தோழர் மகேந்திரன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்

எந்த தத்துவமும் கொள்கையும் அற்ற ஒரு கூட்டம் வெறும் ரசிக மனப்பான்மையை மூலதனமாக வைத்து தமிழக ஆட்சி பீடத்தை பிடித்தது என்பது நம் தலைமுறையில் நிகழ்ந்துவிட்ட, அண்ணன் சீமான் சொல்வது போல அரசியல் பேரிடர்.

உண்மையில் தத்துவங்களும் இசங்களும் பொய்யாக்கப்பட்டு , வெறும் கவர்ச்சி மேலோங்குவது என்பது மிகப்பெரிய ஆபத்தான எதிர்காலத்தை உருவாக்கும். இந்த விபரங்கள் எல்லாம் தோழருக்கு சொல்லி புரிய வேண்டியவை அல்ல.

அவருக்கு நன்றாக தெரியும். ஆனாலும் அவர் எடுத்த இந்த முடிவு அவரது அரசியல் வாழ்வில் மிகப்பெரிய பிம்ப அழிப்பு. ஒரு வகையான தற்கொலை. ஏன் இந்த தற்கொலை நடந்திருக்கிறது என யோசித்துப் பார்த்தால்.. உண்மையில் பல்வேறு காரணங்கள்.

இனி கொள்கை அரசியல் இந்த மண்ணில் எடுபடாது என அசலான கொள்கைகளை வாழ்க்கை முறையாக கொண்டவர்களே சிந்திக்க தொடங்கி விட்டார்கள் என பார்க்கும் போது அச்சமாக இருக்கிறது.

உதிரிக் கூட்டமாக மாறிவிட்ட தமிழ்ச் சமூகத்தில் இனி தத்துவங்களையோ கொள்கைகளையோ நம்பி பயணிக்க முடியாது என தோழர் மகேந்திரன் முடிவு எடுத்தது அவரையெல்லாம் முன்மாதிரியாக கொண்டு பயணிக்க துடிக்கிற எனக்கு எல்லாம் பெரும் அதிர்ச்சி.

மக்களுக்கு நல்லது செய்வது தானே கொள்கை.. எனப் போகிற போக்கில் அடித்து விடுவதற்கு அங்கே ஏற்கனவே ஏராளம் பேர் இருக்கிறார்கள். ஆனால் தத்துவங்களையும் கோட்பாடுகளையும் ஆழப் பயின்ற தோழர் சி மகேந்திரன் அந்தக் கூட்டத்தின் நடுவே என்ன செய்யப் போகிறார் என்று நினைத்துப் பார்க்கவே வேதனையாக இருக்கிறது.

என்னுடைய முகம் மட்டும் தான் என்னுடைய மூலதனம் என்று வெளிப்படையாகவே கவர்ச்சியை சொல்லி அரசியலில் நிற்கிற விஜய்க்கு எதிர் முனையில் தான் தோழர் எல்லாம் நின்று இருக்க வேண்டும்.ஆனால் காலம் கருணையற்ற கொலைகாரன் அல்லவா. இறுதியாக எங்கள் தோழரையும் அந்தக் காலம் கொன்றுவிட்டது.

ஒரு வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மீது எனக்கு கடுமையான வருத்தம். இப்படிப்பட்ட மனிதர்களை எல்லாம் ஜனநாயகம் அற்ற , குழு அரசியலை சார்ந்த உட்கட்சி அரசியலால் வெளியேற்றியதன் விளைவு, கொள்கையை பார்க்காமல் போகிற போக்கில் ஆளுங்கட்சியோடு கூட்டணி வைத்துக் கொண்டதன் பலன்.. தோழர் சி மகேந்திரன் போன்றவர்கள் இடம் மாற தொடங்கி இருக்கிறார்கள்.

எனக்கு அதிமுக விஜயபாஸ்கர் போன்றவர்கள் இடம் மாறுவது குறித்து எந்த விதமான அதிர்ச்சி மதிப்பீடும் இல்லை. ஆனால் தோழர் சி மகேந்திரன்மாறியது உண்மையில் எனது தலைசிறந்த ஆசிரியரை எவ்விதமான அறமும் இல்லாத இந்த கும்பல் மனப்பான்மை சமூகத்தின் முன்பாக வைத்து பலி கொடுத்து விட்டது போல உணர்ச்சி.

இப்படி எல்லாம் கீழே உருண்டு பிரண்டு தத்துவமற்ற நிலையில் தன்னை தள்ளிக் கொண்டு ஒருவகையில் தற்கொலை செய்து கொண்டு எதற்காக இந்தக் கேடுகெட்ட அரசியலில் நீடிக்க வேண்டும் என்றெல்லாம் மனது யோசிக்க தோன்றுகிறது. தோழர் நல்லகண்ணு அவர்களின் மனதிற்கு மிக நெருக்கமான அவரது மாணவரான தோழர் சி மகேந்திரன் இன்று இடம் மாறி இருக்கும் காட்சி.. நல்ல வேளை, மாமனிதர் நல்லகண்ணு உயிருடன் இல்லை என்பதை நமக்கு ஆறுதலாக தெரிவிக்கிறது. ஆழ்ந்த இரங்கல் தோழர்.

வருத்தத்துடன்..

மணி செந்தில்

Leave a Reply