சகோதரத்துவம்

‘என்னபுள்ள! தொண்ட வெடிக்கக் கத்திற்று ஓடிவாறா. என்ன நடந்த’ என்று வீட்டுக் ‘கேற்’றடியில் நின்றபடி கேட்டாள் சுனீத்தாவின் தாய் அன்னம். 

‘பொத்துவில் ‘பொலிஸ் ஸ்ரேசனப்’ புலிப்பொடியனுகள் சுத்திவளைச்சுப் பொலிஸ்காரர் எல்லாரையும் ‘பஸ்’ஸொன்றில ஏத்திட்டுக் கொண்டுபோறானுகளாம். எங்க கொண்டு போறானுகள்;;; என்ன செய்யப்போறானுகளெண்டு ஒண்டும் தெரியா. சனத்த ஊரில இருக்க வேணாமாம். எழும்பி எங்கெயாவது ஓடியொளியுங்க என்று பொடியனுகள் சொன்னதாமெண்டு சொல்லி பொத்துவில்த் தமிழ் ஆக்களெல்லாம் கோமாரிக்குப் போய்க் கொண்டிருக்காங்களாம்.’ என்று பதற்றத்துடன் பதிலளித்தாள் சுனீத்தா. 

‘என்ன புள்ள இது. எனக்கு அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டுப் போகிது. வீடுவாசல இப்படிய விட்டிட்டு நாம் எங்க ஓடிறதும் ஒளியிறதும். நடக்கேலாத அம்மம்மாவ என்ன செய்யிற. எனக்கெண்டா என்ன செய்யிறண்டு ஒண்டும் விளங்கல்ல’ கையும் ஓடல்ல காலும் ஓடல்ல என்று கலங்கி நின்றாள் அன்னம். 

அப்போது சைக்கிளொன்றில் வந்திறங்கினான் வெளிநாட்டில் வதியும் அன்னத்தின் தம்பி யோகனின் நண்பனான முகைதீன். 

‘அக்கா! எல்லாத்தையும் கேள்விப்பட்டுத்தான் நான் வாறன். அண்ணண்ட அபேசேகர எண்ட பெயர் சிங்களப் பெயர்தானே. அவருக்கு ஆபத்தொண்டும் வராது. அவர் வீட்டப் பாத்துக் கொள்ளட்டும். அம்மாவ நான் எங்கட ஊட்ட கூட்டிப்போய் முஸ்லிம் பகுதிக்குள்ள பாதுகாப்பா வச்சிருக்கன். புறகு நிலமயப் பாத்து நடந்திக்கலாம். நீங்க சுனீத்தா, சுதா, சியாம் எல்லாரும் கோமாரிக்குப் போக ஆயத்தப்படுத்திங்க. நான் ‘ரவுணு’க்குப் போய் அம்மாவக் கொண்டு போறதிக்கு ‘ஓட்டோ’ புடிச்சிட்டு வாறன்’ என்றான் முகைதீன். 

‘என்ன முகைதீன் இது. ஒரு விளக்கமுமில்லாம. என்ன நடந்ததெண்டு விளக்கமாகச் சொல்லுங்களன் தம்பி’ என்று அன்னம் அவதியுடன் கேட்க முகைதீனும் நின்ற நிலையிலேயே அவசரம் அவசரமாகக் கதையைச் சொல்லி முடித்தான். 

முகைதீன் கொடுத்த விளக்கம் இதுதான். 

1987 யூலை 29 ஆம் திகதி கொழும்பில் இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்தம் கைச்சாத்தான பின்பு -இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஒப்பந்த அமுலாக்கலுக்காக நிலைகொண்டிருந்த இந்திய அமைதி காக்கும் படையினர் 1990 மார்ச் மாதம் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டிருந்தனர்.  

ஸ்ரீலங்கா ஜனாதிபதி பிரேமதாசவுடன் கூட்டுவைத்து இந்திய அமைதிகாக்கும் படையினருக்கு எதிராக 1987 ஒக்டோபர் மாதத்திலிருந்தே யுத்தம் புரிந்துகொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் இந்திய அமைதி காக்கும் படையினர் வெளியேறிய கையுடன் ஊருக்குள் சுதந்திரமாகப் பிரவேசித்து நடமாடத் தொடங்கியிருந்தனர். பிரேமதாச அரசாங்கமும் அதற்கு ஆதரவாகவே நடந்துகொண்டது. 

