பயங்கர விபத்தில் ரிஷப் பண்ட் படுகாயம்

தற்போது ரிஷப் பண்ட் உடல் நிலை சீராக இருப்பதாகவும், ஆபத்தான நிலை எதுவும் இல்லை என்று பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பண்ட் தனது மெர்சிடஸ் காரை ஓட்டிக் கொண்டு உத்தராகண்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது ரூர்கி அருகே அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி சாலைத் தடுப்பில் மோதித் தீப்பிடித்து எரிந்தது. எரியும் காரிலிருந்து முன்-கண்ணாடியை உடைத்துத் தீக்காயங்களுடன் தப்பியுள்ளார் ரிஷப் பண்ட். அவர் தலை, கால்கள் மற்றும் முதுகில் படுகாயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது டேராடூனில் உள்ள மாக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் ரிஷப் பண்ட்.

இந்த விபத்து தொடர்பாக டிஜிபி அசோக் குமார் கூறும்போது, “இன்று அதிகாலை ரிஷப் பண்ட் ஓட்டி வந்த கார் 5:30 மணியளவில் விபத்துக்குள்ளானது. ரூர்கி அருகில் உள்ள முகமதுபூர் ஜாட் என்ற இடத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. ரிஷப் பண்ட் கூறியதன் படி கார் ஓட்டும்போது அதிகாலை நேரம் என்பதால் சற்றே தூங்கியிருக்கிறார். கண் அசந்த நேரத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் இடித்து தீப்பிடித்தது. அதிலிருந்து கண்ணாடியை உடைத்து உயிர் தப்பினார் ரிஷப் பண்ட். முதலில் ரூர்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது டேராடூன் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்” என்றார்.