வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் கோரிக்கை

வடக்கு, கிழக்கை சேர்ந்த தமிழ்ப் பெண்கள் மற்றும் முஸ்லிம் பெண்களின் ஓவியக் கண்காட்சி மற்றும் சுவரோவிய நிகழ்ச்சி யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

சிறுபான்மையினர் கூட்டமைப்பு மற்றும் செல்வநாயகம் நினைவு அறக்கட்டளை ஆகியவை இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

இந்த கண்காட்சி நாளை (02) கிளிநொச்சியிலும் நடைபெறவுள்ளது.
ஒக்டோபர் 1990 இல் வடக்கு மாகாணத்தில் இருந்து முஸ்லிம் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டதை நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

1990 ஒக்டோபர் 15 முதல் 30 வரையான காலப்பகுதியில் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியாவின் சில பகுதிகள் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 75,000 முதல் 100,000 வரையிலான முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

வெளியேற்றப்பட்ட மக்கள் பெரும்பாலும் புத்தளம் மாவட்டத்தில் தஞ்சம் புகுந்ததுடன், சிலர் அநுராதபுரம், கண்டி, கொழும்பு போன்ற பகுதிகளிலும் தஞ்சமடைந்தனர்.

இவர்களில் சிலர் இன்றுவரை இடம்பெயர்ந்த நிலையிலேயே உள்ளனர்.
“பலவந்தமாக வெளியேற்றப்பட்டவர்கள் சங்கம்-1990” இனால் நேற்று (31) புத்தளத்தில் அமைதியான முறையில் “கறுப்பு ஒக்டோபர் 2025” நினைவுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

வெளியேற்றப்பட்ட மக்களின் வரலாற்று அநீதியை அரசாங்கம் அங்கீகரித்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள், காணி உரிமை மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளை உறுதிப்படுத்த அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.