உர மானியத்தை இரு மடங்காக அதிகரித்தல், டித்வா சூறாவளி காரணமாக சேதமடைந்த பயிர்ச்செய்கை நிலங்களுக்கு வரலாற்றில் மிகக் கூடிய நட்டஈட்டுத் தொகையை வழங்குதல், நெல் கொள்வனவுக்காக வரலாற்றில் அதிகளவிலான நிதியை ஒதுக்குதல், பாரிய அளவிலான நீர்ப்பாசனத் திட்டங்களின் பணிகளை மீண்டும் ஆரம்பித்து பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்குத் தேவையான நீரை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தமை உட்பட விவசாய மக்களுக்காகக் குறிப்பிடத்தக்க அளவிலான பணிகளை அரசாங்கம் நிறைவேற்றி வருவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் நேற்று (10) கலந்துகொண்ட போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைக் குறிப்பிட்டார்.
அநுராதபுர மாவட்டத்தின் பதவிய, கெபிதிகொல்லேவ, ஹொரவப்பொத்தான மற்றும் கஹட்டகஸ்திகிலிய ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் நிலவும் நீண்டகால சிறுநீரக செயலிழப்பு நோய்க்கு ஒரு தீர்வாக, அப்பிரதேசத்திலுள்ள 67,000 குடும்பங்களுக்கு சுத்தமான மற்றும் பாதுகாப்பான குடிநீரை வழங்கும் நோக்கத்துடன், இலங்கையிலுள்ள ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிலையம் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சு மற்றும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை ஆகியவற்றின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
1990 ஆம் ஆண்டுக் காலப்பகுதியிலிருந்து இப்பிரதேசங்களில் பரவி வரும் அடையாளம் காணப்படாத சிறுநீரக நோய்க்கு சுத்தமான குடிநீர் இல்லாமையே பிரதான காரணம் என்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், எனவே இத்திட்டம் வெறும் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி மட்டுமல்லாது, மக்களின் வாழ்வுரிமையை உறுதிப்படுத்துவதாகும் என்றும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.
இத்திட்டத்திற்கு ஆதரவளித்த ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிலையத்திற்கும், திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சு மற்றும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கும் தனது நன்றியைத் தெரிவித்த ஜனாதிபதி, திட்டப் பணிகளை உரிய காலத்திற்குள் நிறைவு செய்து, அதன் பலன்களை மக்களுக்கு வழங்குவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்படுவார்கள் என நம்புவதாகவும் தெரிவித்தார்.
மேலும், வரலாறு நெடுகிலும் நாட்டிற்குள் நீர் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும், இதுவரையில் சுமார் 60 வீத மக்களுக்கு மாத்திரமே சுத்தமான குடிநீர்
வசதி கிடைத்துள்ளது என்பதை இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தற்போதைய அரசாங்கம் 2000 கோடி ரூபா செலவில் 22 குடிநீர் வழங்கல் திட்டங்களின் பணிகளை அடுத்த ஆண்டு ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும், பழைய திட்டங்களை விரிவாக்குவதன் மூலமும் மற்றும் புதிய திட்டங்கள் மூலமும் புதிதாக சுமார் 10 லட்சம் குடும்பங்களுக்கு புதிய நீர் விநியோகங்களை வழங்குவதற்குத் தேவையான திட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.