வெளிவந்து விட்டது வானவில் இதழ் 66

போருக்கு பின்னரான வடக்கின் குற்றச்செயல்கள

அண்மைக்காலமாக வடக்கில், குறிப்பாக யாழ்ப்பாணக் குடாநாட்டில் வாள்வெட்டுக்கள், கொலை, கொள்ளை, சிறுவர்கள் துஸ்பிரயோகம், பாலியல் வன்முறைகள், போதைப் பொருள் கடத்தல் மற்றும் போதைப் பொருள் பாவனை போன்ற சமூக விரோதச் செயல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளதாக அறியக் கிடைக்கின்றது. இந்த குற்றச்செயல்கள் அனைத்துமே  யாழ் குடாநாட்டில் மாத்திரமன்றி, நாடு தழுவிய ரீதியில் நடக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. எனினும் யாழ் குடாநாடு தவிர்ந்த, நாட்டின் ஏனைய நிலப்பரப்பு மற்றும் அங்கு வாழும் மக்கள் தொகையினை, யாழ் குடாநாடு போன்ற மிகச் சின்னஞ்சிறிய நிலப்பரப்பில் வாழும் மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில், யாழ் குடாநாட்டில் இடம்பெறும் குற்றச்செயல்கள் அதிகமென பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

வடக்கில் பெருகி வரும் குற்றச் செயல்களுடன் தொடர்புடையோரை கைது செய்யவும் அவற்றை கட்டுப்படுத்தவும் வட மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் நேரடி கண்காணிப்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகின்ற நிலையிலும், குற்றச் செயல்கள் குறைவின்றி அதிகரித்த வண்ணமேயுள்ளன. யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி, ‘யாழ் குடாநாட்டை அச்சுறுத்தும் சமூகவிரோதிகள் அனைவரையும் கண்காணித்து, கைது செய்து நீதிமன்றங்களில் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்’ என்று பகிரங்கமாக கூறி வருகின்றார். சட்டத்துக்கு முரணான வகையில் வாள்கள், ஆபத்தான கத்திகள் என்பவற்றை கம்மாலைகள் உற்பத்தி செய்வதற்குத் தடையுத்தரவு பிறப்பித்துள்ள யாழ்.மேல் நீதிமன்றம், அவற்றை வைத்திருப்பவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் உடனடியாகக் கையளிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது.

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் ஆரம்பிக்க முன்னரும் வடக்கில் குற்றச் செயல்கள் நிகழ்ந்தன என்பதை யாரும் மறுக்க முடியாது. எனினும் இப்போது போல மிகப்பெரியளவில் நிகழவில்லையென வடக்கு மாகாண முதலமைச்சர், யாழ் ஆயர் போன்ற பலர் கூறி வருகின்றனர். ஆனால் வடக்கு மாகாண ஆளுனரோ இதனை மறுத்து ‘வடக்கில் போர்க்காலத்திலும்  குற்றச்செயல்கள் இடம்பெற்றன. ஆனால் ஊடகங்கள் இதற்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை’ எனக் கூறியுள்ளார். ஆளுனர்  கூறுவதிலும் நூறு வீதம்  உண்மையும் இருக்கத்தான் செய்கின்றது. உள்நாட்டு மற்றும் புலம்பெயர் தமிழர்சார் ஊடகங்களிலும் சமூக அக்கறை கொண்டவர்கள் மத்தியிலும் அலசி ஆராயப்படும் முக்கிய பிரச்சனையாக இன்று இது உருவெடுத்துள்ளது. பெரும்பாலான பிற்போக்கு தமிழ் தேசிய ஊடகங்கள், புலிகள் இருந்த காலத்தில் இவ்வாறான குற்றச்செயல்கள் நிகழவில்லையெனவும் இலங்கை அரச படையினரின் பின்னணியிலேயே சமூக விரோதிகள் இந்தக் குற்றச்செயல்களை புரிவதாகவும் கூறி வருகின்றன.

இன்று வடக்கின் ஒரு பாரிய சமுதாயப்பிரச்சனையென பேசும் பொருளாகிவிட்ட குற்றச்செயல்கள் ஓர் உலகந்தழுவிய பிரச்சனையே. இந்தக் குற்றத்தைப் புரிவோர் பரந்த கல்வியறிவு கொண்ட பணம் படைத்த மேற்கத்தைய நாடுகளிலிருந்து குறைந்த கல்வியறிவு கொண்ட வறிய நாடுகள் வரை பரவிக்கிடக்கின்றனர். சகல முரண்பாடுகளையும் (ஆயுதங்களால்) வன்முறைகளால் தீர்க்கலாம் என்ற மனப்பாங்கு, குறுகிய காலத்தில் குறுக்கு வழியில் பெருமளவு பணம் சம்பாதிக்கும் சிந்தனை, கட்டுக்கு மீறிய பாலியல் கிளர்ச்சி போன்றனவற்றை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் இன்று உலகின் அனைத்து சமூகமே திண்டாடிக் கொண்டிருக்கின்றது. உலகின் தலை சிறந்த உயர் கல்விக்கூடங்களில் இது தொடர்பாக எத்தனையோ ஆராச்சிக் கட்டுரைகள் எழுதப்பட்டுவிட்டன. பல நாடுகளில் இவ்வாறான குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்குகிறார்கள். மரணதண்டனை அமுலில்லாத வேறு பல நாடுகளில் சிறைத்தண்டனைகள் வழங்கப்பட்டு, சமூகத்தில் நல்ல பிரசையாக திருந்தி வாழ்வதற்கு குற்றவாளிகளுக்கு சீர்திருத்தப் பள்ளிகளில் போதிய  கல்வியறிவு வழங்கப்படுகின்றது. ஆனால் அவ்வாறு சிறையிலிருந்து திரும்பியவர்களில் ஒரு பகுதியினர்,  மீண்டும் அதே குற்றத்தை புரிந்து மீண்டும் சிறை செல்கிறார்கள்.

எனவே வடக்கின் பல பகுதிகளில் தலையெடுத்துள்ள குற்றச்செயல்களை, வடக்கில் மாத்திரமே நடக்கும் பிரத்தியேகப் பிரச்சனையாகப் பார்க்காமல், இது உலகின் பல்வேறுபட்ட சமூக மட்டங்களிடையே இடம்பெறும் ஒரு பிரச்சனையாகக் கருத வேண்டும். இவற்றில் குறிப்பாக போதைப் பொருள் கடத்தலை தடுப்பதற்கு சர்வதேச ரீதியிலான நடவடிக்கைகளும் அவசியம். தமிழ் ஆயுத இயக்கங்கள் சண்டித்தனம், மிரட்டல், களவு போன்ற சிறிய குற்றம் செய்தவர்களுக்கும் விபச்சாரிகளுக்கும்,  யுத்தகாலத்தில் பகிரங்க மரணதண்டனை வழங்கினார்கள். அதேவேளையில் தமது இயக்கத்தேவைக்கென கொள்ளைகள் அடித்தார்கள், போதைப் பொருளும் கடத்தினார்கள். புலிகள் பல சிங்களக் கிராமங்களில் புகுந்து பச்சிளம் பாலகர்களிலிருந்து கர்ப்பிணிகள், முதியவர்கள் வரை பல ஆயிரக்கணக்கானவர்களை வெட்டியும் சுட்டும் கொன்றார்கள். ஆனால் அப்போதும் இப்போதும் தமிழர்களில் பெரும்பாலனவர்கள் இவற்றினை குற்றச்செயல்களாக பார்ப்பதில்லை. இலங்கை இனவாத அரசுக்கும் தமிழ் தேசியத்திற்குமான முரண்பாட்டை ஆயுதப் போராட்டம் மூலம் தீர்க்கப்போவதாகக் கூறியவர்கள் செய்த (போர்க்)குற்றச் செயல்களையும் போருக்கு முன்னர் மற்றும் பின்னரான வடக்கின் குற்றச் செயல்களையும் ஒப்பிட்டால் இது எமது சமூகத்தில் எப்போதுமே இருந்து வரும் ஒரு பிரச்சனையென தெளிவாக உணரலாம்.

நன்றி: வானவில் இதழ் 66