அன்றைய கதையும் இன்றைய நிஜமும்! பெற்றோரை நேசிக்கும் பிள்ளைகளே…வாசியுங்கள்!

(எஸ். ஹமீத்)

அன்றைய கதை இது:

ஓர் இளைஞன் ஒரு பெண்ணைக் காதலித்தான். ஆனால் அந்தப் பெண்ணோ இவனது காதலை மறுத்தாள். அவளுக்கு இளைஞன் விலையுயர்ந்த ஏராளமான பரிசுப் பொருட்களைக் கொண்டு வந்து கொடுத்தான். அப்போதும் அவள் இவனை விரும்பவில்லை. இறுதியாக இளைஞன் அந்தப் பெண்ணிடம் சொன்னான். ”என்னைக் காதலிப்பதற்கு நீ என்னதான் எதிர்பார்க்கிறாய்…? சொல்; எதுவாயினும் கொண்டு வந்து தருகிறேன்!”

குரூரம் நிறைந்த அந்தப் பெண் சொன்னாள். ” நான் உன்னைக் காதலிக்க வேண்டுமாயின் எனக்கு உனது தாயின் இதயம் வேண்டும்!” அந்த இளைஞன் ஒரே ஓட்டமாக ஓடித் தாயிடம் வந்தான். தாயைக் கொன்று அவளது இதயத்தைக் கையிலேந்தியபடிக் காதலியிடம் ஓடினான். அவ்வாறு ஓடுகையில் அவனது காலைக் கல் ஒன்று இடறியது. தடுமாறிக் கீழே விழப் போனான். அப்போது அவனது கையிலிருந்த தாயின் இதயம் பதறியபடிச் சொன்னது. ”மகனே…பார்த்துக் கவனமாகப் போ!”

இது கதை பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால், இந்தக் கதை போல இல்லாவிட்டாலும் மனதைக் கசியச் செய்யும் ஓர் உண்மைச் சம்பவம் நமது நாட்டில் நடை பெற்றுள்ளது.

இது இன்றைய நிஜம்:

பண்டாரகம, ரேரெக்கான பிரதேசத்தில் அந்தப் பெற்றோரைப் பல்வேறு காரணங்களுக்காகவும் அவர்களின் மகன் தினமும் கொடுமைப்படுத்தி வந்தான். திருமணம் செய்யாத 36 வயதான அந்த மகனின் கொடுமையை அவனது பெற்றோர் வெளியில் எங்கும் சொல்வதில்லை. ஒருமுறை அவன் தனது தந்தையைக் கத்தியால் வெட்டியுமிருந்தான்.

நேற்று இரண்டு புத்த பிக்குகள்தான் அந்தக் காட்சியைக் கண்டனர். அந்த மகன் வழமை போன்றே தன் பெற்றோரை அடித்து, உதைத்ததோடு மட்டுமன்றி அவர்களின் கழுத்தைப் பிடித்து வீட்டை விட்டும் வெளியில் தள்ளிக் கொண்டிருந்தான். தனது தாயைச் சுவற்றுடன் சாய்த்து வைத்து அவளது கழுத்தை இளைஞன் மோசமாக நெரித்துக் கொண்டிருப்பதைப் பிக்குகள் நேரடியாகப் பார்த்தனர். உடனே அவர்கள் பண்டாரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தமித் ஜயதிலக்கவுக்கு விடயத்தை அறிவித்தனர்.

பொலிஸார் விரைந்து வந்து குறித்த இளைஞனைக் கைது செய்தனர். விசாரணையின் போது அவர்கள் அந்தப் பெற்றோரிடம் கேட்டனர்.

”உங்கள் இருவரையும் உங்கள் மகன் நாள்தோறும் கொடுமை செய்வதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனைப் பற்றி நீங்கள் ஏன் போலீசில் புகார் செய்யவில்லை…?”

அந்தப் பெற்றோர் கண்ணீரோடு சொன்னார்கள். ” நாம் புகார் செய்தால் நீங்கள் எங்கள் மகனைக் கைது செய்து விடுவீர்கள், அல்லவா? அதனால்தான் விடயத்தை எங்கும் சொல்லாமல் மறைத்து வைத்தோம்!”