நாளை பிறக்கவுள்ள புத்தாண்டை வரவேற்க யாழ்ப்பாணத்து மக்கள் புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புப் பண்டங்கள் மற்றும் புத்தாண்டுக்குத் தேவையான ஏனைய அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதில் ஈடுபட்டு வருகின்றனர்.
யாழ். நகரின் பிரதான வர்த்தக நிலையங்களில் மக்கள் நடமாட்டம் ஓரளவு காணப்பட்டாலும், கடந்த காலங்களைப் போன்றதொரு உற்சாகம் கொள்வனவில் தென்படவில்லை.பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளமையால், அவற்றை கொள்வனவு செய்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகப் பொதுமக்கள் குறிப்பிடுகின்றனர்.
குறிப்பாக, எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு விலையேற்றம் காரணமாகப் போக்குவரத்து மற்றும் உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளன. இவை புத்தாண்டைச் சந்தோஷமாக் கொண்டாடுவதற்குப் பெரும் தடையாக இருப்பதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
மக்களிடம் போதியளவு பணப்புழக்கம் இல்லாததால், வியாபாரம் இம்முறை வீழ்ச்சியடைந்துள்ளதாக யாழ். வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மக்கள் அத்தியாவசியப் பொருட்களை மாத்திரம் குறைந்தளவில் கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டுவதால், வர்த்தக நடவடிக்கைகள் எதிர்பார்த்த மட்டத்தில் அமையவில்லை என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.