நளினியின் தண்டனையை குறைப்பதை எதிர்த்த ஜெயலலிதா இன்று நாடகம் ஆடுவது ஏன்?

நளினியின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க சோனியா மனிதநேய உணர்வோடு பரிந்துரைத்ததை தேசவிரோதச் செயல் என்று விமர்சனம் செய்த ஜெயலலிதா இன்று 7 பேருக்காக நாடகம் ஆடுவது ஏன்? என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் 1999 ஆம் ஆண்டில் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கியது. மேலும் 3 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கியது.

சோனியா காந்தியின் பரிந்துரையின் பேரில் நளினிக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. அதேபோல, ஆகஸ்ட் 2000 ஆம் ஆண்டில் தமிழக அரசு அனுப்பிய கருணை மனுக்களை 2011 இல் குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்தார்.

ராஜீவ் வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் மீது பழிவாங்கும் நோக்கு இல்லாத காரணத்தால்தான் மத்திய காங்கிரஸ் அரசு கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதில் 11 ஆண்டுகாலம் அவசரம் காட்டாமல் இருந்தது.

இந்த காலதாமதத்தை காரணம் காட்டிதான் கடந்த பிப்ரவரி 2014ல் உச்சநீதிமன்றம் ராஜீவ் படுகொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பு வழங்கியது.

அதேநேரத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களை மாநில அரசு விரும்பினால் விடுவிக்கலாம் என்றும் அத்தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. இதற்கு உச்சநீதிமன்றமே பிறகு இடைக்கால தடை விதித்தது.

இவ்வழக்கு குறித்து இறுதியாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ‘குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளின் தண்டனையை தமிழக அரசு தன்னிச்சையாக குறைக்க முடியாது.

மத்திய புலனாய்வுத்துறை அமைப்பு விசாரணை செய்து மத்திய சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றம் வழங்கிய தண்டனையை மாநில அரசு குறைக்க முடியாது. இது தொடர்பாக மாநில அரசு தண்டனை குறைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனில் மத்திய அரசின் ஒப்புதலைப் பெற வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 2014 இல் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக 7 பேரையும் மூன்று நாட்களுக்குள் விடுவிக்க வேண்டும், இல்லையெனில் தமிழக அரசே விடுதலை செய்யும் என்று கடிதம் எழுதிய ஜெயலலிதா, மீண்டும் இதுகுறித்து இப்போது கடிதம் எழுதியிருப்பது அப்பட்டமான அரசியல் ஆதாயம் தேடுகிற செயலாகும்.

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 7 பேரையும் விடுவிக்க முடியாது என்பதை திட்டவட்டமாக அறிந்து வைத்திருக்கிற ஜெயலலிதா, இத்தகைய கடிதத்தை எழுதுவதைவிட அரசியல் ஏமாற்று வேலை வேறு எதுவும் இருக்க முடியாது.

தமது தந்தையை பார்க்க சிறையிலிருந்து செல்ல நளினிக்கு பரோல் அளிக்கக் கூடாது என்று தடையாணை பிறப்பித்த முதலமைச்சர் ஜெயலலிதா, இன்று 7 பேர் விடுதலைக்காக நீலிக் கண்ணீர் வடிப்பது ஏன் ?

மக்கள் விரோத அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிராக அணி திரண்டு வரும் எதிர்ப்பை சந்திக்க முடியாமல் பிரச்சினையை திசைத் திருப்பவே இத்தகைய அரசியல் நாடகத்தை ஜெயலலிதா அரங்கேற்றுகிறாரா?

அதேபோல நளினியின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க சோனியா மனிதநேய உணர்வோடு பரிந்துரைத்ததை தேசவிரோதச் செயல் என்று விமர்சனம் செய்த ஜெயலலிதா இன்று 7 பேருக்காக நாடகம் ஆடுவது ஏன்?

2008 ஆம் ஆண்டில் ராமேஸ்வரம் பொதுக்கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, ‘ராஜீவ் கொலை ஒரு தேசிய பிரச்சினை; இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால். இதில் சோனியா காந்தி தலையிடக் கூடாது” என்று பேசியதை எவராவது மறந்துவிட முடியுமா?

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை ராஜீவ் கொலையாளிகள் தண்டிக்கப்படுவதை நீதிமன்றத்தின் போக்கிற்கே விட்டுவிடுவதைத் தான் அணுகுமுறையாக கொண்டிருக்கிறது. இதில் நீதிமன்றம் எந்த முடிவெடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்ள காங்கிரஸ் கட்சி தயாராக இருக்கிறது.

மாறாக உணர்ச்சிகளை தூண்டி அரசியல் ஆதாயம் தேடுகிற அ.தி.மு.க.வின் முயற்சியை தமிழக மக்கள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள். சாம, பேத, தான, தண்டங்களை பயன்படுத்தி எப்படியாவது 2016 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு இத்தகை நாடகத்தை ஜெயலலிதா நடத்தி வருகிறார்.

இதை தமிழக மக்கள் நிச்சயம் அனுமதிக்க மாட்டார்கள்.