இலங்கையின் ஆதிக் குடிகள் நாகர், இயக்கர், வேடர்! சிங்களவர் அல்ல! (Part 4)

மகாவம்ச ஆசிரியர் மகாநாம தேரர் விஜயனுக்குப் பின்னர் அரசு கட்டில் ஏறியவர்களை கவுதம புத்தரின் குடும்பத்தோடு வலிந்து இணைத்துள்ளார். உண்மையில் விஜயனுக்குப் பின்னர் பட்டத்துக்கு வந்தவன் பாண்டிய வம்சத்தை சேர்ந்த பாண்டுவாசு தேவன். அவனது பெயரே அவனது வம்சத்தைக் கூறிவிடுகிறது. அநகாரிக தர்மபாலரைப் பின்பற்றியே பின்னாளில் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கா, ஏ.இ.குணசிங்கா, கோனார் இராசரத்தினா, மேத்தானந்தா, சிறில் மத்தியூ, ஜே.ஆர். ஜெயவர்த்தனா, டி.பி. விஜயதுங்க, சந்திரிகா குமாரதுங்கா போன்ற அரசியல்வாதிகள் ஸ்ரீலங்கா ஒரு பவுத்த நாடென்றும் நாடும் மக்களும் ஒன்றென்றும் எழுதியும் பேசியும் வந்தார்கள். இன்றும் பேசி வருகிறார்கள். இவர்களில் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கா, ஜே.ஆர். ஜெயவர்த்தனா போன்றோர் கிறித்தவர்களாக இருந்து பின்னர் பவுத்தர்களாக மதம் மாறிக் கொண்ட அரசியல் பவுத்தர்களாவர்.

சிங்கள இனவாதம்

1920 இல் கொழும்பில் 1,000 மலையாளிகள் இருந்தார்கள். இவர்கள் ஆங்கிலேயரால் தங்களது தொழிற்சாலைகளில் பராமரிப்புத் தொழில் செய்வதற்குக் கொண்டு வரப்பட்டவர்கள். 1935 இல் மலையாளிகளது தொகை 35,000 ஆக உயர்ந்தது. பெரும்பாலும் கள் இறக்கல், துறைமுகம், தொடர்வண்டி திணைக்களம், தொழிற்சாலை, தேநீர் கடைகள், வீட்டு வேலை போன்ற தொழில்களில் ஈடுபட்டு இருந்தனர். இவர்களுக்கு எதிரான போராட்டத்துக்குத் தொழிற் சங்கவாதியாக இருந்த ஏ.இ. குணசிங்கா தலைமை தாங்கினார்.

மலையாளிகளது தேநீர்க் கடைகளைப் புறக்கணிக்க வேண்டும் என கொழும்பு நகரம் முழுதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இதனை அடுத்து ஆயிரக்கணக்கான மலையாளிகள் நாட்டை விட்டு அமைதியாக வெளியேறினர். சிலர் தமிழ் அல்லது சிங்களப் பெண்களை மணந்து இலங்கையில் தங்கி விட்டனர். பண்டாரநாயக்காவின் முதல் அமைச்சரவையில் பவுத்தமத கலாசார அமைச்சராக பதவி வகுத்தவர் இந்த மலையாளிகளில் ஒருவரான ஜெயவீர குருப்பு ஆவர்!

1939 ஆம் ஆண்டு ஏ.இ. குணசிங்கா 15,000 தமிழர்களை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் எனக் கேட்டுச் சட்டசபையில் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அதே ஆண்டு அண்மையில் அரச பணியில் சேர்ந்த தமிழர்களைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை டி.எஸ். சேனநாயக்கா கொண்டு வந்தார்.

இலங்கையில் 1860 முதல் தோட்டத் தொழிலாளர் போராட்டம் நடத்திய போதும் 1899 இல் தொழிலாளர்களின் பொது வேலைநிறுத்தம் உருவாகி அதன் விளைவாகத் தொழிற்சங்கக் கட்டமைப்பு தோற்றம் பெற்ற போதிலும் 1920 இல் மட்டுமே இரண்டு விரிவான தொழிலாளர் அமைப்புகள் உருவாகின.

ஒன்று ஊடகவியலாளர் கே. நடேசய்யர் தலைமையில் உருவான இலங்கை இந்தியத் தொழிலாளர் சம்மேளனம் மற்றது ஏ.ஈ. குணசிங்கா தலைமையில் உருவான தொழிலாளர் சங்கம்.

1925 இல் நடேசய்யர் தனது அமைப்பை குணசிங்காவினுடைய தொழிற் சங்கத்தோடு இணைத்தார். ஆனால் 1928 ஆம் ஆண்டளவில் குணசிங்கா இந்திய வம்சாவளித் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராகச் செயற்படத் தொடங்கினார். அதனால் நடேசய்யர் அந்த அமைப்பை விட்டு வெளியேறினார்.

கூலி வேலைக்கு அழைத்துவரப்பட்ட மலையகத் தமிழர்

மலையகத் தமிழர் 1,800 முற்பகுதி தொடங்கி தமிழ்நாட்டில் இருந்து ஆங்கிலேயரால் கோப்பி, தேயிலை, இரப்பர் தோட்டங்களில் கூலி வேலை செய்ய ஒப்பந்தக் கூலிகளாக அழைத்து வரப்பட்டவர்கள். வெள்ளைத் துரைமார்களால் கூலிகள் என அழைக்கப்பட்டவர்கள். தமிழில் இருந்து ஆங்கிலத்தில் நுழைந்த சில சொற்களில் இந்தக் கூலி என்ற சொல்லும் ஒன்று. மிகக் குறைந்த கூலி வாங்கிக் கொண்டு அதிக நேரம் தேயிலை, இரப்பர், கோப்பித் தோட்டங்களில் வேலை செய்தார்கள். லயம் என்று சொல்லுகிற தகரக் கொட்டில்களில் வாழ நிர்ப்பந்திக்கப் பட்டார்கள். சமையல், சாப்பாடு. படுக்கை எல்லாம் இந்த லயத்தில்தான். இறந்த பின் இவர்களது உடல்கள் தோட்டங்களில் புதைக்கப்பட்டு தேயிலைச் செடிகளுக்கு உரம் ஆகின.

இவர்களின் குடிப்பெயர்வு மிகவும் சோகமானது. பயணம் செய்ய வேண்டிய நாளில் கையில் இரண்டொரு துணிமணியோடு வீட்டு வாசல்களில் காத்திருப்பார்கள். கங்காணிகள் இவர்களை கால் நடையாக இராமேஸ்வரம் வரையும் கூட்டி வருவார்கள். அதற்குப் பிறகு தோணிகளில் மன்னார் கொண்டு வரப்படுவார்கள். மன்னாரை அடைந்ததும் அங்கிருந்து பல மைல்களுக்கு அப்பாலுள்ள மத்திய, தென்பகுதி இடங்களுக்கு கால் நடையாகக் காடு, மலைகள் ஊடாக அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த நீண்ட, கரடு முரடான பயணத்தில் நாலில் ஒரு பகுதியினர் நோய் காரணமாக சாவை அணைத்துக் கொண்டார்கள். ஏழ்மையும் வறுமையுமே இந்த மக்களைத் தாம் பிறந்த தாய் நாட்டை விட்டு வெளியேறச் செய்தது. ஏழ்மைக்குக் காரணம் கல்வி இன்மையே. சமூக ஏணியின் கடைசிப் படியில் இருந்த இந்த மக்களை சமூகம் மக்களாகவே கணிக்கவில்லை. இந்து மதம் இவர்களைத் தீண்டாதார் என்று முத்திரை குத்திச் சேரிகளில் ஒதுக்கி வைத்தது. சாமி கும்பிடக் கூட இந்த மக்களுக்கு உரிமை இருக்கவில்லை. இன்று கூட தோட்டங்களில் வேலை செய்யும் தமிழர்கள் உலகத்தில் மிக மோசமாகச் சுரண்டப் படும் தொழிலாளர்களாக எண்ணப்படுகிறார்கள்.

1827 இல் மட்டும் இலங்கையில் குடியேறிய மலையகத் தமிழர்களின் எண்ணிக்கை 10,000 ஆகும். இது 1877 இல் 1,46,000 ஆக உயர்ந்தது (இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம், ஈழ ஆய்வு நிறுவனம்). 1946 குடிமக்கள் கணக்கெடுப்பின் போது மலையகத் தமிழர்களது எண்ணிக்கை 780,589 ஆக உயர்ந்திருந்தது.

ஏ.இ. குணசிங்கா தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்த போது இலங்கை முழுவதற்கும் ஒரேயொரு சட்டசபைப் பிரதிநிதியாக இருந்த சேர். பொன்னம்பலம் இராமநாதன் ‘இந்தியாவில் இருந்து 2,500 ஆண்டுகளுக்கு முன் காற்றின் வீச்சினால் தற்செயலாக இலங்கை வந்தடைந்த சிங்கள மக்கள் எப்படித் தோட்டத் தொழிலாளிகளைப் பார்த்து இந்தியனே வெளியேறு என்று கூறமுடியும்? தேளை, பாம்பைக் கொல்லாது துரத்தும் சிங்கள மக்கள் எப்படி மனம் வந்து இம் மலைநாட்டுத் தமிழரை வெளியேறச் சொல்ல முடியும்? இது புத்த நெறிக்கோ தருமத்திற்கோ ஒத்துப் போகுமா?’ எனச் சட்டசபையில் வருத்தத்தோடு கேட்டார்.

இவ்விதம் மலையகத் தமிழ்மக்கள் நலன் கருதி சிங்களச் சட்டமன்றத்தில் குரல் கொடுத்தபோது இராமநாதனுக்கு அகவை 78 நிறைந்திருந்தது. (பக்கம்1791 சட்டமன்றப் பதிவேடு மூன்று-1928)

சிங்கள மொழி

சிங்களம் ஓர் இந்தோ – ஆரிய குடும்பத்தைச் சார்ந்த மொழி என்றாலும் அதில் காணப்படும் சில அம்சங்கள் ஏனைய இந்தோ – ஆரிய குடும்பத்தைச் சார்ந்த குடும்ப மொழிகளில் காணப்படவில்லை. காரணம் சிங்களம் ஒன்று மட்டுமே இந்தியாவுக்கு வெளியே பேசப்படும் இந்தோ – ஆரிய மொழியாகும்.

சிங்களம் மற்றும் தமிழ் இரண்டுக்கும் இடையேயுள்ள ஒற்றுமைகளின் அடிப்படையில் சிங்களம் திராவிட குடும்பத்தைச் சேர்ந்த மொழி என்று கூறும் புலமையாளர்களும் இருக்கிறார்கள். சிங்கள புலமையாளர்களில் ஒருவரான டபுள்யூ. எவ். குணவர்த்தன தாம் எழுதிய சித்தாந்த பரிஸ்சானய என்ற நூலில் பின்வருமாறு கூறகிறார்.

‘சிங்களமொழி இலக்கணத்தில் காணப்படும் முக்கிய அம்சங்கள் ஆரிய மொழி இலக்கணத்துக்கு மாறாக உள்ளன. சிங்கள மொழி இலக்கணத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் தமிழ்மொழியோடும் திராவிட மொழிவழக்கோடும் ஒத்துப் போகின்றன. இதில் இருந்து நான் ஒரு முடிவுக்குக் கட்டாயமாக வரவேண்டியிருந்தது. அதாவது சிங்களத்தின் கட்டுமான அடித்தளம் திராவிடமாகவும் அதன் கட்டுமான மேல்தளம் அதாவது அதன் சொற்றொகுதி ஆரியமாகவும் காணப்படுகிறது என்பதுதான்.’ சிங்கள மொழியை இந்தோ-ஆரிய மொழிக் குடும்பத்துடன் இணைத்து மாக்ஸ்முல்லர் குறிப்பிட்டார். திராவிட மொழிக் குடும்பத்துக்குள் சிங்களம் வராது என கால்டுவெல் சொன்னார். இதனால் சிங்களம் ஒரு இந்தோ – ஆரிய மொழி என்ற கருதுகோளே மேலோங்கிக் காணப்படுகிறது.

மொழிகளைப் பற்றி ஆய்வு செய்யும் சமூக – மொழியியலாளர்கள் இரண்டு வௌ;வேறு மொழிகள் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொள்ளும் போது அவை பல வழிகளில் ஒன்றன் மீது ஒன்று செல்வாக்குச் செலுத்துகின்றன எனக் கூறுகிறார்கள். இதில் எந்த மொழி வல்லமை மற்றும் பெருமை படைத்ததோ அந்த மொழி அன்பளிப்புச் செய்யும் மொழியாகவும், இரண்டாவது மொழி அன்பளிப்பை வாங்கும் மொழியாகவும் மாறிவிடுகிறது. சிங்கள – தமிழ் ஊடாடத்தில் தமிழ் கொடுக்கும் மொழியாகவும் சிங்களம் அதனை வாங்கும் மொழியாகவும் இருக்கின்றன.

சிங்களத்தில் உள்ள தமிழ்ச் சொற்களை சிங்கள பாஷேவய தெமிள வாசன அகராதிய என்ற நூலில் தொகுத்துள்ளார்கள்.

தமிழ்மொழி சிங்களமொழியின் மீது செல்வாக்குச் செலுத்தியதற்கு முக்கிய காரணம் தமிழ்மொழி ஆட்சி அதிகாரம் மற்றும் உன்னதமான இடத்தைக் காலத்துக்குக் காலம் வகுத்தமையே.

அனுராதபுரத்தை ஆண்ட தமிழ் மன்னர்கள்

கிமு 3 ஆம் நூற்றாண்டிற்கும் (கிமு 247) கிமு 1 ஆம் நூற்றாண்டிற்கும் (கிமு 29) இடைப்பட்ட 220 ஆண்டுகால அனுராதபுர அரசின் வரலாற்றில் ஆட்சி புரிந்த 19 மன்னர்களுள் 8 தமிழ் மன்னர்கள் 81 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி புரிந்துள்ளனர்.

கிமு மூன்றாம் நூற்றாண்டில் இரண்டு தமிழர்கள் (பாலி மொழியில் தெமிள) – சேனன், குத்திகன் – அனுராதபுரத்தைப் பிடித்து 22 ஆண்டுகள் ஆண்டதாக மகாவம்சம் சொல்கிறது. அடுத்ததாக எல்லாளன் அனுராதபுரத்தைக் கைப்பற்றி 44 ஆண்டுகள் (கிமு 145 – 101) ஆட்சி செய்தான்.

ஆயினும் இக்கால வரலாற்றைப் பல அத்தியாயங்களில் கூறும் மகாவம்சம் தமிழ் மன்னர்களின் ஆட்சியைச் சில செய்யுட்களில் மட்டுமே கூறி முடிக்கின்றது. எல்லாளன் என்ற தமிழ் மன்னனை வெற்றி கொண்டதன் மூலம் பவுத்த மதத்துக்கு பெருமை தேடித் தந்த வீரனாக வருணிக்கப்பட்ட துட்டகைமுனுவின் 24 ஆண்டுகால ஆட்சியை 843 செய்யுட்களில் கூறும் மகாவம்சம், 44 ஆண்டுகள் நீதி தவறாது ஆட்சி நடத்திய எல்லாளனை 21 செய்யுட்களில் மட்டுமே கூறுகிறது. இது ஒன்றே பாளி இலக்கியங்களில் தமிழ் மன்னர்களின் வரலாறு மறைக்கப்பட்டுள்ளமைக்கு சிறந்த சான்றாக அமைகிறது.

எல்லாளனது நீதி தவறாத ஆட்சியைப் புகழ்ந்துரைக்கும் பாளி நூல்கள், இவன் புன்நெறியைத் (இந்து மதத்தினை) தழுவியவன் எனக் கூறப் பின்நிற்கவில்லை. இவன் தனது ஆட்சியில் பவுத்த மதத்திற்கு ஆதரவு அளித்த போதிலும் தன் பழைய மத நம்பிக்கையைக் கைவிடவில்லை என மகாவம்சம் குறை கூறுகிறது.

‘எல்லாளன் – துட்டகைமுனு இடையிலான போர் சிங்களவர் – தமிழர் போர் என மகாநாம தேரர் கெட்ட எண்ணத்தோடு சித்திரிக்கிறார். கைமுனுவின் குடிவழியைக் கவனமாக ஆராய்ந்தால் எல்லாளனைப் போலவே அவனும் ஒரு தமிழனே. ஒரேயொரு வேறுபாடு. கைமுனு பவுத்தன். எல்லாளன் இந்து. எல்லாளன் பவுத்தத்தின் எதிரியல்ல. உண்மையில் அவனைப் பவுத்தர்கள் நேசித்தார்கள். கைமுனுவிடம் காணப்பட்ட பலமான இந்து மரபுவழி காரணமாக அவன் கதிர்காமத்திலுள்ள முருகப் பெருமானின் பக்தனாக விளங்கினான்.’

(The wars fought by Gemunu and Elara were not Sinhala-Tamil wars as maliciously projected by Mahanama. A careful examination of Gemunu’s pedigree will reveal that he was as much a Tamil as Elara,  with the difference being that Gemunu was a Buddhist ,  while Elara was a Hindu. Elara was no enemy of the Buddhists. He was in fact  loved by the Buddhists. The strong hereditary Hindu element in Gemunu  (present even today in all Sri Lankan Buddhists)  made him a devotee of the Dravidian God Murukan at Kathirkamam. It is said in the Mahawamsa that Gemunu invoked the blessings of the Lord Murukan to endow him with strength to defeat King Elara in battle. Dr.S.K. Vadivel – Tamil Canadian)

எல்லாளன் மீது துட்டகைமுனு போர் தொடுத்தற்குக் காரணம் தனது மூதாதையர் ஆண்ட அரசுரிமையை மீளக் கைப்பற்றவே ஆகும். மகாநாம தேரர் துட்டகைமுனுவின் போர் முழக்கம் ‘இராச்சியத்துக்கு அல்ல பவுத்தத்தின் மேன்மைக்கு’ என்ற கதையைப் புனைந்துள்ளார்.

துட்டகைமுனு காலத்தில் சிங்கள இனம் என்றொரு இனம் இருக்கவில்லை. அவன் தந்தை வழியிலும் தாய் வழியிலும் நாக வம்சத்தவன் ஆவான். மேலும் மகாநாம தேரர் காலத்திலும் (6 ஆம் நூற்றாண்டு) சிங்களவர் இருக்கவில்லை. சிங்களமொழியும் இருக்கவில்லை. சுருக்கமாகச் சொன்னால் மக்களிடையே இன அடையாளம் இன உணர்வு இருக்கவில்லை. சாதி, சமய பிரிவுகளே இருந்தன. இனம் (சுயஉந) என்ற சொல் ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னர் வழக்கத்துக்கு வந்த ஒன்றாகும். தமிழில் இனம் என்ற சொல் சுற்றத்தை அல்லது குலத்தைக் குறிக்கும்.

மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் இனநலம் எல்லாப் புகழும் தரும் என்பது திருக்குறள். இந்தக் குறள் சிற்றினம் சேராமை என்ற அதிகாரத்தில் வருகிறது.

இனம் என்ற சொல் அபிராமி அந்தாதியில் சுற்றம் அல்லது நட்பு என்ற பொருளில் பாடப்பட்டிருக்கிறது. தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும் நல்லன எல்லாம் தரும் … என்பது பாடல்.

அண்மையில் மகிந்த இராசபக்சே துட்டகைமுனு மன்னனின் பரம்பரை வாரிசு மட்டுமன்றி கவுதம புத்தரின் பரம்பரை வழி உறவினருமாவார் என்று பிரபல சிங்கள கலைஞர் ஜெக்சன் அந்தோனி தெரிவித்திருந்தார்.

