மதுரோவுக்கு வெற்றி; புதிய தடைகள் வரும்?

வெனிசுவேலாவின் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள தற்போதைய ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோ, அடுத்த 6 ஆண்டுகளுக்கும் ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ளார். ஆனால், அவரது இவ்வெற்றி, வெனிசுவேலா மீது புதிய தடைகளைக் கொண்டுவருமென எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று முன்தினம் (20) இடம்பெற்ற வாக்கெடுப்பில், ஜனாதிபதி மதுரோவுக்கு 5.8 மில்லியன் வாக்குகள் கிடைத்தன. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரதம வேட்பாளர் ஹென்றி ஃபல்கொன்னுக்கு, 1.8 மில்லியன் வாக்குகள் கிடைத்தன.

ஜனாதிபதி மதுரோவின் நடவடிக்கைகள், அவரைப் பலப்படுத்துவதாகவும், ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைப்பதாகவும் உள்ளன எனக் குற்றஞ்சாட்டி, எதிர்க்கட்சிகள் அனைத்தும் இத்தேர்தலைப் புறக்கணித்திருந்தன. அப்புறக்கணிப்பை மீறியே, ஹென்றி ஃபல்கொன் போட்டியிட்டிருந்தார்.

இத்தேர்தலில், வாக்களிக்கத் தகுதிபெற்ற வாக்காளர்களில் 46 சதவீதமானோரே வாக்களித்திருந்தனர். இதற்கு முன்னர் 2013ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில், 80 சதவீதமானோர் வாக்களித்திருந்த நிலையில், தேர்தலைப் புறக்கணிக்குமாறு எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையை, மக்களில் கணிசமானோர் ஏற்றுக் கொண்டிருந்தனர் என்றே கருதப்படுகிறது.

ஜனாதிபதி மதுரோவின் கீழ் இடம்பெற்ற ஏனைய தேர்தல்களைப் போன்று, இத்தேர்தலிலும் மோசடிகள் இடம்பெற்றன என, எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. குறிப்பாக, நாடு முழுவதிலும், தேர்தல் வாக்குச்சாவடிகளுக்கு அண்மையில், அரசாங்கத்துக்கு ஆதரவான நிலையங்கள் அமைக்கப்பட்டு, வாக்களித்த மக்களுக்கு, “தந்தை நாட்டு அட்டைகள்” எனப்படும் ஒருவகையான அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றைக் காண்பிப்பதன் மூலமாக, உணவுப் பொருட்களையும் ஏனைய உதவிகளையும் பெற முடியும். இதனால், வறிய வாக்காளர்கள், உதவிகளைப் பெறுவதற்காகவே வாக்களித்தனர்.

இது, வாக்குகளை விலைக்கு வாங்குவது போன்றதாகவும் என, எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.

அதேபோல், நாட்டின் சட்டங்களும் விதிமுறைகளும், எதிர்க்கட்சிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக மாற்றப்பட்டுள்ளன என, எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டுகின்றன.

நாட்டின் பொருளாதாரம், மிக மோசமான நிலையை அடைந்துள்ளதோடு, நாட்டின் பணவீக்கம், ஆண்டுக்கு 14,000 சதவீதம் என்ற மோசமான நிலையில் காணப்படுகிறது. எனவே, இத்தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜனாதிபதி மதுரோ, கடுமையான சவால்களை எதிர்கொள்கிறார்.

அதிலும், இத்தேர்தல் முடிவுகளை, பெரும்பாலான மேற்கத்தேய நாடுகள் ஏற்றுக்கொள்ளாத நிலையில், புதிய தடைகளை விதிப்பது தொடர்பாகவும் ஆராயப்படுகிறது. அப்படியான போது, அவர் மீதான அழுத்தங்கள் இன்னும் அதிகரிக்குமெனக் கருதப்படுகிறது.