சுபஸ்ரீ மரணம்: என் நிகழ்ச்சியில் கட் அவுட் வைக்கவேண்டாம்: சூர்யா உருக்கமான வேண்டுகோள்

சென்னையில் நடைபெற்ற அதிமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவில் சாலையின் இருபுறமும், சாலைத் தடுப்புகளிலும் பேனர்கள் கட்டப்பட்டிருந்தன. அந்த சாலையில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இளம்பெண் சுபஸ்ரீ மீது பேனர் ஒன்று விழுந்தது. அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்தவர் மீது பின்னால் வந்த தண்ணீர் லாரி ஏறியது. இதில் படுகாயம் அடைந்தவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்துக்குத் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. பல்வேறு கட்சித் தலைவர்களும் தங்களுடைய கட்சியினரைக் கடுமையாக எச்சரித்துள்ளனர். இனிமேல் கட்சி தொடர்பான பேனர்கள் எதுவும் வைக்க வேண்டாம் எனத் தொண்டர்களை அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் விவேக் முதல் நபராக தனது ட்விட்டர் பதிவில் “இந்தச் சம்பவம் மிகவும் துயரமானதும் துரதிருஷ்டவசமானதும் ஆகும். சுபஸ்ரீ குடும்பத்துக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். கண்ட இடங்களில் பேனர்,போஸ்டர் வைப்பது முறைப்படுத்தப் பட வேண்டும். இது சினிமாவுக்கும் பொருந்தும்” என்று தெரிவித்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாக நடிகர் விஜய்யும் தன் ரசிகர்களுக்குக் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். செப்டம்பர் 19-ம் தேதி ‘பிகில்’ படத்தின் இசை வெளியீட்டு சென்னையில் நடைபெறவுள்ளது அதற்கு காஞ்சிபுரம் மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் யாருமே விளம்பர பேனர்கள் வைக்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு தன் மக்கள் இயக்கத்தின் தலைவர் ஆனந்த் மூலமாக அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ‘காப்பான்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் சூர்யா “ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள். இங்கு ஒரு படம் வெளியாகும் போது அதற்கான கொண்டாட்டாம் என கட்-அவுட், பேனர்கள் என வைப்பீர்கள். நமது சமூகத்தில் என்ன நடக்கிறதோ அதற்கு ஏற்றவாறு நமது புரிதலும் இருக்க வேண்டும்.

நமக்கும் மனமாற்றம் வேண்டும். இனி எங்குமே கட்-அவுட், பேனர் வைத்து கொண்டாட்டம் கூடாது. நான் ஒவ்வொரு முறை கூறியும் அதைத் தாண்டி இது நடக்கிறது. இம்முறை மிகவும் தாழ்மையுடன் கேட்கிறேன். தயவு செய்து வேண்டாம்.

என்னை கட்-அவுட், பேனர் வைத்துதான் சந்தோஷப்படுத்த வேண்டும் என்கிற அவசியமில்லை. நீங்கள் அரசாங்க பள்ளிகளுக்கு செய்யும் உதவிகள், ரத்ததான நிகழ்ச்சிகள் என நடத்துவதே போதுமானது. அது என் பார்வைக்கு வருகிறது.

அனைவரது மனமும் வருத்தப்படும் மாதிரியான ஒரு விஷயம் நடந்த பின்னர், கட் அவுட் வைக்கும் நிகழ்வை மீண்டும் செய்யமாட்டீர்கள் என நம்புகிறேன். மற்றவர்களுக்கு செய்யும் உதவி மூலம் நமது சந்தோஷத்தை பரிமாறிக் கொள்வோம்” என்று நடிகர் சூர்யா பேசினார்.