யார் இந்தக் கரப்பான்கள்?இந்திய உச்ச நீதிமன்ற நீதியரசர், அரசை விமர்சிக்கும் வேலையற்றிருக்கும் இளையோரை, இவர்கள் வேலைக்காகாதவர்கள் என்ற பொருள்படும் வகையில், ‘கரப்பான்பூச்சிகள்’ என்றுவிமர்சித்தார்.அதை எதிர்த்து ‘வேடிக்கையாக’ இணைய வழியில் அபிஜீத் டிப்கே என்ற இளைஞர் தொடங்கியதுதான் இந்தக் கரப்பான்பூச்சி ஜன்தா கட்சி – Cockroach Jantha Party (CJP).
இதன் Instagram பக்கத்தில் மட்டும் இதுவரை 20 மில்லியன் பேர் இணைந்திருக்கிறார்கள். இத்தனைக்கும் இது தொடங்கி மூன்று வாரங்கள்தான் ஆகின்றன.
ஜென்ஸீ – Gen Z இளைஞர் யுவதியரின் System மீதான – அமைப்பு மீதான கோபமும் விமர்சனப் பார்வையும் உருத்திரளும் தளமாக இப்போது இந்த CJP மாறியிருக்கிறது.
இதன் ஸ்தாபகர் அபிஜீத் டிப்கே அமெரிக்காவில் பொஸ்டன் பல்கலைக்கழகத்தில் படித்த பட்டதாரி. அரசியல் தொடர்பாடலில் பட்டம் பெற்றவர். முன்னர் ஆம் ஆத்மி கட்சியின் ஆதரவாளராக இருந்திருக்கிறார். (படத்தில் நடுவே நின்று பேசுபவர்).

பொதுப் பரீட்சைகளில் நடக்கும் ஊழல் ஒழுங்கீனங்களுக்கு எதிராக ஒரு மக்கள் எதிர்ப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். அதில் ஜென்ஸீக்களைக் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். அவர்களுக்கு ஆதரவாக பெரியோரையும் கலந்துகொள்ளுமாறு கோரினார்.
இடதுசாரி மாணவர் அமைப்புகளும் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட பல தரப்பினரும், இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
நடிகரும் தெளிந்த பார்வை கொண்டவருமான பிரகாஷ் ராஜ் கூட இதற்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.சமீபத்தில் நீட் பரீட்சையில் இடம்பெற்ற வினாத்தாளை லீக் செய்தது போன்ற குளறுபடிகள், இந்தியாவில் கடும் விமர்சனைத்தை ஏற்படுத்தியது.
கடின முயற்சி செய்து படித்த மாணவர்கள் பெரும் மனச்சோர்வுக்கு ஆளாகினர்.அதையடுத்து இந்திய மத்திய அரசின் கல்வி அமைச்சரான தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை, இந்த கரப்பான்பூச்சி கட்சியினர் முன்னெடுத்து வருகின்றனர். அதுவே மேற்படி ஆர்ப்பாட்டத்தின் முதன்மையான கோரிக்கை.
இந்திய இளைஞர்களின் எதிர்ப்பு இயக்கமாக – அரசியல் இயக்கமாக இந்த CJP வடிவம் பெற்றிருக்கிறது. நேற்றைய ஆர்ப்பாட்டம்தான் அதன் முதல் கள செயற்பாடு.
இலங்கை, பங்களாதேஷ், நேபாளம் ஆகிய நாடுகளில் இடம்பெற்ற இளம் தலைமுறையினரின் அரசாங்கத்திற்கு எதிரான கலகக் குரலாக இதுவும் மாறுமா என்று பலரும் இது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தென்னாசிய அரசியல் போக்கின் புதிய பரிமாணமாக இதுவும் வளரக் கூடும். ஆனால், ஆரம்ப கட்டமான இப்போதே அதைக் கணிப்பது பொருத்தம் அல்ல. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மோடியின் பாஜக அரசாங்கத்தை இந்தக் கரப்பான்கள் விமர்சிக்கின்றனர்.
இணைய வெளியில் பாஜக வை எண்ணிக்கையில் மிகைத்து விட்டனர்.
களம் என்ன சொல்லும்? காலம் என்ன சொல்லும்?கரப்பான்கள் இனி என்ன செய்வார்கள்?காத்திருந்து பார்ப்போம்