடுதலைப் போராட்டத்தில் தங்களை இணைத்துக்கொண்டு தமது இன்னுயிரை ஈந்த எண்ணற்ற இளைஞர்கள் மற்றும் யுவதிகளின் தியாகத்தை மலினப்படுத்துவதாகவும் கொச்சைப்படுத்துவதாகவும் அமையும். மேலும், இந்நடவடிக்கையானது தமிழ் மக்களை தமிழ் தேசியத்திலிருந்தும் தேசிய உணர்விலிருந்தும் அந்நியப்படுத்தும் மிக மோசமான நடவடிக்கையாகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.