விவசாயிகள் சங்கத்தினர் கைதாகி விடுதலை

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாகவும், புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் சென்னையில் நேற்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றனர்.

சின்னமலையில் இருந்து ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணியாக செல்ல முயன்றவர்களை பொலிஸார் தடுத்தனர். இதனால், அவர்கள் அங்கேயே சாலையில் அமர்ந்து கோஷம் எழுப்பினர். அதைத் தொடர்ந்து விவசாயிகள் பேரணியாக நடந்து வர அனுமதிக்கப்பட்ட னர். சிறிது தூரத்தில் அவர்கள் தடுத்து நிறுத்தப் பட்டனர்.

அப்போது, வேளாண் சட்டங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த துண்டு பிரசுரத்தை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வெளியிட்டார். தமிழ்நாடு மணல் லொறி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் பெற்றுக்கொண்டார்.

பேரணியில் பங்கேற்ற பி.ஆர்.பாண்டியன், தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு பொதுச்செயலாளர் பாலாறு வெங்கடேசன், தமிழக காவிரி விவசாய சங்க தலைவர் புண்ணியமூர்த்தி உள்ளிட்ட 300இக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு வேளச்சேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். நேற்று மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.