1990 யூன் மாதம் 10 ஆம் திகதி மட்டக்களப்பு அகதிமுகாம் ஒன்றிலிருந்த முஸ்லிம் இளைஞரொருவர் சிங்களவர் ஒருவரினால் தாக்கப்பட்டபோது அகதிமுகாமில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த சிங்களப் பொலிஸார் இருவரையும் கைது செய்து மட்டக்களப்புப் பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்காக ஒப்படைத்தனர். இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டுப் ‘பொலிஸ்’ நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த முஸ்லிம் இளைஞர் புலிகளுக்குச் சீருடைகள் தைக்கும் ‘ரெயிலர்’ ஆவார். இதனைத் தொடர்ந்து அன்றிரவு சுமார் 11.00 மணியளவில் பொலிஸ் நிலையத்துக்கு வருகைதந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆயுததாரிகள் மேற்படி முஸ்லிம் இளைஞரை விடுதலை செய்யும்படி கோரினர். மேற்படி முஸ்லிம் இளைஞர் சிறு காயங்களுக்கு உள்ளாகியிருப்பதால் அவரை வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளதாகப் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

அப்போது மேற்படி முஸ்லீம் இளைஞர் வைத்தியசாலையில் இல்லையெனத் தெரிவித்த புலி உறுப்பினர்கள் அங்கிருந்த இரண்டு பொலிஸ்காரரைப் பணயமாக கடத்திச் சென்றனர். மறுநாள் அதிகாலை ஆறு மணியளவில் பொலிஸ் நிலையத்தை நோக்கி வீதியால் சென்றுகொண்டிருந்த மேலும் நான்கு பொலிஸார் புலிகளால் கடத்தப்பட்டதுடன் கைதுசெய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் முஸ்லிம் இளைஞரை விடுதலை செய்யும்படி பொலிஸ் நிலைய உயரதிகாரிகளிடம் புலிகள் நிபந்தனை விதித்தனர். முஸ்லீம் இளைஞர் வைத்தியசாலையில் சிகிச்சையிலுள்ளாரென்றே பொலிஸ் தரப்பால் மீண்டும் தெரிவிக்கப்பட்டது. அதை மறுத்த புலிகள் மீண்டும் மறுநாள் காலை சுமார் 250 ஆயுததாரிகளுடன் வந்து மட்டக்களப்புப் பொலிஸ் நிலையத்தைச் சுற்றிவளைத்தனர். இதனால் இலங்கை இராணுவம் மற்றும் பொலிஸாருக்கும் புலிகளுக்குமிடையே மீண்டும் மோதல் ஆரம்பமாகிவிட்டிருந்தது. அதன் விளைவுதான் இன்று (12.06.1990) பொத்துவில் பொலிஸ் நிலையத்தைப் புலிகள் முற்றுகையிட்டுப் பொலிஸாரைப் பஸ்ஸொன்றில் ஏற்றிக்கொண்டு வெளியில் எங்கோ கொண்டுபோய்விட்டனர். 

முகைதீன் நடந்த கதையைச் சொல்லிமுடித்ததும், இனியொன்றும் தாமதிக்க முடியாதென்பதை அன்னம் உணர்ந்ததால் முகைதீன் கூறிய ஆலோசனைகளின் படியே அத்தனையும் அவசரம் அவசரமாக நடந்தேறின. அன்னத்தின் கணவர் அபேசேகர மட்டும் வீட்டில் தங்கியிருக்க வீட்டிலிருந்த ஏனையோர்கள் அனைவரும் வெளிச் சென்றுவிட்டனர்.  

இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் கரையோரமாக அமைந்த தென்கோடிக் கிராமம்தான் பொத்துவில். இவ்வூரில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவும் கணிசமான எண்ணிக்கையில் தமிழர்களும் மற்றும் சிறியதொகைச் சிங்களவர்களும் சிறுபான்மையாகவும் வாழ்ந்துகொண்டிருந்தனர். கோமாரி பொத்துவிலுக்கு வடக்கே பதினாறு கிலோமீற்றர் தூரத்திலுள்ள தனித்தமிழ்க் கரையோரக் கிராமமாகும். 

இரவு 7.00 மணியிருக்கும் பொத்துவில் முஸ்லீம் பகுதியிலமைந்திருந்த பள்ளிவாசல் ஒலிபெருக்கி பின்வருமாறு அறிவித்தது. 

‘அன்பான முஸ்லீம் பொதுமக்களே! இன்று காலை பொத்துவில் பொலிஸ் நிலையத்தைச் சுற்றி முற்றுகையிட்டு அங்கிருந்த சிங்கள, முஸ்லீம் பொலிஸ்காரைப் ‘பஸ்’ஸில் ஏற்றிக்கொண்டு சென்ற புலிகள் இயக்கத்தினர் அவர்களெல்லோரையும் றூபஸ்குளம் காட்டுக்குள்ளே கொண்டு போய்ச் சுட்டுக் கொன்றுபோட்டார்களாமென்ற செய்திவந்துள்ளதால் பொத்துவிலூர் பீதியில் உறைந்து போயுள்ளது. நமது சகோதர தமிழ்ச் சனங்களெல்லாம் இடம்பெயர்ந்து கோமாரிக்குப் போய்க்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் முஸ்லீம்களுடைய வீட்டில் எந்தத் தமிழருக்கும் அடைக்கலம் கொடுக்கக்கூடாது என அரச ஆயுதப்படையினர் பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளனர். அதன் காரணமாக முஸ்லீம் பகுதிக்குள் எந்தத் தமிழருக்கும் அடைக்கலம் கொடுக்கவேண்டாமென்று அறிவுறுத்துகின்றோம். இந்த அறிவித்தலை அசட்டை செய்யாது கடுமையாகக் கடைப்பிடிக்கவும். இப்படிக்கு பொத்துவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகம். 