இலங்கை முழுவதும் சிங்கள மக்களுக்கே உரியது என்றும், இலங்கையின் அனைத்துப் பாகங்களிலும் முற்காலத்தில் சிங்கள மக்களும் பவுத்த தேரர்களும் பரவி வாழ்ந்ததாக எண்பிக்க ஊடக ஆய்வு நடவடிக்கையை ஜக்சன் அண்டனியிடம் ஒப்படைக்குமளவுக்கு அவர் மகிந்த இராசபக்சேக்கு மிகவும் நெருக்கமான ஒரு கலைஞராவார்.

ஜக்சன் இலங்கையின் தொடக்க கால வரலாறு பற்றித் தொலைக்காட்சியில் நடாத்திவரும் நிகழ்ச்சியின் திரைக்கதைப் படி சனாதிபதி செயலகத்திலிருந்தே தயாரித்துக் கொடுக்கப்படுகின்றது.

அவ்வாறான ஒரு நிகழ்ச்சியின் போதே ஜக்சன் மகிந்த இராசபக்சே துட்டகைமுனு மன்னனின் வாரிசு மட்டுமன்றி, கவுதம புத்தரின் பரம்பரை வழி உறவினருமாவார் என்ற மகாவம்ச கூறும் கதையின் அடிப்படையில் கருத்து வெளியிட்டிருந்தார். துட்டகைமுனு மன்னனின் உண்மையான வாரிசுகள் தாம் என்று எண்பிக்கும் வகையில் இப்போது அனுராதபுரம் முழுதும் தொல்பொருள் ஆய்வுகளை மேற்கொண்டு துட்டகைமுனு மன்னனின் வாளைத் தேடி வருகிறார்கள்!

மகாவம்ச கதையின் அடிப்படையில் கவுதம புத்தர் தொட்டு மகிந்த இராசபக்சே வரையான பரம்பரை வழித்தொடர் பின்வருமாறு அமைகின்றது.

கவுதம புத்தரின் தந்தை – சுத்தோதனன்
சுத்தோதனனின் உடன்பிறப்பு – அமிதோதனன்
அமிதோதனனின் மகன் – பாண்டுசாக்கிய
பண்டுசாக்கியாவின் மகள் – பட்டககச்சானா
பத்தகச்சானா இலங்கை வந்து பண்டுவாசுதேவனை மணக்கின்றாள். அவர்களின் குழந்தை உன்மாத சித்ரா வாகும்.
உன்மாத சித்ராவின் மகன் – பாண்டுகாபயன்
பண்டுகாபயவின் மகன் – மூத்தசிவன்
மூத்தசிவனின் மகன் – தேவநம்பிய தீசன்
தேவநம்பிய தீசனின் உடன்பிறப்பு – மகாநாகன். இவனே உருகுணைக்கு தனது மனைவியோடு தப்பிச் சென்று புதிய இராசதானியை உருவாக்கியவன்.
மகாநாகவின் உடன்பிறப்பு – யடாலதிஸ்ஸ
யடாலதிஸ்ஸவின் சகோதரன – கோத்தபாய
கோத்தபாயாவின் மகன் – காகவண்ண தீசன்
காகவண்ண தீசன் மகன் – துட்டகைமுனுதுட்டகைமுனுவின் தந்தை – காகவண்ண தீசன்

மகாவம்ச ஆசிரியர் மகாநாம தேரர் விஜயனுக்குப் பின்னர் அரசு கட்டில் ஏறியவர்களை கவுதம புத்தரின் குடும்பத்தோடு வலிந்து இணைத்துள்ளார். உண்மையில் விஜயனுக்குப் பின்னர் பட்டத்துக்கு வந்தவன் பாண்டிய வம்சத்தை சேர்ந்த பாண்டுவாசு தேவன். அவனது பெயரே அவனது வம்சத்தைக் கூறிவிடுகிறது