வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா மற்றும் பட்டப்பின் கற்கைகள் பிரிவின் இணைப்பாளர் பேராசிரியை ஐனூன் ஜாரியா ஆகியோர் தலைமையிலான விரிவுரையாளர்கள் மற்றும் சுமார் 30 மாணவர்களைக் கொண்ட குழு இதற்காகத் தமிழ்நாட்டுக்குச் சென்றுள்ளது.
தென்கிழக்கு பல்கலைக்கழகமும் தமிழ்நாட்டின் கொங்கு பொறியியல் கல்லூரியும் இணைந்து இந்த வதிவிடப் பயிற்சியை ஏற்பாடு செய்துள்ளன. நாட்டில் 2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு, தென்கிழக்கு பல்கலைக்கழக முதுமானி மாணவர்கள் வெளிநாட்டு வதிவிடப் பயிற்சியை மேற்கொள்வதற்கான அனுமதியை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) முதன்முதலாக வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் ஒரு வாரம் தங்கியிருக்கும் இக்குழுவினர், கொங்கு பிஸினஸ் ஸ்கூல் (Kongu Business School), நொலேஜ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (Knowledge Institute of Technology), டெக்னாலஜி பிஸினஸ் இன்குபேட்டர் (Technology Business Incubator) கல்வியகம் மற்றும் சவீதா சட்டத்துறை பாடசாலை ஆகிய உயர்கல்வி நிலையங்களுக்கு விஜயம் செய்வதுடன், அங்கு நடைபெறும் விரிவுரைகள் மற்றும் அறிவுப் பரிமாற்ற நிகழ்வுகளிலும் பங்கேற்கின்றனர்.
தற்போதைய காலத்திற்கு ஏற்ப, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு வணிக மையங்கள் மற்றும் கைத்தொழிற்சாலைகளுக்கு விஜயம் செய்யும் இம்மாணவர்கள், அங்கு முகாமைத்துவத் துறைசார் கோட்பாடுகளின் நடைமுறை ரீதியான பிரயோகம் குறித்த கள அறிவினைப் பெற்றுக்கொள்வதில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன், சென்னையில் உள்ள சவீதா சட்டத்துறை கல்லூரியில் 19 ஆம் திகதி இடம்பெறவுள்ள சர்வதேச மாநாடு ஒன்றில், தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் முதுமானி மாணவர்கள் சிலரும் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிக்கவுள்ளமை விசேட அம்சமாகும்.