பள்ளிவாசல் ஒலிபெருக்கி அறிவித்தலைக் காதில் வாங்கிக்கொண்ட முகைதீன் என்ன செய்வதென அறியாது தலை குழம்பினான். லண்டனில் வதியும் தனது ஆத்ம நண்பன் யோகனின் நோயாளித் தாயாரைத் தனது வீட்டில் தொடர்ந்து மறைத்து வைத்திருப்பதா? அல்லது பள்ளிவாசல் நிர்வாகத்தின் அறிவுறுத்தலைக் கேட்டு நடப்பதா? என்று தலையைப் பிய்க்கத் தொடங்கினான். 

சேனைப் பயிர்ச்செய்கைக்காகக் காட்டை வெட்டிக் காயப்போட்டு நன்றாக வெயிலில் காய்ந்த பின் காற்று வழத்தைப் பார்த்து ஒருபக்கத்தில் நெருப்பு வைத்தால் ‘புஸ்’ என்று முழுவதும் பற்றியெரியும் வேகத்தில் பொத்துவில் பள்ளிவாசல் ஒலிபெருக்கி அறிவித்தல் செய்தி, காட்டுத்தீயாய்க் கோமாரிவரை பரவிற்று.  

எந்த தீர்மானத்திற்கும் முகைதீனால் வரமுடியவில்லை. அரை மணிநேரம் தாண்டியிருக்கும். தனது நண்பன் யோகனின் அக்கா அன்னத்தின் மகன்- சுனீத்தாவின் தம்பி- சியாமின் அண்ணன்- நண்பன் யோகனின் மருமகன் சுதா அவசரமாக வீட்டினுள் நுழைந்தான். 

‘என்ன சுதா. திடீரென்று…!’ என்று பீதியுடன் கேட்டான் முகைதீன். 

‘முகைதீன் அங்கிள்! எல்லாம் கேள்விப்பட்டுத்தான் வாறன். அம்மம்மாவ உங்கட வீட்டில வைச்சிருக்க நீங்க முன்வந்ததே பெரியகாரியம். நீங்க ஒண்டும் யோசியாதீங்க. உங்கள நாங்க பிழையா நினைக்கல்ல. எங்களால உங்களுக்கும் ஒரு பிரச்சின வரப்படாது. அம்மம்மாவ நான் கோமாரிக்குக் கொண்டு போறன்’ – சுதா தான் வந்த நோக்கத்தைத் தெளிவுபடுத்தினான். 

ஊரே அல்லோலகல்லோலப்படும் அந்த நேரத்தில் கூலிக்கு வாகனம் பிடிப்பதும் கஸ்டம். மட்டுமல்லாமல் பெரிய வாகனங்களேதும் தன் வீட்டிற்கு முன் வந்து நின்று நண்பன் யோகனின் தாயை ஏற்றிச்சென்றால் அது பகிரங்கமாகிவிடும். நடந்தது ஒருத்தருக்கும் தெரியவும் கூடாது. ‘நோண்டி’யாகாமலிருக்க வேண்டும். முஸ்லிம் பொலிஸ்மாரும் புலிகளால் கொல்லப்பட்டுள்ளதால் அடுத்து என்ன நடக்குமோ தெரியாது. முஸ்லிம்கள் தமிழர்கள் மீது ஆத்திரம் கொள்ளும் சூழ்நிலை வேறு. 

இவ்வாறு சிந்தித்த முகைதீன் தன் வீட்டின் அறையொன்றுக்குள் சென்று தலையணையொன்றைக் கொணர்ந்து சுதாவிடம் நீட்டித் தனது சைக்கிளையும் கொடுத்து அம்மம்மாவைச் சைக்கிளில் இருத்திக் கொண்டு செல்லும்படி கூறினான். 

ஒருபக்கப் பாரிசவாத நோயினால் பாதிப்புற்று நடக்க முடியாமலிருந்த தனது எழுபத்தியிரண்டு வயது  அம்மம்மாவைச் சைக்கிள் ‘பார்’ இன் குறுக்காக வைக்கப்பட்டிருந்த தலையணையில் அமர்த்தி அவ கால்களைத் தொங்கப்போட்டுக் கொண்டிருக்கச் சைக்கிள் ‘ஹான்டில்’லைப் பிடித்திருந்த தனது இரு கைகளுக்குமிடையில் அவவின் மேலுடம்பு முழுவதையும் சிறைப்படுத்தியவனாக இருபது வயதே நிரம்பிய சுதா அந்த இரவு நேரத்தில் ஒரு உத்வேகத்துடன் கோமாரியை நோக்கிச் செல்வதற்காகச் சைக்கிள் ‘பெடல்’களை ஊன்றி உழக்கத் தொடங்கினான். முகைதீனின் கவலை தோய்ந்த முகம் சுதாவை வழியனுப்பி வைத்தது.