சுமந்திரனின் பேச்சாளர் பதவி பறிக்கப்படுமா? மாவை, செல்வம், சித்தர் யாழில் அவசர ஆலோசனை

மூன்று பங்காளிக் கட்சித் தலைவர்களைவிட கூட்டமைப்பின் எம்.பி.க்கள் சிலரும் நேற்றைய ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். மாவிட்டபுரத்தில் உள்ள மாவை சேனாதிராஜாவின் இல்லத்தில் அவசர ஏற்பாடாக இந்த மந்திராலோசனைக்க் கூட்டம் நடத்தப்பட்டது.

நேற்றுக் காலை மாவை சேனாதிராஜாவின் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் செல்வம் அடைக்கலநாதனும், சித்தார்த்தனும் கலந்துகொண்டிருந்தனர். அதனையடுத்து சித்தார்த்தனின் இல்லத்திலும் மற்றொரு சந்திப்பு இடம்பெற்றது. அதில் சித்தார்த்தனுடன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன் ஆகிய இருவரும் கலந்துகொண்டிருந்தனர்.

மீண்டும் மாலையில் மாவையின் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில் மாவையுடன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

சுமந்திரனை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலக்கவேண்டும், பேச்சாளர் பதவியையும் பறிக்க வேண்டும் என்று சாள்ஸ் நிர்மலநாதன், சிறீதரன், ஆகியோரும் கட்சித் தலைவரான மாவை சேனாதிராஜாவிடம் நேரில் கேட்டுக்கொண்டதாகவும் அறியவருகின்றது.

நீண்டநேரம் நடந்த இந்தச் சந்திப்புக்களில் சுமந்திரனின் விடயம் தொடர்பில் காரசாரமான விவாதங்கள் இடம்பெற்றன. அத்துடன் சுமந்திரன் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்பதில் அனைத்துத் தரப்பினரும் மிக உறுதியாக இருந்தனர் என அறிய முடிகின்றது என யாழ்ப்பாணச் செய்தி ஒன்று தெரிவிக்கின்றது.

அண்மையில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு நேர்காணல் வழங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன், “விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஆயுதப் போராட்டத்தை நான் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை” என்று கூறியிருந்தமை சர்ச்சையாக வெடித்திருக்கும் நிலையிலேயே இந்தச் சந்திப்புக்கள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளன.