விஜய் மீது பொறாமையா?: ரஜினிகாந்த் விளக்கம்

அப்போது அவர் பேசியதாவது:

“தேர்தல் முடிவுகள் வெளியானதும் நான் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்தேன். அது பலதரப்பட்ட விமர்சனங்களுக்கு உள்ளானது. அவர் என்னுடைய 40 ஆண்டுகால நண்பர்; எங்கள் நட்பும் பாசமும் அரசியலுக்கு அப்பாற்பட்டது. ஜனநாயகத்தில் வெற்றி தோல்வி என்பது சகஜம்தான். இருந்தாலும், மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்தது எனக்கு மிகுந்த மனசங்கடத்தைத் தந்தது. அதனால்தான், ஒரு நண்பராக அவரை நேரில் சென்று பார்த்தேன்.

ஆனால், விஜய் முதலமைச்சர் ஆகக் கூடாது என்பதற்காகத்தான் நான் மு.க.ஸ்டாலினைச் சந்தித்தேன் என்றெல்லாம் தரம் தாழ்ந்து விமர்சித்தார்கள். அப்படியான தரம் கெட்ட நபர் ரஜினிகாந்த் அல்ல. விஜய் வெற்றி பெற்றதும் ‘எக்ஸ்’ (ட்விட்டர்) தளத்தில் என்னுடைய வாழ்த்துகளை உடனே பதிவிட்டேன். விமான நிலையத்தில் விஜய் குறித்த கேள்விக்கு நான் பதில் சொல்லாமல் சென்றதை வைத்துப் பலவாறு பேசுகிறார்கள்.

விஜய் மீது எனக்குப் பொறாமை என்றும் கூறுகிறார்கள். நான் அரசியலிலேயே இல்லை என்று ஒதுங்கிவிட்டேன். அப்படியிருக்கும்போது எனக்கு ஏன் விஜய் மீது பொறாமை வரப்போகிறது? ஒருவேளை கமல் முதலமைச்சராக இருந்திருந்தால் கூட எனக்குப் பொறாமை இருந்திருக்காது. ‘கிடைக்கிறது கிடைக்காமல் இருக்காது; கிடைக்காமல் இருப்பது கிடைக்காது’ என்பதுதான் என் கொள்கை.

எனக்கும் விஜய்க்கும் ஒரு தலைமுறை இடைவெளி; கிட்டத்தட்ட 25 ஆண்டுகால வித்தியாசம் உள்ளது. அதனால்தான் நான் ஏற்கனவே சொன்னேன், ‘விஜய் என்னுடன் போட்டியிட்டால் அது எனக்கும் நல்லதல்ல, அவருக்கும் நல்லதல்ல’ என்று. சிறு வயதிலிருந்தே நான் அவரைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். விஜய் முதலமைச்சரானது எனக்கு ஏன் பொறாமையைத் தரப்போகிறது?

விஜய் மிக இளம் வயதில் முதலமைச்சராகியிருக்கிறார். தமிழகத்தின் இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளை எதிர்த்துத் தனி ஆளாக நின்று வென்றிருக்கிறார். அது எனக்குப் பொறாமை அல்ல; மாறாக ஆச்சரியம் கலந்த சந்தோஷத்தைத் தந்துள்ளது. விஜய்யிடம் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது; அதை அவர் நிச்சயம் நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன்.

நான் ஏன் அரசியலுக்கு வரவில்லை என்பதற்கான காரணத்தை அன்றே மூன்று பக்க அறிக்கையாக வெளியிட்டேன். அரசியல் வேறு, சினிமா வேறு. உடல்நலன் சரியில்லை என்றாலும் சினிமாவில் நடிக்கலாம்; அது தயாரிப்பாளர் போட்ட பணம், அதற்காக நடித்துத்தான் ஆக வேண்டும். ஆனால் அரசியல் அப்படியல்ல.

வெறும் சம்பிரதாயத்திற்காக விஜயைச் சந்திப்பதில் எனக்கு உடன்பாடில்லை. மக்கள் விஜய்க்கு இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் கொடுக்க வேண்டும்; அவரை எந்தத் தொந்தரவும் செய்யக் கூடாது. தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் ஏதேனும் தவறு செய்தால், அது விஜயைத்தான் நேரடியாகப் பாதிக்கும்.

தமிழகத்தில் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பெரும் மாற்றத்தை மக்கள் எதிர்பார்த்தார்கள்; அதன் மூலமாகவே விஜய் இப்போது முதலமைச்சராகியுள்ளார். நான் பொதுவாக முதலமைச்சர்களின் பதவியேற்பு விழாக்களில் கலந்துகொள்வதில்லை.

கலைஞர் கருணாநிதி இருந்தபோதே நான் பதவியேற்பு விழாக்களுக்குச் சென்றதில்லை. ஒருவேளை நான் அரசியலுக்கு வந்திருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருப்பேன்; அதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை” என்றார்.

Leave a Reply