எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் (பகுதி (இறுதி) 23))

நாட்டின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 40 சதவீத நிலங்கள் விவசாய உற்பத்திகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்று அரசு தெரிவிக்கிறது. ஆனால் எவ்வளவு விவசாயிகள் என்னென்ன அளவு நிலங்களில் என்னென்ன பயிர்களை விளைவித்து எந்தெந்த அளவில் ஒவ்வொன்றையும் அறுவடை செய்கிறார்கள் என்பன பற்றிய துல்லியமான தரவுகளைப் பெறுவதற்கு அரசிடம் ஒரு சீரான அமைப்பு முறை கிடையாது. மேலும் கைத்தொழில் உற்பத்தித் துறைகள் தொடர்பிலும் அரசின் நிலை அவ்வாறே உள்ளது. அதேபோலவே, சேவைத் துறைகளில் மிகப் பிரதானமானதான தனியார் வியாபார அலகுகளுடன் அரசு கொண்டுள்ள தொடர்புகளும் பெரும்பாலும் உதிரித்தனமானதாகவே உள்ளது. குறிப்பாக, சிறு மற்றும் குறு வியாபார அமைப்புகள் நாடு முழுவதுவும் பல்வேறு அளவுகளில் பரந்துள்ள போதிலும். அவை அனைத்தினதும் வர்த்தக நடவடிக்கைகள் பற்றிய முழுமையான விபரங்களை அரசின் பதிவுகளில் பெற முடிவதில்லை. ஏனெனில் அவை தொடர்பில் அரசின் புள்ளிவிபர கணக்கெடுப்புகள் தொடர்ச்சியாகவோ துல்லியமாகவோ மேற்கொள்ளப்படுவதில்லை.   

அரசின் திணைக்கள அலுவலகங்களினுடாக உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் மான்ய கொடுப்பனவுகள் மற்றும் உதவித் திட்ட நடைமுறைகளின் போது மேற்கொள்ளப்படும் பதிவுகள், சேகரிக்கப்படும் தரவுகள் – தகவல்கள் மற்றும் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் மாதிரி ஆய்வுகளிலிருந்து பெறப்படும் விபரங்கள் ஆகியவற்றிலிருந்து கணிக்கப்படும் முடிவுகளிலிருந்தே நாட்டின் கிராமிய, பிராந்திய மற்றும் தேசிய பொருளாதாரத்தின் பல்வேறு அம்சங்கள் தொடர்பான தரவுகள் – தகவல்கள் அரச அமைப்புக்களினால் வெளியிடப்படுகின்றன.  

சட்டப்படி அமைப்புரீதியாக தமது தொழில் செயற்பாடுகளை அதற்குரிய அரச அலுவலகங்களில் பதிவு செய்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்திலுள்ள பெரும் மூலதனம் கொண்ட தொழில் முயற்சிகளையும் மற்றும் நிரந்தர அமைவிடத்துடன் செயற்படும் சிறு தொழில் முயற்சியாளர்களையும் பற்றிய தகவல்கள் அரசுக்கு கிடைக்கிறது என்பது உண்மையே. ஆனால் அவையும் என்னென்ன அளவில் தொடர்ச்சியாக உற்பத்திகளை, விற்றல்களை மற்றும் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்கின்றன என்பன பற்றிய முழுமையான தரவுகள் அரசுக்கு கிடைப்பது மிகக் குறைவாகவே உள்ளது. அவற்றை முறையாகவும் முழுமையாகவும் பெற்றுக் கொள்வதற்கு அவசியமான திறன் வாய்ந்த நிறுவன செயற்பாடுகள் அரசின் பக்கத்திலிருந்து நடைபெறுவது மிகவும் பலயீனமானதாகவே உள்ளது. அதேவேளை நாடு முழுவதிலும் தத்தமது குடும்ப அளவில் செயற்படும் அல்லது அத்துடன் மிகக் சிறிய அளவில் குடும்பத்துக்கு அப்பால் கூலி உழைப்பாளர்களையும் இணைத்து செயற்படும் குறு தொழில் முயற்சிகள் மிகப் பரந்த அளவில் உள்ளன. அவை பற்றிய பதிவுகளோ அல்லது அவர்கள் பற்றி முறையாகத் திரட்டப்பட்ட தரவுகளோ அரசிடம் இருப்பதில்லை. அரச அதிகாரிகள் தமது ஊழியர்களின் உதவியுடன் எழுந்தமானமாக தயாரிக்கும் தகவல் அறிக்கைகளை நம்பியே அரசாங்கத்தின் திட்டங்களும் தீர்மானங்களும் அமைகின்றன.   

