சீனா கௌவிய கௌதாரி: வளங்களும் நலன்களும் பாதிப்பு

இந்த வரலாற்றுச் சிறப்பும் கேந்திர முக்கியத்துவமும் மிக்க இப்பிரதேசத்தில், தற்போது சீனர்களின் ஆதிக்கம் காலுன்றி இருப்பதாகவும் இதன் முதற் கட்டமாக கடலட்டைப் பண்ணைஅமைக்கப்பட்டு உள்ளது என்றும் பல்வேறு தரப்புகளாலும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

இந்தக் கடலட்டைப் பண்ணையானது, ஏற்கெனவே யாழ்ப்பாணம், அரியாலையில் சீன நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்ட கடலட்டை உற்பத்திப் பண்ணையுடன் தொடர்புபட்டதா? அல்லது, இதற்குத் தனியாகப் பிரத்தியேகமாக அனுமதி வழங்கப்பட்டதா போன்ற கேள்விகளும் இதன் அமைவிடம் தொடர்பிலும் பல்வேறு சர்ச்சைகள் காணப்படுகின்றன.

குறித்த, கடலட்டைப் பண்ணை, பூவரசம் தீவு என்ற சிறிய தீவிலேயே அமைந்துள்ளதாக ஆரம்பத்தில் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்தக் களப்பு பிரதேசத்தில் கெளதாரி முனைக்கும் யாழ்ப்பானத்துக்கும் இடைப்பட்ட கடல்பகுதியில் இரண்டு தீவுகளும் காணப்படுகின்றன.

இருந்தாலும், குறித்த கடலட்டைப் பண்ணையானது, ஏ-32 பூநகரி – சங்குப்பிட்டி பிரதான வீதியின் ஆலடி சந்தியில் இருந்து, மண்ணித்தலை சிவாலயத்துக்கு செல்லும் c-035 வீதியூடாக, ஏறத்தாழ 17 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள கல்முனை பிரதேசத்தில் அமைந்துள்ளது. இது முழுமையாகவே, கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவின் ஆளுகைக்கு உட்பட்டதாகும்.

கௌதாரிமுனை, மண்ணித்தலை, கல்முனை போன்ற பகுதிகளில் இயற்கையாகவே மணல் திட்டுகள் காணப்படுவதால், இந்தப் பிரதேச போக்குவரத்துப் பாதைகள் யாவும், பயணம் செய்ய முடியாத பாதைகளாகவே காணப்படுகின்றன.

இதனால், இந்தப் பகுதிகளில் வாழும் மக்கள், தரை மார்க்கத் தொடர்புகளைக் கொண்ட இந்தக் கல்முனை போன்ற பகுதிகளுக்கு, அதிகமாக கடல் மார்க்க போக்குவரத்துகளையே பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது, கடலட்டைப் பண்ணை அமைந்துள்ள கல்முனைப் பகுதியில், தொன்மையான வழிபாட்டு முறைகளைக் கொண்ட ஐயனார் கோவில், பிடாரியம்மன் கோவில், வைரவர் கோவில், வீரபத்திரர் கோவில் என சைவக் கோவில்கள் காணப்படுகின்றன, தொன்மை கொண்ட கல்முனை பிரதேசத்தில், தற்போது மக்கள் வசிக்காத நிலையில், கௌதாரிமுனை, மன்னித்தலை ஆகிய பிரதேசங்களிலுள்ள மக்கள், மேற்படி கோவில்களுக்குக் கடல் மார்க்கப் போக்குவரத்தையே பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், மேற்படி கோவில்களுக்குச் செல்லும் பாதையிலேயே, குறித்த கடலட்டைப் பண்ணை, பாரியளவில் அமைக்கப்பட்டு இருக்கிறது. “இது முழுக்க முழுக்க, எமக்குச் சொந்தமான பகுதியாகும். எங்களிடம் எந்த அனுமதியோ, கருத்துகளையோ கேட்காமல் இது அமைக்கப்பட்டுள்ளது. இதை உடனடியாக அகற்றித்தர வேண்டும்” என்று இந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றார்கள்.

இது ஒருபுறமிருக்க, “இயற்கையாகவே இறால் உற்பத்தியாகும் இப்பிரதேசத்தில், இறால் பண்ணைகளை அமைப்பதற்கு அல்லது, அதிக வருமானம் தரக்கூடிய அட்டைப் பண்ணைகளை அமைத்து தொழில் செய்வதற்கு ஏற்ற அனுமதியைப் பெற்றுத் தருமாறு, தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து இருக்கின்ற போதும், இதுவரை தங்களுக்கு எந்த விதமான அனுமதியும் வழங்கப்படவில்லை” என்று இங்குள்ள தொழிலாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

கிளிநொச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரையில், இரணைதீவு பகுதியில் மாத்திரமே, இதுவரை கடலட்டைப் பண்ணை அமைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏனைய பகுதிகளில் எந்தவிதமான அனுமதியும் வழங்கப்படவில்லை. அவ்வாறெனின், இந்தக் கடலட்டைப் பண்ணை உருவாக்கப்பட்டது எவ்வாறு என்ற கேள்வி எழுகிறது.

