மகனைப் பார்த்தே இருபது நாளாச்சு!- உருகும் கேரளத்தின் ஆண் செவிலியர்

அர்ப்பணிப்பு உணர்வோடு மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்ததாலேயே இது சாத்தியமானது என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா நெகிழ்ச்சியோடு தெரிவித்தார். கோட்டயம் அரசு மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த வயோதிகத் தம்பதியருக்கு சிகிச்சையளித்த செவிலியர் ரேஷ்மாவுக்கும் கரோனா தாக்கியது. தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் அவரும் நோய்த் தொற்றில் இருந்து மீண்டார். அந்த சந்தோஷம் கோட்டயம் அரசு மருத்துவமனை முழுவதும் இப்போதும் எதிரொலிக்கிறது.

கரோனாவுக்கான மருத்துவக் குழு ஒருபுறம் என்றாலும், இன்னொருபுறம் செவிலியர்கள் கோட்டயத்தின் பல்வேறு பகுதிகளிலும் கரோனா குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வூட்டி வருகின்றனர். ஊரடங்கு நேரத்தில் மருத்துவப் பணியும், விழிப்புணர்வுப் பணியுமாக நகர்கின்றன செவிலியர்களின் பொழுதுகள். அவர்களில் விபின் சாண்டியும் விழிப்புணர்வுக் களத்தில் இருக்கிறார். கோட்டயம் அரசு மருத்துவமனையின் ஆண் செவிலியரான இவர், கேரள அரசு செவிலியர் சங்கத்தின் கோட்டயம் மாவட்டச் செயலாளரும் ஆவார்.

கரோனா பணிகள் குறித்து விபின் சாண்டி நம்மிடம் பேசுகையில், “கரோனா நோய்த் தொற்றுக்கு ஆளாகி மீண்ட ரேஷ்மாவும், நானும் கோட்டயம் அரசு மருத்துவமனையின் ஆபரேஷன் வார்டில் பணி செய்தோம். அவருக்கு மட்டும் கரோனா வார்டில் பணி வழங்கப்பட்டது. நான் விழிப்புணர்வுப் பணியில் இருந்தேன். சக செவிலியர் ஒருவருக்குக் கரோனா வந்ததும் முதலில் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஆனால், ரேஷ்மா அர்ப்பணிப்பு உணர்வோடு செவிலியர் பணியைச் செய்ததால் அதை ஏத்துகிட்டாங்க.

அலாதியான தன்னம்பிக்கைதான் சீக்கிரமே அவங்கள கரோனாவில் இருந்தும் மீட்டுக் கொண்டு வந்துச்சு. செவிலியர்கள்னு இல்ல… மருத்துவர்கள், மருத்துவமனைப் பணியாளர்கள் எல்லோருக்குமே ரேஷ்மா கரோனாவில் இருந்து மீண்டுவந்தது பெரிய உற்சாகத்தைக் கொடுத்துச்சு. ரேஷ்மாவை வாசல்வரை போய் வழியனுப்பி வைச்சோம். எங்க அத்தனை பேருக்குமான எனர்ஜி டானிக்காவும் ரேஷ்மா இன்னிக்கு மாறியிருக்காங்க.

என்னோட சொந்த ஊரு ஆலப்புழா. வேலைசெய்யும் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து 40 கிலோ மீட்டர். இது தொற்றுநோயை ஒழிக்க வேண்டிய பேரிடர்க் காலம் என்பதால் ஆஸ்பத்திரி பக்கமே ரூம் எடுத்து தங்கியிருக்கேன். இங்க கோட்டயம் முழுமைக்கும் கரோனா விழிப்புணர்வு பணியிலும் ஈடுபட்டு இருக்கேன்.

என்னோட ரெண்டரை வயசு பையன் மனுவேலைப் பார்த்தே இருபது நாளாச்சு. அவன் ’அச்சா’ன்னு போன்ல சிணுங்குற நேரம் கண்ணுல தண்ணீர் கட்டும். என்னோட மனைவியும் அரசு செவிலியர்தான். பத்தனம்திட்டா மாவட்டத்தின் திருவல்லா தாலுகா ஆஸ்பத்திரியில் கரோனா மருத்துவக்குழுவில் டியூட்டியில் இருக்காங்க. பையன் எங்க ரெண்டு பேரையும் ரொம்பவே மிஸ் பண்றான்.

ஆனால், எங்களைப் போன்ற செவிலியர்களுக்கு இதுதான் வாழ்க்கையில முக்கியமான காலகட்டம். கரோனாவை சமூகப் பரவல் ஆகாமத் தடுக்குற முனைப்பில நாங்களும் எங்களை அர்ப்பணிச்சிக்கிட்டோம். கோட்டயம் அரசு மருத்துவமனையில் முக்கிய ஆப்ரேஷன்கள் போக மத்ததைத் தள்ளிவைச்சுட்டு கரோனா ஒழிப்பில் கவனமா இருக்காங்க. அரசுக்கு முதுகெலும்பா செவிலியர்கள் தொடர்ந்து இயங்குவோம்” என்று நெகிழ்ந்தார்.