இரு தரப்பினருக்கும் இடையே இந்த விவகாரம் இழுபறியாக நீடித்துவருவதால், நாளாந்தம் பல்லாயிரக்கணக்கில் வந்து செல்லும் மக்களின் தேவைக்கான இந்த மலசலகூடக் கட்டடத் தொகுதி, இன்னமும் பாவனைக்கு விடப்பட முடியாத நிலையில் உள்ளது.
இது குறித்து யாழ் மாநகரசபையின் முன்னாள் முதல்வர் மேலும் கூறுகையில்:
“பல்வேறு தரப்பினரது கோரிக்கையின் அடிப்படையில், எமது ஆட்சிக் காலத்திலேயே இந்த பொது மலசலகூடக் கட்டட நிர்மாணத்திற்காக யாழ் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் திட்ட முன்மொழிவு செய்யப்பட்டு, அதற்கான அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது.
யாழ் மாநகரசபையின் முழுமையான நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட குறித்த மலசலகூடத் தொகுதியை, கடந்த மாதம் குத்தகைக்கு விடுவதற்கான விண்ணப்பத்தை யாழ் மாநகரசபை ஊடகங்கள் வாயிலாகக் கோரியிருந்தது. இந்நிலையில், இ.போ.ச வினர் குத்தகை வழங்கலைத் தன்னிச்சையாக மாநகரசபை கோரியுள்ளதாகத் தெரிவித்ததை அடுத்து இந்த இழுபறி நிலை உருவாகியுள்ளது.
இரு சபைகளும் மக்களுக்கான சேவையை முன்னெடுக்கும் பொது நிறுவனங்களாக இருக்கும் நிலையில், மக்கள் நலன் சார்ந்த விடயத்தில் இவ்வாறு முரண்படுவது ஆரோக்கியமானதல்ல.
கடந்த காலத்தில் ஈ.பி.டி.பி யாழ் மாநகரசபையை ஆட்சி செய்த காலப்பகுதியில், யாழ் பேருந்து நிலைய சூழலில் மக்களின் வாழ்வாதார நோக்குடன் பழக்கடைகளை அமைப்பதற்கு மாநகரசபை மற்றும் இ.போ.ச ஆகியன வருமானத்தைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் இணக்கப்பாடு எட்டப்பட்டது. அது இன்றும் வெற்றிகரமாகச் செயற்பட்டு வருகின்றது.
அதேபோன்றதொரு இணக்கப்பாட்டை இவ்விடயத்திலும் இரு தரப்பினரும் கலந்துரையாடல் மூலம் எட்ட வேண்டும். மக்களின் நலன்களுக்காகவும், குறித்த மலசலகூடத் தொகுதி அமைக்கப்பட்டதன் நோக்கத்தைக் கருதியும் சுமுகமான தீர்வை எட்டுவதே சிறந்தது,” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.