அரசும்….! மதமும்….!!

கிறிஸ்தவக் கன்னியர் மடத்தில்தான் ஆரம்பம் முதல் படித்தேன்.. அந்த நாட்களில் ஓரிருவரைத் தவிர எல்லாக் கன்னியாஸ்திரிகளுமே மதவெறி ..சாதிவெறி…பணக்காரப்பிள்ளைகள் மீது மோகம் என்பவற்றில் மூழ்கியிருந்தார்கள்..இவர்களோடும் போராடித்தான் என் படிப்புக்காலம் கழிந்தது. என் போராட்டக் குணம் அவர்களுக்கு எள்ளளவும் பிடிக்கவில்லை..கூடிக்கூடி என்னைப்பற்றியே பேசினார்கள் …பலவிதத்தில் என்னை இம்சையும் செய்தார்கள்.. நான் படிப்பில் கெட்டிக்காரியாக இருந்ததால் தொடர்ந்து அவர்களோடு படிக்க முடிந்தது.

பள்ளிக்குப் பக்கத்திலேதான் கிறிஸ்தவத் துறவிகளின் மடமுமிருந்தது ..அவர்களில் சிங்கராஜர் என்ற துறவியைமட்டும் கனிவுசார்ந்த ,அன்பான ,பேதமற்றவராக என் நினைவில் கொள்ள முடிகின்றது…அவர் சேவைபுரிந்த காலத்தில் நான் மிகவும் சின்ன வயதினள்..ஆனாலும் என் ஞாபக இடுக்கில் அவரின் முகம் அழிக்கமுடியாமல் நிறைந்துள்ளது.. .

.அதன் பின் தொடர்ந்து வந்தவர்கள் …? அழிந்துபோன முகங்கள்…! மதத்தின் பெயரால் துறவறம் பூண்டு சேவை செய்ய வந்த பலரை என் மதிப்பில் உயர்த்திவைக்கப் பார்க்க என் மனம் மறுக்கின்றது..அவர்களோடு நான் பழகிய நாட்கள் வெறுப்பையே ஊன்றிவிட்டன ..இப்போது திரும்பவும் அவற்றை மீட்டுப் பார்க்கையில் கடும் கோபமும் வருகின்றது … இங்கர்சாலின் ,வால்டயர் பற்றிய இச்சிறு புத்தகத்தில் நான் படித்த வரிகள் எனக்கு எதையெல்லாமோ நினைவுறுத்துகின்றன.—–

-.//..அரசனை எதிர்த்தால் அவனுக்குப் பெயர் ராஜத்துரோகி .;மதங்களை எதிர்த்தால் அவனுக்குப் பெயர் மத விரோதி.; எத்தனையோ நூற்றாண்டுகளாக மன்னன் கைவாளும்,பாதிரியின் சிலுவையும் நெருங்கிய நண்பர்களாயிருந்தன.. .மக்களை மன்னன் தாக்கினான் ;மதகுருவும் தாக்கினான்.அரியணை யும் ,ஆண்டவன் ஆலயமும் அண்ணனும் தம்பியுமாகும். ஒரே முட்டையிலிருந்து வந்த இரு கழுகுகள்

.மன்னன் பலாத்காரத்தை உபயோகித்து வரிகளை மக்களிடம் வாங்கி வாழ்கின்றான்.;மதகுரு மக்களை அச்சுறுத்தி ,அவர்கள் தரும் காணிக்கையென்னும் பிச்சையால் கொழுக்கின்றான். ஆகவே இருவரும் கொள்ளைக்காரர்கள் ..அதுமட்டுமல்ல, பிச்சைக்காரர்களும் கூட

மதகுருமார்கள் மக்களிடம் ,”கடவுள் உங்களை அறியாமை நிரம்பியவர்களாக .அஞ்ஞானிகளாக ,நீசர்களாகப் படைத்தார், எங்களை அறிவுள்ளவர்களாக ,ஞானிகளாகப் புண்ணியவான்களாக உருவாக்கினார்..நீங்கள் எங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும்;இல்லையேல் இங்கேயே கடவுள் உங்களைத் தண்டிப்பார் ;அடுத்த உலகிலும் தண்டனை நிச்சயம் ..மேலும் நீ எதற்கும் காரணங்கள் கேட்கக் கூடாது;நீ எதனையும் நம்பியே ஆக வேண்டும் …..

. இதையெல்லாம் முறியடிக்க ஆவேசத்தோடு புறப்பட்ட முற்போக்காளரான .வால்டயர் அவர் காலத்தில் கெடுமதியாளர்களையும் ,அற்ப புத்தியுள்ளவர்களையும் மட்டம் தட்டி வந்தார் ,பாசாங்கு பல செய்து ,பல்லெல்லாம் தெரியக் காட்டி ,எடுத்ததற்கெல்லாம் கொஞ்சும் வஞ்சகப் புத்திக்காரர்களையும் ,குருமார்கள் முன் பல்லிளிப்பவர்களையும் ,பொருள் மிகுந்தவர்களின் ஆதரவுக்காக எதையும் செய்யும் இதயம் படைத்தவர்களையும் தன் கண்டனக் கணைகள் மூலமும், கேலிகிண்டல்கள் மூலமும் அவர்களுடைய இறுமாப்பைப் போக்கினார்…//

—- இங்கர்சால் —-.

(Pushparani Sithampari)