மாலை 4:30முதல் காலை 8.30 வரை விமானங்கள் பறக்கும்

கட்டுநாயக்க, பண்டரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விமான நிலைய ஓடுபாதையின் திருத்தப் பணிகள், ஜனவரி மாதம் 6ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி வரை 28 நாட்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்தக் காலப்பகுதியில் விமான நிலையத்தின் ஊடான சர்வதேச விமான பயணங்கள், மாலை 4.30இல் இருந்து அடுத்த நாள் காலை 8.30 வரை இடம்பெறவுள்ளது. உள்நாட்டு விமான பயணங்கள் இரத்மலானை விமான நிலையத்தின் ஊடாக இடம்பெறும் என்று போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிர்மாணப்பணிகளுக்காக செலவிட உத்தேசிக்கப்பட்டுள்ள மொத்த தொகை 7 பில்லியன் ரூபாயாகும். நெதர்லாந்து நாட்டின் உசாத்துணை நிறுவனம் ஒன்றின் மேற்பார்வையில் சீன நாட்டு நிறுவனங்கள் இரண்டு இந்த நிர்மாண பணிகளை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. விமான நிலையத்தின் நிர்வாக நேரக் கட்டுப்பாடு காரணமாக பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்கும் வகையில் ஜனவரி மாதம் 6ஆம் திகதி முதல் விமான நிலையத்தின் வெளிச்செல்லல் பிரிவின் வருகையாளர்கள் முழுமையாக மட்டுப்படுத்தப்படும் என்றும் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது.