இந்த கேள்விக்கான பதில்கள் என்ன?

(கிழக்கு மாகாணத்து தமிழ் மகன் ஒருவரது கேள்விகள் இது இதில் ஓடியிருக்கும் எண்ணக்கருவில் சூத்திரத்திற்கு உடன்பாடு இல்லை. ஆனாலும் சராசரி கிழக்கு தமிழ் மகனின் மனநிலையை எடுத்துக்காட்டுவதற்காக இதனைப் பதிவு செய்கின்றோம் – ஆர்)

“நான் பட்டு வேட்டி
பற்றிய கனவில் இருந்த போது
கட்டியிருந்த கோவணமும்
களவாடப் பட்டது”

நேற்றைய தமிழீழம் இன்று ஈழமாய் மாற்றமடைந்தது
காலக் கொடுமை
இன்றைய ஈழம் நாளை எதுவாக மாற்றமடையும்?
திருத்தச் சட்டமாகவா?
கேள்விகள் மட்டுமே பாக்கி.
இங்கே எந்த தீர்வுப் பொதி கிடைத்தாலும் அதை பரீட்சித்துப் பார்க்க தாய் மண் இல்லாமல் போய் விடும் என்பது தான்
என் வாதம்.
என் திருகோணமலை தமிழ் அரசியல் மாண்புமிகு தலைமைகளிடம் ஓர் கேள்வியை கேட்க விளைகின்றேன்.

திருகோணமலையின் வியாபார மையத் தளமான N.C வீதியில் என் தமிழர்களின் காணிகளை பல கோடி முதலீடு செய்து வாங்கி காத்தான்குடி முஸ்லீம் பணக்காரர்கள் வியாபாரத் தளங்களை அமைக்க அனுமதி கொடுத்தது யார்? கையெழுத்து இட்டது யார்?
நகரசபை இல்லையா?
நகரபிதா தழிழர் இல்லையா?
திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச எல்லைக்குள் வருகின்ற ஏகாம்பரம் வீதியின் கிட்டத்தட்ட 95% காணிகளை காத்தான்குடி முஸ்லீம் பெரும் வியாபாரிகள் வாங்கும் போது நகரசபை எங்கே தூங்கிக் கொண்டிருந்தது. காணிகளை விற்கும் தமிழர்களை அழைத்து எச்சரிக்காதது ஏன்? உடனடி வரிகளை அதிகரிக்காமல் தளர்த்திய வரிகளோடு நகரசபை நடத்தியது ஏன்?
காணி நிலம் பறி போகும் போது நீங்கள் எல்லாம் நகரசபை அதிகாரத்தில் இருந்தவர்கள் தானே.
கடைகளை அமைக்கும் அனுமதி இந்த முதலாளிமார்களுக்கு மட்டும் எப்படி இவ்வளவு விரைவாக கிடைத்தது?

கையில் இருந்த ஒரு நகரசபை நகரபிதாக்கும்
இங்கே இருக்கும் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒரு மாகாணசபை அமைச்சருக்கும் இரண்டு மாகாணசபை உறுப்பினர்களுக்கும் இது மிகப் பெரிய காணி அபகரிப்பாக தெரியாமல் போய் விட்டது. ராணுவம் பிடித்து வைத்திருக்கும் காணிகளை மீட்க போராடும் நீங்கள் கோயில்களில் தகரம் விழுந்ததுக்கு முந்தியடித்து ஓடும் நீங்கள் பட்ட பகலில் நகர மையத்தின் தமிழர் காணிகள் ஏலம் போட்டு விற்கப்படுவதை தடுத்து நிறுத்த வக்கிலாமல் போய் விட்டீர்கள்.
காத்தான்குடி இன்று வளர்ந்திருப்பதை போல் தமிழர் தாயக பரப்பிலே பொருண்மியத்தில் வளர்ந்து நிற்கும் ஒரு பிரதேசத்தை காட்ட முடியுமா?
காத்தான்குடி- சாய்ந்தமருது- கல்முனை – கிண்ணியா போன்ற நகரங்களின் வளர்ச்சி போல் கிழக்கில் ஒரு தமிழ் நகரத்தை காட்ட முடியுமா?

என் பொருளாதாரத்தை முஸ்லீம்களிடம் அடகு வைத்து விட்டு எதில் எங்களை வளர்ப்பதாய் உத்தேசம் சாணக்கியர்களே!

வடகிழக்கு இணைப்பு சாத்தியம் இல்லையென்றால் கிழக்கு யாருக்கு சொந்தம் என்று கூட சிந்திக்க திராணியில்லாத தலைமைகளை எப்படி கடிந்து கொள்வது? கிழக்கு மாகாணம் என்று மார்பு தட்டும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல் தலைமைகளே இனி எப்போதாவது தமிழர் எவரேனும் கிழக்கு மாகாணசபை முதலமைச்சராக வர முடியுமா? வரவைக்க ஏதேனும் விசித்திரமான திட்டம் இருக்கிறதா?
ஒரு போதும் இருக்காது.

ஓடியாடுற காலத்திலையே நீங்க ஒன்டும் செய்யல்ல.
அரசியல் பஞ்சம் பிழைக்க வந்தவர்க்கெல்லாம் எப்படி
என் மண்ணின் தாகம் புரியும்.

(அனுஷாந்)