தலைமன்னாரிலிருந்து கொழும்பு வரையான புகையிரத சேவைகள், கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக நிறுத்தப்பட்டிருந்தன. கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட புயல் காரணமாக, தலைமன்னாரிலிருந்து கொழும்பு செல்லும் புகையிரதப் பாதையில் ஏற்பட்ட பாதிப்புகளே இந்தச் சேவை நிறுத்தத்திற்குக் காரணமாக அமைந்தன.
தற்போது குறித்த புகையிரதப் பாதைகள் புனரமைப்புச் செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமன்னாரிலிருந்து கொழும்பு வரையான புகையிரதச் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க இலங்கை புகையிரதத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைவாக, இன்றைய தினம் மதியம் மதவாச்சியிலிருந்து தலைமன்னார் வரை புகையிரத சேவைக்கான பரிசோதனை நடவடிக்கை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
விரைவில் தலைமன்னாரிலிருந்து கொழும்பு வரையான புகையிரத சேவைகள் வழமைபோல் இடம்பெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.