அரியாலையில் உற்பத்தி செய்யப்பட்ட அட்டை குஞ்சுகளை, கடந்த ஜூன் மாதம் முதலாம் திகதி, இங்கு முதன் முதலாக வைப்பில் இடப்பட்டது. தங்களுக்கு இந்த இடத்தை, இந்தப் பிரதேச கடற்றொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் அடையாளப்படுத்தி வழங்கியதாக, கடலட்டைப் பண்ணையில் கடமையில் இருப்பவர்கள் கூறினார்கள். இந்த பிரதேசத்தின் கடல் வளம், கடந்த காலங்களில் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் மீனவர்களால் சுரண்டப்பட்டு வந்தது. இப்போது வெளிநாட்டவர் சுரண்டும் நிலை உருவாகியுள்ளது.

ஜூன் மாதம் 29ஆம் திகதி குறித்த பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் சென்றுபார்வையிட்டதுடன், “ஒரு வெளிநாட்டவர் எவ்வாறு இலகுவாக வந்து இந்த இடத்தைப் பிடித்து, கடலட்டை வளர்க்கின்ற செயற்பாடு இடம்பெறுவது ஒரு கேள்வியாகின்றது. இது தொடர்பான நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட்டு, விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.

திஸ்ஸமகரகமவில் சீன இராணுவத்தினரின் சீருடைக்கு ஒப்பான உடையுடன் நின்று வேலைகளில் ஈடுபடுகின்றமை தொடர்பில் முறைப்பாடுகள் எழுந்ததை அடுத்து, அது தடுத்து நிறுத்தப்பட்டு இருக்கின்றது. ஆனால், இங்கே அது தொடர்பாக ஆட்சேபனைகள் எழுந்திருக்கின்ற போதிலும்கூட, செயற்பாடுகளை நிறுத்துவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தமிழர்களின் பிரதேசத்தில் அந்நியர்கள்வந்து, இந்தப் பிரதேச மக்களின் அனுமதியில்லாமல் உள்நுழைந்திருப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. வீணே ஒரு பதட்டத்தை இந்தப் பிரதேசத்தில் ஏற்படுத்தவதற்கு, இந்த அரசாங்கம் அனுமதித்திருக்கின்றதா? என்ற கேள்வி எழுந்திருக்கின்றது” என்று கூறியிருக்கிறார்.

சீனர்களின் கடல் அட்டை பண்ணையை பார்வையிடுவதற்கு ஜூன் மாதம் 30ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனும் சென்றிருந்தார். அதன்போது அவர் கருத்துத் தெரிவிக்கும் போது, “யாழ்ப்பாணம், அரியாலை பகுதியில் கடலட்டைக் குஞ்சுகளை வளர்ப்பதாக கூறி உருவாக்கப்பட்ட அட்டை பண்ணையானது, தற்போது கிளிநொச்சியின் மூலை எல்லையில் கௌதாரிமுனை என்னும் இடத்தில், எந்த அனுமதியும் இன்றி பண்ணையைச் செய்து வருகின்றார்கள்.

பாசையூர், கிளிநொச்சி, கௌதாரிமுனை மீனவர்கள், கடலட்டை வளர்ப்புக்காக முன் வைத்த உரிமங்கள் மறுக்கப்பட்ட நிலையில், சீனர்கள் அட்டை வளர்ப்பைச் செய்து வருவதுடன், இயற்கையாகவே இக்கடலில் வளர்கின்ற கடலட்டைகளை நிராகரித்து, செயற்கையாக கடலட்டைகளை வைத்து விரைவான வளர்ச்சி அடைய வைத்து, அதனை ஏற்றுமதி செய்யும் நடவடிக்கையில் சீனர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சீனா தற்பொழுது கால்பதித்து உள்ள இடங்கள் அனைத்தும் கேத்திர முக்கியத்துவம் பெற்ற நிலையங்களாகவே உள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.

வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் வடக்கு கடற்றொழிலாளர்களின் கடற்தொழில்களை நவீன மீன்பிடி முறைகளையும் இவ்வாறான அட்டை வளர்ப்புகளையும் பயன்படுத்தி விருத்தி செய்வதா? அல்லது, வடக்கின் கடற்றொழில் வளங்ளை சீன நிறுவனங்கள் போன்ற வெளிநாடுகளுக்கு வழங்கி, தங்கள் வாழ்வாதாரத்தை அழிப்பதா என்பதே, இந்த மக்களின் கேள்வியாகும்.