அரசிடம் பல்வேறு வகைகளிலான பொது நிர்வாக அமைப்புகள் இருப்பது போல் போதிய அளவுக்கு நாட்டின் பொருளாதார செயற்பாடுகள் அனைத்தோடும் முழுமையாகவும் முறையாகவும் தொடர்ச்சியாகவும் கணக்கெடுப்புகளை மேற்கொள்வதற்கும், கண்காணிப்பதற்கும் தேவையான நிறுவன அமைப்புகள் அரசிடம் இல்லையென்றே கூறலாம். நாட்டில் சட்டம் ஒழுங்குக்கு எவ்வாறு ஒரு சிறந்த நிறுவன அமைப்பு அரசுக்கு இருக்க வேண்டுமோ அதேயளவுக்கு நாட்டின் பொருளாதாரம் தொடர்பிலும் அரசு நிறுவன அமைப்புக்களைக் கொண்டிருக்க வேண்டும். அரசுக்கான வரி வருமானங்களைத் திரட்டும் அமைப்புகளின் செயற்பாடுகள் மிகவும் வரையறுக்கப்பட்ட அளவிலேயே உள்ளன. புள்ளி விபரத் திணைக்களம், திட்டமிடற் பிரிவுகள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என லட்சத்துக்கு மேற்பட்டோர் அரச ஊழியர்களாக இருப்பினும், அவர்களும் அரசின் பொது நிர்வாக அமைப்பின் பாகமாகவே – பொது நிர்வாக அமைப்பின் வழிகாட்டல்கள் மற்றும் நெறிப்படுத்தல்களுக்கு உட்பட்டவர்களாகவே உள்ளனர். அரசின் முறையானதொரு பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் மேலிருந்து கீழ்நிலை வரையில் நெறிப்படுத்தப்படும் – வழிநடத்தப்படும் செயற்பாட்டாளர்களாக அவர்கள் இல்லை.   

யதார்த்தங்களை சரியாக அளவிடத் தவறினால் முன்னேற்றங்களை முறையாக மேற்கொள்ள முடியாது

இவ்வாறான நிலையில், எவ்வளவு பேர் என்னென்ன வேலைகளில் எந்தெந்த அளவு உழைப்பை செலுத்துகின்றனர்? ஒவ்வொரு உழைப்பினதும் உற்பத்தித் திறன் ஒவ்வொரு துறைகளிலும் எந்த அளவில் உள்ளது? எவ்வளவு பேர் முழு நேர வேலையற்றவர்களாக, பகுதி நேர வேலையற்றவர்களாக, பருவகால வேலையற்றவர்களாக  உள்ளனர்? எவ்வளவு பேர் என்னென்ன அளவில் நாளாந்த, மாதாந்த, வருடாந்த வருமானத்தை பெறுகிறார்கள் என்பனவற்றை எவ்வாறு உண்மையில் துல்லியமாக அரசால் அறிய முடியும்?இந்நிலையில் நாட்டில் எந்தெந்த துறையைச் சேர்ந்த எந்தெந்த நிறுவனத்துக்கு அல்லது யார்யாருக்கு எவ்வகையில் மான்ய உதவிகளை, உற்பத்திசார் கடன் உதவிகளை மற்றும் ஏனைய வகைப்பட்ட நிதி உதவிகளை வழங்குவது என்பதை அரசால் எவ்வாறு திட்டவட்டமாகத் தீரமானித்து செயற்படுத்த முடியும்?நாட்டில் என்ன கணக்கில் முதியோர்களுக்கு அரசு உதவிகளை வழங்குவது மற்றும் என்ன அளவில் வேலையற்றோருக்கு நிதி உதவிகளை வழங்குவது என்பவற்றை அரசாங்கத்தினால் எவ்வாறு திட்டவட்டமாக சரியாக மேற்கொள்ள முடியும்? நாட்டில் 3 சதவீதமான குடும்பங்கள் மட்டுமே வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கிறார்கள் எனத் தெரிவிக்கும் அரசு அதற்கு மாறாக வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவர்களுக்கான அரச உதவித் திட்டமான சமுர்த்தித் திட்டத்தின் கீழ் மொத்த குடித்தொகையில் 30 சதவீதமானவர்களைக் கொண்டிருக்கிறது. இது எந்த வகையான கணக்கெடுப்பின் அடிப்படையில் அரசாங்கத்தினால் செயற்படுத்தப்படுகிறது? இவ்வாறாக பல்வேறு கேள்விகள் இங்கு எழுகின்றன.  

அரசு வரி வருமானங்களை முழுமையாகவும் முறையாகவும் திரட்டுவதற்கு நாட்டில் நடைபெறும் உற்பத்திகள் மற்றும் வர்த்தகங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் அரசிடம் இருப்பது அவசியமாகும். இலங்கை அரசின் அனைத்து நேர்முக மற்றும் மறைமுக வரிகளின் வீதாசாரங்களை இந்தியாவுடன் ஒப்பிட்டால், பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரி, பெறுமதி கூட்டல் வரி, வருமானவரி போன்ற பிரதானமான வரிகள் ஒரே அளவிலேயே உள்ளன. ஆனால் இந்திய அரசு இந்தியாவின் மொத்த தேசிய வருமானத்தில் 20 சதவீதத்தை அரச வருமானமாக திரட்ட, இலங்கை அரசோ அதிகபட்சம் 12 சதவீதத்தை மட்டுமே திரட்டுகிறது. குறைந்த வருமான தரம் கொண்ட இந்தியாவின் அரசின் பொருளாதார மற்றும் நிதித்துறை கட்டமைப்புகள் பல்வேறு வகைப்பட்ட குறைபாடுளைக் கொண்டிருந்தாலும், அதனால் அந்த அளவுக்கு உயர்வாக செயற்பட முடிகிற போது இலங்கை அரசமைப்பினால் ஏன் முடியவில்லை என்ற கேள்வியை இங்கு எழுப்ப வேண்டியுள்ளது. இந்திய அரசு திரட்டும் அளவு வீதாசாரத்துக்கு இலங்கை அரசும் வரி வரவுகளைத் திரட்டுமானால் இலங்கை அரசு தற்போது மேற்கொள்ளும் அனைத்து மீண்டெழும் செலவுகளுக்கும்தேவையான அளவு வருமானத்தைக் கொண்டிருக்கும் என்பதோடு, அதனால் அதனது மூலதனச் செலவிலும் கணிசமான பங்கை சொந்த வருமானத்தைக் கொண்டே மேற்கொள்ள முடியும்.  

அரசின் இறைமை, தேசத்தின் பாதுகாப்பு போன்றன பற்றி ஆட்சி பீடத்தில் அமர்ந்திருக்கும் ஒவ்வொரு கட்சியினரும் அடிக்கடி உரத்துப் பேசுகிறார்கள். ஆனால் அதே ஆட்சியாளர்கள் இங்கு வறுமைப்பட்ட– பிச்சையெடுக்கின்ற ஒரு நிலைமைக்கு இலங்கையின் அரச கட்டமைப்பை ஆக்கிவிட்டிருக்கிறார்கள். நாட்டின் பொருளாதார உண்மைகள் தொடர்பில் அரச கட்டமைப்புக்கள் அரைகுறை அறிவையே கொண்டிருக்கின்றன. இதனாலேயே எவர் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களால் அவர்கள் பிரகடனப்படுத்தும் அளவுக்கு வரி வருமானத்தைத் திரட்ட முடியாமற் போகின்றது. மேலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எவற்றை எப்படி மேற்கொள்ள வேண்டும், எவற்றை எந்த அளவுக்கு தவிர்க்க வேண்டும் என்பன பற்றி அரசாங்கத்தால் திட்டமிட்டுச் செயற்பட முடியாமைக்கும் அவை அடிப்படைக் காரணங்களாக அமைகின்றன. நாட்டில் எங்கெங்கே என்னென்னவாறாக பொருளாதார செயற்பாடுகள் நடைபெறுகின்றன என்பன பற்றிய தரவுகள்–தகவல்கள் அரசிடம் இல்லையானால் நாட்டில் எவற்றை எவ்வாறாக செயற்படுத்துவது என்பதை எப்படி அரசாங்கத்தால் திட்டமிட்டு நடைமுறைப்படு;த்த முடியும் என திரும்பத் திரும்ப கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது. 

ஊழல் மோசடி பேர்வழிகளின் குகையாக இருக்கும் அரச அமைப்பால்அபிவிருத்தி எப்படி சாத்தியமாகும்

தேர்தல் பிரச்சாரங்களின் போது ஒவ்வொரு பிரதானமான கட்சியும் ‘லஞ்சம், ஊழல் மோசடிகள் அற்றதோர் ஆட்சியை அமைப்போம்’ என்றுதான் மக்களுக்கு வாக்குறுதி அளிக்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு ஆட்சியும் அடுத்தடுத்து பதவியேற்று ஆளும் காலத்தில் போட்டி போட்டுக் கொண்டு லஞ்சம் மற்றும் ஊழல் மோசடிகளை பெருக்குகிறார்களே தவிர அவற்றை ஒழிப்பதற்கு உண்மையாகவும் நேர்மையாகவும் முயற்சியெடுத்ததாக சுதந்திர இலங்கையில் சரித்திரமே இல்லை. 

அரசின் வரி வருமானங்களைத் திரட்டுவதில் உள்ள குறைபாடுகளில் கணிசமான அளவுக்கு லஞ்ச ஊழல் மோசடிகளின் பங்கு இருப்பதாக அரச நிதி நிர்வாக பதவிகளின் உயர்மட்டத்திலிருந்து ஓய்வு பெற்றவர்களும் பொருளியல் துறையைச் சேர்ந்த பல பேராசிரியர்கள் மற்றும் நிபுணர்களும்அடிக்கடி கூறுவதையும் இங்கு கவனத்திற் கொள்ள வேண்டியுள்ளது. எனவே, இங்கு வேலியே பயிரை மேயும் கதைதான் நடக்கிறது. அரச நிதி திரட்டலில் மட்டுமல்ல அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்ட ஒதுக்கீடுகளும் கூட எந்த வகையான அபிவிருத்தி வேலைத் திட்டங்களில் அதிகளவில் இலகுவாக லஞ்சம் பெறலாம், பொது நிதியை கமுக்கமாக அமுக்கிக் கொள்ளலாம் என்பவற்றை இலக்காகக் கொண்ட தீர்மானங்களாகவே உள்ளன என்பதுவும் தெளிவாகத் தெரிகின்றது. வீதி அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் கட்டிடத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளைக் கண்ட உடனேயே அமைச்சர்களும் அரச உயர் அதிகாரிகளும் ஆஹா! கட்டிட ஒப்பந்த காரர்களிடமிருந்து லஞ்சமாக பெருந் தொகைகளை வாங்கிக் குவிப்பதற்கான கதவுகள் திறக்கப்பட்டு விட்டன என்று மகிழ்ச்சி கொள்ளும் நிலையே இங்குள்ள அரச கட்டமைப்பில் பரவலாக காணப்படுகிறது. 

வீதிப் போக்குவரத்து சட்ட மீறல்களுக்கான கட்டணத்தை உயர்த்துகின்ற அறிவிப்புகளை அரசாங்கம் மேற்கொண்டவுடன் தமது லஞ்ச வருமானத்துக்கான வழி அகலமாக்கப்பட்டு விட்டதாக எப்படி வீதிப் போக்குவரத்து பொலிஸார் மத்தியில் மகிழ்ச்சி ஏற்படுமோ அதேபோலவே அரச கட்டமைப்பிலுள்ள அனைத்து மட்டத்திலும் லஞ்ச ஊழல் மோசடிக்காரர்கள் பெருச்சாளிகளாக விளைந்து போயுள்ளனர்.        

இங்கு மக்களின் பிரதிநிதிகளாக அதிகார பீடங்களைக் கைப்பற்றுவதற்கான ஜனநாயகம் பணநாயகர்களுக்கு மட்டுமே பொருத்தமானதாக இருக்கிறது. கோடிக் கணக்கில் பணமில்லாதவன் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறலாம் என்ற ஒரு சிறு நம்பிக்கையைக் கூட இங்கு கொள்ள முடியாது. ‘காசில்லாதவன் கடவுளாலும் கதவைச் சாத்தடி’ என்ற ஒரு சினிமா வாக்கியம்தான் இங்கு நினைவுக்கு வருகிறது. காசில்லாத கட்சிகளால் தேர்தல் அரசியலில் காலூன்ற முடியாத வகையான கலாச்சாரம் மக்கள் மத்தியில் இங்கு நன்கு வேரூன்றிப் போயிருக்கிறது. அவ்வாறு செலவு செய்து மக்கள் பிரதிநிதிகளாக வருபவர்கள் தேர்தலின் போது விட்ட பணத்தைப் பிடிப்பதற்கும் அடுத்த தடவை மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்கும் மேலும் கூடுதலான கோடிக் கணக்கில் பணம் செலவழிக்க வேண்டும் – அதற்கான பணத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே இங்குள்ள தேர்தல் ஜனநாயகத்தின் பிரிக்க முடியாத பண்பாக உள்ளமையையும் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.   

இவ்வாறாக தெரிவு செய்யப்பட்டு அதிகார பீடத்தில் அமருவோர் தமது வரவுகளை குவிப்பதற்காக அவர்களது செயலாளர்களையும் மற்றும் உதவியாளர்களையும் பாவிக்க முற்பட்டதன் தொடர்ச்சியாகவே அரச கட்டமைப்பு முழுவதிலும் அதன் கீழ்நிலை மட்டங்கள் வரை லஞ்ச ஊழல் மோசடிகள் ஒரு புற்று நோயாக பரவியிருக்கிறது. அது இப்போது தவிர்க்க முடியாத – மாற்ற முடியாத வகையில் இங்கு செல்வாக்கு செலுத்தும் அரசியலின் யதார்த்தமான கலாச்சாரமாக ஆகியிருக்கிறது. அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகள் அனைத்தும் பொது மக்களின் நலன்களை, நாட்டின் அரசியல் பொருளாதார சமூக முன்னேற்றங்களை இலக்குகளாகக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் இங்கு அதற்கு மாறாக, அதிகாரக் கதிரைகளை அலங்கரித்துக் கொண்டிருக்கும் மக்கள் விரோத மோசடி சக்திகள் நாட்டின் பொதுச் சொத்துக்களை அபகரித்துக் கொள்வதற்கான வாய்ப்புகளையே அதிகமாக்கியுள்ளது.   

மக்கள் முன்னால் எதிர்ப்பு வீறாப்புகள் பின்கதவுகளால் கூட்டுக் களவாணிகள் 

மேற்பந்தியில் கூறப்பட்டதன் அர்த்தம் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருப்பவர்கள் தூய்மையின் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள் – பொதுமக்களின் நலன்களுக்கான போராளிகளாக செயற்படுகிறார்கள் என்பதல்ல. அரசாங்கத்தில் இருப்பவர்கள் ஏதோ வழிகளில் எதிர்க்கட்சி வரிசைகளில் இருப்பவர்களையும் தமது ஊழல் மோசடிகளின் சிறு பங்காளர்களாக ஆக்கிக் கொள்கிறார்கள். அத்தோடு எதிர்க் கட்சி வரிசையில் இருப்பவர்கள் அடுத்த தேர்தலின் போது தமக்கான சந்தர்ப்பத்துக்காக காத்திருப்பவர்களாகவே பெரும்பாலும் உள்ளனர். இவ்வாறாக, இந்த முதலாளித்துவ தேர்தல் ஜனநாயக முறை அதனது பாகமாக கொண்டுள்ள பொருளாதார புற்று நோயிலிருந்து –மோசடிக் கலாச்சாரத்திலிருந்து அரச செயற்பாடுகளை மீட்க முடியுமா –சாத்தியமா – இதனோடுதான் தொடர்ந்து பயணிக்க வேண்டுமா என்ற பல கேள்விகள் தொடராக எழுகின்றன.  

முதலாளித்துவ தேர்தல் ஜனநாயகத்தில் நாட்டு மக்களால்தான் அரசை வழி நடத்துவதற்கான அரசாங்கத்தை தமது வாக்குகளால் மக்களே தெரிவு செய்கின்றனர் என்பது உண்மையாயினும், மக்கள் எந்தளவுக்கு தமது பிரதிநிதிகளை அதிகார பீடத்துக்கு தெரிவு செய்கின்ற பொழுது தமது மத்தியில் நடமாடும் அரசியல்வாதிகள் பற்றிய உண்மைகளை அவர்களின் உள் நோக்கங்களை அடையாளம் கண்டு கொள்வதில் கண்ணும் கருத்துமாக –அக்கறையாக இருக்கிறார்கள் என்றால் அப்படி இல்லை என்பதுவே யதார்த்தம். மொழி மற்றும் மத இனவாதம், சாதி பேத வாதம், பிரதேச வாதம், ஆத்திரம் மற்றும் வெறுப்புடன் விடயங்களைப் புரிந்து கொள்ளல், பழி வாங்கும் உணர்வுகள் போன்றவற்றை ஊக்குவிக்கும் உணர்ச்சி ஊட்டல்களுக்கு பரந்து பட்ட பொது மக்கள் மட்டுமல்ல படித்தவர்களும் கூட பலியாகி விடுவதே இங்கு சாதாரணமாக உள்ளது. பெரும்பான்மையான பொதுமக்கள் தமக்கு முன்னால் நிற்கும் அரசியல் சமூக விடயங்களில் பகுத்தறிவு பூர்வமாக தமது தீர்மானங்களை மேற்கொள்பவர்களாக இல்லை –அவ்வாறாக இருப்பதற்கான சாத்தியங்கள் எதனையும் இங்கு காண முடியவில்லை என்பதே உண்மை.  

மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் அதிகார பீடத்தில் அமர்ந்ததும் தமது சமூக நலன்கள், பரந்துபட்ட பொதுமக்களின் நலன்கள், நாட்டு நலன்கள் என்பவை பற்றி உதட்டளவில் பேசிக் கொண்டு நடைமுறையில் தமது சுயநலன் சார் நிகழ்ச்சி நிரல்களிலேயே செயற்படுகின்றனர். இதனால் இங்கு ஜனநாயக கொள்கை மற்றும் கோட்பாடுகள், கூட்டுப் பொறுப்பு, மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமைப்பாடு, சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்டு செயற்படுகின்றமை, தாம் சத்தியப் பிரமாணம் செய்தபடி அரசியல் யாப்புக்கு அமைவாக பொறுப்புடன் கடமையாற்றுகின்றமை என்பதெல்லாம் சாதாரண பிரஜைகளுக்கு மட்டுமே கட்டாயமானவை –ஆட்சியாளர்களுக்கோ அவை பொய்யான – பொருத்தமற்ற –அந்நியமான – அவசியமற்ற விடயங்களாகவே உள்ளன. 

மத்திய அரசமைப்பில்அதிகாரங்கள் குவிவதால் முரண்பாட்டுக்குள் சிக்கும் அரசும் மக்கள் நலன்களும்

ஒரு ஜனநாயக அரசு என்பது அதன் பிரதானமான பகுதிகளாகக் கொண்டுள்ள சட்டவாக்க அதிகார அமைப்பு, நிறைவேற்று அதிகார அமைப்பு, நீதித் துறை ஆகிய மூன்றும் ஒன்றோடொன்று இசைவாக செயற்படுவது அவசியமாயினும் அவை மூன்றும் சயாதீனமான செயற்பாடுகள் உடையவையாகவும், அதற்குரிய வகையில் அதிகார வலு வேறாக்கங்கள் கொண்டவையாகவும் இருக்க வேண்டும். இது சுமார் இரண்டரை நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்து அங்கீகரிக்கப்பட்ட ஓர் அடிப்படைக் கோட்பாடு. அப்போதுதான் ஜனநாயகம் உரிய சமநிலைகளைக் கொண்டதாக அமையும் என்பது அறிவார்ந்தோரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு விழுமியம்.  

