1935ல் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது அரசியல் கட்சியும்,இடதுசாரிக்கட்சியுமான லங்கா சமசமாஜக்கட்சியில் இணைந்து கொண்டு மக்கள்பணியாற்றியவர். கட்சியில் சேரும்போது அவரின் வயது 25.அவர் அரசியலில் நுழைந்தகாலகட்டம் வித்தியாசமானது.
ஒருபக்கம் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் ஆட்சியும்,, மறுபக்கத்தில் அவர்களின் ஆதரவுபெற்ற உயர்சாதி மேட்டுக்குடியினரின் சாதி ஒடுக்குதலும் நிலவிய காலகட்டமுமாகும்.இருந்தும் தோழர் தர்மகுலசிங்கம் ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் பக்கம் நின்றார். அவர்களது உரிமைகளுக்காகவும், விமோசனத்துக்காகவும் அயராது பாடுபட்டார்.
இவரது இப்பணிக்கு சாதிவெறியர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு இருந்தது. ஆயினும் அவர் பின்வாங்காது செயற்பட்டார்.அத்துடன்,தொழிலாளர்களின் உரிமைக்காக தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு அவர்களது உரிமைகளைப்பெற்றுக்கொடுத்தார்.
இலங்கை சுருட்டுத்தொழிலாளர் சங்கம்,பஸ் தொழிலாளர் சங்கம் போன்றவற்றை உருவாக்கியவர் என்பது முக்கியமானது.அத்துடன்வீட்டுக்குள் முடங்கியிருந்த பெண்களின் விடுதலைக்காக அமைப்புகளை நிறுவினார்.
கிராமிய மக்களின் கல்வியறிவை அதிகரிக்க வாசிகசாலைகளையும்,, சனசமூக நிலையங்களையும் உருவாக்கினார். இளைஞர்களின் உடல்ஆற்றலை மேம்படுத்த விளையாட்டுக்கழகங்களை உருவாக்கினார்ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நீதிமன்றங்களில் வாதாடி அம்மக்களுக்கு பலமாக இருந்தார்.
அதனால் அம்மக்கள் அவரை தமது தனிப்பெரும் தலைவராக மதித்தனர்.அரசியலை பொறுத்தவரை, வடபகுதியில் இடதுசாரிக்கட்சியையும், அதன் தொழிற்சங்க இயக்கத்தையும் கட்டியெழுப்பியதில் தோழர் தர்மகுலசிங்கமே முன்னோடியாகத்திகழ்ந்தார்.
1947இல் பாராளுமன்றத்தேர்தலில் பருத்தித்துறை தேர்தலில் போட்டியிட்டு கணிசமானவாக்குகளைப்பெற்று இரண்டாவதாக வந்தார். இத்தேர்தலில் தோழர் பொன் கந்தையாவும் போட்டியிட்டதால் தமிழ் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெறமுடிந்தது.
வடமராட்சியில் அன்று தோழர் தர்மகுலசிங்கம் ஜீ. ஜீ. பொன்னம்பலத்துக்கு பெரும் சவாலாகத்திகழ்ந்தவர் என்பது குறிப்பிடப்படவேண்டியது.மிகக்குறுகிய காலமான 39 வருடங்களே வாழ்ந்த போதிலும் வடபகுதியில் இடதுசாரி இயக்கத்தையும், தொழிற்சங்க இயக்கத்தையும் கட்டியெழுப்பியதில்அவர் வகித்த ஸ்தாபகப்பாத்திரம் காலத்தால் அழியாதது.
தோழர் தர்மகுலசிங்கம் காலமாகி 75ஆண்டுகள் கடந்து போன நிலையில் அவரை நினைவு கூறும் வகையில் இது பதிவிடப்பட்டுள்ளது.