இறப்பர் மற்றும் தேயிலை உற்பத்தி மற்றும் ஏற்றுமதித் துறையின் முன்னணி வர்த்தகர்களுடன் நேற்று (26) ஜனாதிபதிஅ லுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
உலகில் பல்வேறு நாடுகள் உள்நாட்டுத் தொழில்களை ஏற்றுமதிக்கு ஊக்குவிப்பதன் மூலமே பொருளாதார ரீதியாக வலுவடைந்துள்ளன என்பதை இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தற்போதுள்ள வெளிநாட்டுக் கடன் சுமையிலிருந்தும் சர்வதேச நிதி நிறுவனங்களில் தங்கியிருப்பதிலிருந்தும் விடுபடுவதற்கான ஒரே வழி உள்நாட்டு உற்பத்தித் திறனை அதிகரிப்பதே என்றும் சுட்டிக்காட்டினார்.
உள்நாட்டுத் தொழில்துறையினர் ஏற்றுமதித் துறைக்குள் பிரவேசிப்பதை ஊக்குவிப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய புதிய திட்டங்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், இறப்பர் மற்றும் தேயிலைத் தொழில்துறையை மேம்படுத்துவதற்கும், ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதற்கும் 2026-2030 தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டத்திற்கு இணங்க புதிய மூலோபாய வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
உற்பத்தித் திறன் மற்றும் தரவுகளின் முக்கியத்துவத்தை இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, வருடாந்தம் அதிகரிக்கப்படும் உற்பத்தியின் அளவு குறித்து துல்லியமான புரிதலைக் கொண்டிருக்க வேண்டியதன் அவசியத்தையும் விளக்கினார்.
உற்பத்தி செயல்முறையானது மிகவும் எளிமையானதாகவும் அதே நேரத்தில் செயற்திறனானதாகவும் இருக்க வேண்டும் என்றும், அதில் தொழில்துறையினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கண்டறிவதற்குத் தேவையான அனைத்து தரவுகளையும் அரசாங்கத்திற்கு வழங்குமாறும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
குறிப்பாக, உரம் மற்றும் ஏனைய உள்ளீடுகளை வழங்கும் போது, அவற்றின் விளைவுகளுக்கும் ஏற்றுமதி வருமானத்திற்கும் இடையே உள்ள தொடர்பை விஞ்ஞான ரீதியாக ஆராய வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
உள்நாட்டு கைத்தொழிலாளர்களை ஊக்குவிக்கும் போது, நிகர டொலர் வருமானத்தை அதிகரிப்பதில் முதன்மையான கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் ஏற்றுமதிக்குத் தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்குச் செலவிடப்படும் டொலரின் அளவுக்கும், உற்பத்திப் பொருள்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் நாட்டிற்கு மீண்டும் கிடைக்கும் டொலரின் அளவுக்கும் இடையிலான இடைவெளியை சரியாக முகாமைத்துவம் செய்ய வேண்டும் என்றும் மூலப்பொருள்களைக் கொண்டு வருவதற்காக பெருமளவிலான டொலர்கள் நாட்டிலிருந்து வெளியே சென்ற போதிலும், ஏற்றுமதி வருமானமாக நாட்டிற்குத் மீண்டும் கிடைக்கும் நிகர இலாபம் போதுமானதாக இல்லாவிட்டால் அதுவொரு பிரச்சினையாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.