2016இல் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் – சம்பந்தன்

 

சம்பந்தன் தேர்தல் காலத்தில் ஒரு விடயத்தை மீண்டும், மீண்டும் வலியுறுத்தி வந்திருக்கின்றார். அதாவது, 2016இல் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். அப்படியொரு நல்ல தீர்விற்காகத்தான் அவர் ரணில் விக்ரமசிங்கவின் முன்னால் அமைதி காக்கின்றாரா? ஒற்றையாட்சி கட்டமைப்புக்குள், பிச்சினைகளை கையாளும் வகையிலான தீர்வு ஒன்றிக்காகவே தன்னுடைய அரசு முயற்சிப்பதாக ரணில் குறிப்பிட்டிருக்கின்றார். அதனையும் புதுடில்லியில் வைத்துத்தான் அவர் கூறியிருக்கின்றார். ஆனால், இன்றுவரை புதுடில்லியில் வைத்து நாங்கள் தமிழ் மக்களின் சார்பில் எதனை எதிர்பார்க்கிறோம். இந்தியாவிடமிருந்து எதனை எதிர்பார்க்கிறோம் என்பதை ஆணித்தரமான சொல்லும் ஆற்றல் இன்னும் தமிழ் மிதவாத தலைமைகளுக்கு வரவில்லை. இந்திய – இலங்கை ஒப்பந்த காலத்தில் இந்திய இராஜதந்திரிகளைச் சந்தித்த அனுபவம் பற்றி ஒருவர் குறிப்பிடும் போது, அவர்களில் ஒருவர், எங்களுடைய மிதவாத தலைவர்களின் ஆளுமை தொடர்பில் இவ்வாறு கூறினாராம்: எங்களுடன் பேசுகின்ற போது, உங்களின் தலைவர்கள் தங்களின் தேவை என்ன என்பதை எங்களிடம் சொல்வதைவிட்டுவிட்டு, ஏதாவது பாத்துச் செய்யுங்கள் (Do something) என்கின்றனர். அப்படியல்ல நீங்கள் எங்களிடம் எதனை எதிர்பார்க்கின்றீர்கள் என்று தெளிவாக குறிப்பிட்டால்தான், நாங்கள் எங்களின் எல்லையை உங்களுக்குச் சொல்லலாம் என்று, நாங்கள் திருப்பிச் சொன்னலோ, உங்களின் தலைவர்களோ மீண்டும், நீங்கள் ஏதாவது பார்த்துச் செய்யுங்கள் என்றே கூறுவர். இந்த ஏதாவது பார்த்துச் செய்யுங்கள் என்பதுதான் இனியும் தொடரப்போகின்றது என்றால், இறுதியாக இந்தியாவும், அமெரிக்காவும் ஏதாவது பார்த்துச் செய்யும். அவர்கள் செய்யும் போது தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வும் நிச்சயமாக கிடைக்கும். ஒருவேளை அந்தத் தீர்வு 2016 இற்குள்ளேயே கிடைக்கலாம்.

(Jathi Jathindra)