நம்பிக்கை இழக்காத ஜோதி… அதிர்ந்து நிற்கும் அரவக்குறிச்சி திமுக!

அரவக் குறிச்சி தொகுதி தி.மு.கவுக்கு என ஒதுக்கப்பட்டாலும், விடாமல் போராடிக் கொண்டிருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி. சமூக வலைத்தள பிரசாரம், மக்களை சந்திப்பது என அவரது உற்சாகம் தி.மு.கவினரை அதிர வைத்துக் கொண்டிருக்கிறது. சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்புக்கு ஆறு மாதம் முன்பிருந்தே,  மக்களை சந்தித்து பிரசாரத்தைத் தொடங்கியிருந்தார் ஜோதிமணி. ‘ராகுல்காந்தியின் ஆசியோடு கட்டாயம் போட்டியிடுவேன்’ என உறுதியாக நம்பிக் கொண்டிருந்தவருக்கு,  கூட்டணி உடன்பாட்டில் அரவக்குறிச்சியை திமுகவுக்கு விட்டுக்கொடுத்து  அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது காங்கிரஸ் தலைமை.

‘எனக்கு சீட் ஒதுக்காவிட்டால், தனித்துப் போட்டி என்பதில் மாற்றுக் கருத்தில்லை’ என அதிர வைத்தார் ஜோதிமணி. இதற்கு பதில் கொடுத்த காங்கிரஸ் நிர்வாகிகள்,  “தி.மு.கவின் சிட்டிங் தொகுதியை அவர்கள் எப்படி விட்டுக் கொடுப்பார்கள்? அரவக்குறிச்சி தொகுதியில் தி.மு.கவின் சிட்டிங் எம்.எல்.ஏ. கே.சி.பழனிச்சாமி இருக்கிறார். ஜோதிமணிக்காக எவ்வளவு பேசினாலும், தி.மு.க விட்டுக் கொடுக்கவில்லை” என்றனர்.

இந்த மோதல்கள் ஒருபுறம் இருக்க, அரவக்குறிச்சி தொகுதிக்குள் மிகுந்த நம்பிக்கையோடு வலம் வருகிறார் ஜோதிமணி. சமீபத்தில் அவருடைய ஃபேஸ்புக்கில், “இது அதிகாரத்திற்கான யுத்தமல்ல, அரசியல் மாற்றத்திற்கான களம்”  என பதிவிட்டிருந்தார். இன்னொரு பதிவில்,” ‘மக்களுக்குத் தொடர்பில்லாத அரசியலை மக்களுக்கானதாக மாற்ற வேண்டும்’ என்ற ராகுலின் பாதையில் என் பயணம் செல்கிறது. எனக்கு அரவக்குறிச்சி ஒதுக்கப்பட வேண்டும் என காங்கிரஸ் தலைமையில் இருந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் அமைதியாக இருக்கிறேன். எதுவும் நடக்கவில்லையென்றால், சுயேச்சையாகப் போட்டியிடுவேன். மக்கள் ஆதரவு என் பக்கம் இருக்கிறது” என எழுதி அதிர வைக்கிறார். இதன்மூலம், தன்னுடைய உறுதியை பகிரங்கமாகவே தலைமைக்குத் தெரியப்படுத்துகிறார் ஜோதி.

அதிலும் இன்று,  ‘நமது ஊர் நமது வாழ்வு’ என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டார் ஜோதிமணி. “காமராஜர் காலத்தில் இலவசமாகக் கிடைத்த கல்வி இன்றைக்கு தரமற்றதாக மாறியிருப்பதற்கு யார் காரணம்? தன் பிள்ளை டாக்டராகவும் இன்ஜினியராகனும்கிற கனவோட பெற்றோர்கள் கடுமையாக உழைக்கின்றனர். ஆனால், கல்வி எட்டாக்கனியாக இருக்கிறது. இதனை மாற்ற சட்டமன்றத்தில் உங்கள் குரலாக நான் இருப்பேன்” என அவர் பேசும் பேச்சுக்கள் வைரலாகிறது.

இந்நிலையில் அவரை தொடர்புகொண்டு, ” இன்னும் காங்கிரஸ் தலைமையை நம்புகிறீர்களா?” என்றோம்.
” தேர்தல் என்பது ஒரு ப்ராசஸ். 22-ம் தேதி வரையில் வேட்புமனுத் தாக்கலுக்கு நேரமிருக்கிறது. ஒரு சீட்டை எடுப்பதோ, ஒரு சீட்டைக் கொடுப்பதோ பெரிய விஷயமல்ல. அதுவும் வெற்றிபெறக் கூடிய சீட் இருப்பது கட்சிக்கு பெரிய பலம்தான். மக்கள் ஆதரவு என் பக்கம் உள்ளது. பல இடங்களில் மக்கள் அழுகிறார்கள். கடைசி நிமிடத்தில் வேட்பாளரை மாற்றக் கூடிய சம்பவங்களும் நடந்திருக்கிறது. இப்போதுள்ள ஒரு கட்சி தினம் தினம் வேட்பாளர்களை மாற்றுகிறது. எனக்காக தலைமை முயற்சி செய்து கொண்டிருக்கிறது. வழக்கம்போல ஓட்டுக் கேட்டுக் கொண்டு இருக்கிறேன். எங்கள் கட்சிக்கு கன்னியாகுமரி வலுவான தொகுதி. அதை தி.மு.கவுக்கு விட்டுக் கொடுத்திருக்கிறோம். தி.மு.கவுக்கு நல்ல வேட்பாளர் உள்ள தொகுதிகளைக்கூட காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக் கொடுத்திருக்கிறார்கள். அரசியல் என்பது எல்லாவிதமான வாய்ப்புகளுக்கும் உரிய இடம். நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்” என்றார் உறுதியோடு.

அரவக்குறிச்சி தொகுதியில் ஜோதி சுடர்விட்டு எரியுமா என்பது தமிழக  காங்கிரஸ் கமிட்டியின் கைகளில்தான் உள்ளது