கீழிருந்து மேல் நோக்கி ஜனநாயகமும்

மேலிருந்து கீழ் நோக்கி மத்தியத்துவமும்

ஜனநாயகம் பேசும் கட்சிகளுக்கு மட்டுமல்ல,  

மக்கள் நலன் சார் ஆட்சித் திறனுக்கும்அவசியமே

ஜனநாயகத்தின் வளர்ச்சிப் போக்கில் தேச அளவில் மையப்படுத்தப்பட்ட ஒரு சிறு குழுவினரிடம் அதிகாரங்கள் குவிந்திருப்பதாக அல்லாமல், கிராமிய மற்றும் பரந்துபட்ட மக்களோடு தொடர்புடையதாகவும் அதிகாரக் கட்டமைப்பில் அவர்களது பங்களிப்பை ஒருங்கிணைப்பதாகவும் இருப்பதற்கு கிராமிய மற்றும் சிறிய அளவிலான எல்லைகளைக் கொண்ட பிரதேச மட்டங்களிலான உள்ளுராட்சி அமைப்புகளும் குறிப்பிட்டளவு சுயாதீனமாக மக்களின் பிரதிநிதிகளைக் கொண்ட வகையாக அமைவது அவசியம் என்பது உணரப்பட்டது. அதனடிப்படையில்,அது கால ஓட்டத்தில் வெவ்வேறு வடிவங்களை எடுத்து ஒரு கட்டத்தில் மாநகர சபைகள், நகர சபைகள்,பட்டின சபைகள் மற்றும் கிராம சபைகள் என உருவங்கள் எடுத்தது. கிராம மட்ட அமைப்புகள் சீனாவில் கம்யூன்களாகவும் இந்தியாவில் பஞ்சாயத்துக்கள் எனவும் வடிவமைக்கப்பட்டன. அவை இன்றைய இலங்கையில் உள்ளுராட்சி அதிகார சபைகள் என்ற பெயரில் மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகள் என உள்ளன.  

மேலும் பல்தேசிய மற்றும் பல்கலாச்சார சமூகங்களைக் கொண்ட நாட்டில் அனைத்து சமூகங்களும் தத்தமது மாகாணங்களின் அல்லது மாநிலங்களின் அடிப்படையில் சமூக பொருளாதார மற்றும் கலாச்சார விடயங்கள் தொடர்பில் அபிவிருத்திகளை – முன்னேற்றங்களை சாதிப்பதற்கும் சாத்தியமாக்குவதற்கும் மற்றும் உள்ளுர் பொது மக்களின் சமூக பொருளாதார பாதுகாப்பு மற்றும் சட்டரீதியான ஒழுங்கு படுத்தல்களையும் நெறிப்படுத்தல்களையும் உறுதிப்படுத்துவதற்கும் மாகாண அல்லது மாநில அரசமைப்புகள் அவசியமாகின்றன. அவற்றிற்கு உரிய சட்டவாக்க அதிகாரங்கள், நிதி அதிகாரங்கள் மற்றும் நிறைவேற்று அதிகாரங்கள் கொண்டவையாகவும், அதற்கேற்ப நிர்வாக நிறுவன கட்டமைப்புகளைக் கொண்டு செயற்படுவதற்கும் உரிய அதிகார மற்றும் நிறுவன பகிர்வு ஏற்பாடுகள் தெளிவாக மேற்கொள்ளப்பட்டிருத்தல் மிக அவசியமாகும்.  

இன்று உலகின் பல்வேறு பாகங்களில் அனைத்து மட்டங்களிலும் தத்தமது அதிகாரத்துக்கு உட்பட்ட பிரதேசங்களின் – மக்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளை அக்கறையுடன் சுயாதீனமாக மேற்கொள்வதற்கான அரச கட்டமைப்பு ஏற்பாடுகள் செயற்படுகின்றன. அவை அந்தந்த நாடுகளில் வரலாற்று ரீதியாக விருத்தி அடைந்த இன, மத, கலாச்சார வேறுபாடுகளுக்கு இடையில் தேசியரீதியான ஒருமைப்பாட்டை முன்னேற்றுகின்றன. அத்துடன் நவீன ஜனநாயக வரலாற்றில் மாகாண மற்றும் அதற்கும் கீழ் மட்டங்களில் சுயாதீனமாக செயற்படுவதற்கான அதிகாரங்களைக் கொண்ட அமைப்புகள் அந்தந்த நாடுகளில் ஜனநாயகத்தை மேலும் சிறப்புற நிலைநாட்டும் வகையான அதிகார சமநிலைகளைப் பேணுவதற்கு அவசியமான அரசியல் நிறுவனங்களாக உள்ளன.  

மத்திய அரச கட்டமைப்பு மட்டும் போதும்! மாகாண சபைகள் வெறும் வெள்ளை யானைகளே! என்று இலங்கையில் உள்ள சிங்கள பௌத்த பேரினவாத – மேலாதிக்கவாத மற்றும் அரைகுறை தேசியவாத சக்திகள் அடிக்கடி கூறுகின்றன. உண்மையில் அவ்வாறான சக்திகள்தான் மாகாண சபைகளை அதனை வெள்ளை யானைகள் போல ஒரு செயற்திறனற்றதாக ஆக்கி வைத்திருக்கின்றன. உலகின் பல நாடுகளில் தேசிய ஒற்றுமையை பலப்படுத்துவதிலும், தேசிய பொருளாதார முன்னேற்றங்களை சாதிப்பதிலும் ஆற்றல் வாய்ந்தவைகளாக செயற்படும் மாகாண அல்லது மாநில அரச அமைப்புகள் இலங்கையில் மட்டும் வெள்ளை யானைகளாக ஆனது ஏன்? எப்படி? என்பது நீண்ட விமர்சனத்துக்கும் விவாதத்துக்கும் விளக்கத்துக்கும் உரியதோர் விடயமாகும்.  

