7 விடயங்களை வைத்துக்கொள்ள வழிப்படுத்தல் குழு தீர்மானம்

அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது, முக்கியமான ஏழு விடயங்களை உப-குழுக்கள் வசம் ஒப்படைக்காது தாமே கையாள்வதற்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசியலமைப்பு நிர்ணய சபையின் வழிப்படுத்தல் குழு தீர்மானித்துள்ளது. அரசின் தன்மை, இறையாண்மை, மதம், அரசாங்கத்தின் வடிவம், தேர்தல் மறுசீரமைப்பு, அதிகாரப் பகிர்வு நியமங்கள் (கொள்கை) மற்றும் காணி ஆகிய ஏழு விடயங்களையே, வழிப்படுத்தல் குழு தம்வசம் வைத்துக்கொள்ளவுள்ளது.
வழிப்படுத்தல் குழுவின் இரண்டாவது கூட்டத்தின் போதே இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று, நாடாளுமன்ற பணியாற்றொகுதியின் தலைமை அதிகாரியும் பிரதி செயலாளர் நாயகமும், வழிபடுத்தல் குழுவின் செயலாளருமான நீல் இத்தவெல விடுத்த அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், நேற்று நடைபெற்ற மேற்படி குழுவின் மூன்றாவது கூட்டத்தின் போது ஆறு விடயங்கள் தொடர்பான உப- குழுக்களை, அரசியலமைப்புச் சபையினால் நியமிப்பதற்குப் பிரேரிக்கப்பட்டுள்ளது.

அடிப்படை உரிமைகள், நீதித்துறை, நிதி, சட்டம் மற்றும் ஒழுங்கு, பொது சேவைகள், மத்திய மற்றும் வெளி எல்லை ஆகிய விடயங்களுக்கான உப-குழுக்களையே, அரசியலமைப்புச் சபையினால் நியமிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது.

இதில், மத்திய மற்றும் வெளி எல்லை விடயத்தின் கீழ், மத்திய அரசாங்கம் மற்றும் மகாணசபைகளுக்கு இடையிலான உறவுகள், உள்ளூராட்சி சபைகள், மாகாணங்கள் மற்றும் உள்ளூராட்சி சபைகள், நிர்வாகக் கட்டமைப்பு (மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள்) உள்ளிட்ட விடயங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன.

அத்துடன், தேவையேற்படும் பட்சத்தில் ஏனைய உப-குழுக்களை நியமிப்பதற்கும் வழிபடுத்தல் குழு தீர்மானித்துள்ளது. அரசியலமைப்புச் சபையினால் நிபுணர்கள் குழுவுக்கு நியமிக்கப்படுவதற்கான பெயர்களும் பிரேரிக்கப்பட்டுள்ளன.