நாளை மறுநாள் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு: கர்நாடகாவில் இன்று மாலை பிரச்சாரம் ஓய்கிறது; இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தலைவர்கள் தீவிரம்

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைவதால் பிரதமர் நரேந்திர மோடி தனது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளார். அவர் நேற்று சிக்மகளூரு நகரில் பிரச்சாரம் செய்தார். கர்நாடகாவில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்று பிரார்த்தனை மேற்கொண்டு வருகிறார். பெங்களூருவில் காட்டன்பெட் பகுதியில் உள்ள தர்காவுக்கு அவர் நேற்று சென்றார்.

கர்நாடகா சட்டப்பேரவைத் தேர் தல் வாக்குப்பதிவு நாளை மறு நாள் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைவதால் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலை வர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இறுதி கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கர்நாடகாவில் கடந்த 2013-ல் தேர்வு செய்யப்பட்ட‌ முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின் பதவிக் காலம் வருகிற 28-ம் தேதியுடன் நிறைவடைகிறது. புதிய அரசை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஏற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் தலைமையில் தேர்தல் ஆணை யம் மேற்கொண்டு வருகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த ஏப். 17-ம் தேதி தொடங்கி ஏப். 24-ம் வரை நடைபெற்றது.

மொத்தமுள்ள 224 தொகுதிகளில், ஒரு தொகுதி தவிர மற்ற 223 தொகுதிகளில் வருகிற‌ சனிக் கிழமை ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. பெங்களூரு ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் விஜய்குமார் அண்மையில் காலமானதால் அங்கு தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 223 தொகுதிகளில் பாஜக 223 தொகுதிகளிலும், ஆளும் காங்கிரஸ் 222 தொகுதிகளிலும், மஜத- பகுஜன் சமாஜ் கூட்டணி 220 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. இது தவிர மார்க்சிஸ்ட், ஆம் ஆத்மி, இந்திய குடியரசு கட்சி, அதிமுக, சுயேச்சைகள் உட்பட மொத்தமுள்ள 223 தொகுதிகளில் 2654 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

மும்முனைப் போட்டி

இந்த தேர்தலில் கர்நாடக முதல்வர் சித்தராமையா சாமுண்டீஸ்வரி மற்றும் பாதாமி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். மஜத முதல்வர் வேட்பாளர் குமாரசாமி சென்னபட்னா, ராம்நகர் ஆகிய இரு தொகுதிகளிலும் பாஜக முதல்வர் வேட்பாளர் ஷிகாரிபுரா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். 5 தொகுதிகள் நீங்கலாக மற்ற 219 இடங்களில் காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய 3 கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் 200 தொகுதிகளில் காங்கிரஸும் பாஜகவும் நேருக்கு நேர் மோதுகின் றன.

இதனால் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய அமைச்சர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதேபோல காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அதன் தலை வர் ராகுல் காந்தி, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார் ஜுன கார்கே, முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் மாநிலம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டனர்.

காங்கிரஸ், பாஜகவுக்கு ஈடுகொடுக்கும் வகையில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, மஜத முதல் வர் வேட்பாளர் குமாரசாமி, உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி ஆகியோர் அக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர். இதனிடையே காங்கிரஸ், மஜத, மார்க்சிஸ்ட், ஆம்ஆத்மி ஆகிய கட்சிகள் சார்பாக தலா ஒரு தொகுதியில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்களை ஆதரித்து தமிழ் அமைப்பினர் பிரச்சாரம் செய்தனர். அதி முக வேட்பாளர் 4 பேர், இந்திய குடியரசு கட்சி 4 பேர் மற்றும் சுயேச்சைகள் உட்பட களமிறங்கியுள்ள 20-க்கும் மேற்பட்ட தமிழ் வேட்பாளர்களை ஆதரித்தும் பிரச்சாரம் நடந்தது.

மோடி – ராகுல் கடும் மோதல்

கடந்த மே 1-ம் தேதி கடைசி கட்ட பிரச்சாரத்தை தொடங்கிய மோடி 5 நாட்களில் 15 கூட்டங்க ளில் பேசினார். நமோ ஆப் மூலம் 5-க்கும் மேற்பட்ட கூட்டங்களில் பேசினார். அப்போது காங்கிரஸ், அதன் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் சித்தாரமையா ஆகியோரை கடுமையாக விமர்சித்தார். இதற்கு பதிலடியாக ராகுல் காந்தியும் சித்தராமையாவும் மோடி, எடியூரப்பா ஆகியோரை கடுமையாக தாக்கி பேசினர். மோடிக்கும் ராகுல் காந்திக்குமான மோதல் தேர்தல் களத் தில் மட்டுமல்லாமல் ட்விட்டரிலும் அனல் பறந்தது.

இதேபோல ராகுல் காந்தி முன் னாள் பிரதமர் தேவகவுடாவை யும் மஜதவையும் கடுமையாக விமர்சித்தார். ஆனால் கர்நாடகாவில் தொங்கு சட்டப்பேரவை அமையும் என கருத்துக் கணிப்புகள் வெளியானதால் தேவகவுடாவை மோடி பெரிதாக விமர்சிக்கவில்லை. இதனால் பாஜகவுக்கும் மஜதவுக்கும் ரகசிய கூட்டணி இருப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

பிரச்சாரம் ஓய்கிறது

தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கர்நாடகாவில் பகிரங்க பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து வெள்ளிக்கிழமை காலை 7 மணி வரை வேட்பாளர்கள் ஒலி பெருக்கி இல்லாமல் வீடுகளுக்கு சென்று வாக்கு சேகரிக்கலாம். அதன்பிறகு அனைத்துக் கட்ட வகையான பிரச்சாரமும் ஓய்ந்து, வருகிற சனிக்கிழமை 223 தொகுதிகளில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

கர்நாடகாவில் மொத்தமுள்ள 4.96 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் 56,696 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் வாக்களித்த பின்னர் வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்து கொள்ளும் வகையில், ஒப்புகைச் சீட்டு வழங்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் பதிவான வாக்குகள் வரு கிற 15-ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

கர்நாடகாவில் இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்வதால் மோடி, ராகுல் காந்தி, அமித் ஷா, சித்தராமையா, தேவகவுடா, குமாரசாமி உள்ளிட்ட தலைவர்கள் இறுதிகட்ட பிரச்சார‌த்தில் ஈடுபட்டுள்ளனர். 2019 மக்களவை தேர்தலுக்கான முன்னோட்டமாக, இந்த தேர்தல் கருதப்படுவதால் கர்நாடக தேர்தல் முடிவுகள் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.