எவ்வாறாயினும், ஜனநாயக விழுமியங்களின் அடிப்படையில் இலங்கையின் அரசியல் யாப்பின்படியுள்ள மாகாண சபைகளையும் மற்றும் சட்டப்படியான உள்ளுராட்சி அமைப்புகளையும் ஆற்றலுள்ளவைகளாக செயற்பட வைக்க வேண்டியது இலங்கை மத்திய அரசாங்கத்தின் முதன்மையான பொறுப்பும் கடமையுமே. ஆனால், ரணசிங்க பிரேமதாசா ஆட்சிக் காலம் தொடக்கம் மாறி மாறி வந்த ஒவ்வொரு அரசாங்கமும் அவற்றை பலயீனப்படுத்தி அவற்றை செயற்திறனற்றதாக ஆக்கி விட்டன என்பதே உண்மையாகும். பலமான பயனுள்ள ஒரு யானையை தாங்களே சங்கிலி போட்டு கட்டி வைத்து அதனை பயனற்றதாக ஆக்கி விட்டு, பின்னர் அந்த யானை பயனற்றதாக இருக்கிறது என்று சொல்வது எவ்வளவுக்கு அபத்தமோ அதுவே இலங்கையிலும் நடக்கிறது. ஆனால் 2022ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின்படி சுமார் 30000 கோடி ரூபாக்கள் மாகாண மற்றும் உள்ளுராட்சி அமைப்புகளின் நிர்வாக அமைப்புகளின் செலவீனங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இவ்வளவு பணத்தையும் செலவளித்துக் கொண்டு அவற்றை ஒரு காத்திரமற்றவைகளாக ஆக்கி வைத்திருப்பதுதான் இலங்கையின் அரசியற் கட்டமைப்பினுடைய வினோதமான மிகப் பெரிய பலயீனமாகும்.  

மாகாண சபை போன்ற அரச அமைப்புகள் தேவையில்லையென்றால் மக்களால் தெரிவு செயயப்படும் ஜனாதிபதி மட்டும் போதுமே! பாராளுமன்றமும் தேவையில்லை! அமைச்சரவையும் தேவையில்லை! உள்ளுராட்சி அமைப்புகளும் தேவையில்லை! என்ற முடிவுக்கு வந்து விடலாம். அந்த வகையில் அவையும் இருப்பது வீண் செலவுகள்தானே என்றும் வாதிடலாம்! இவ்வாறான கருத்துக்களைக் கொள்வது ஜனநாயகம் பற்றிய தெளிவின்மையையும் அக்கறையின்மையையுமே வெளிப்படுத்துகின்றன. அத்தோடு இவ்வாறான சக்திகளிற் கணிசமானவை, தமது குறுகிய உள் நோக்கங்களுக்காக தங்களின் அல்லது தங்களுக்கு சாதகமானவர்களின் கைகளில் அதிகாரங்கள் அனைத்தையும் முழுமையாக குவித்து வைத்திருப்பதை இலக்காகக் கொண்ட ஜனநாயக விரோத சக்திகளாக செயற்படும் கூட்டங்கள் என்றே கொள்ள வேண்டும்.  

மத்திய அரசு, மாகாண அரசு, உள்ளுராட்சி என்பன ஒன்றையொன்று சமநிலைப்படுத்துவதாக அதாவது அவை பொலிஸ் அதிகாரம், நிதி அதிகாரம் மற்றும் நிர்வாக அதிகாரங்கள் போன்றனவற்றில்,ஒன்றினது அதிகார துஷ்பிரயோகத்தை மற்றவை கட்டுப்படுத்துபவையாக –கண்காணிப்பவையாக –கேள்விகளுக்கு உட்படுத்துபவையாக அமைவதற்கு அவசியமானவைகளாகும். அந்த வகையில் ஜனநாயகத்தின் சிறப்புக்கு மாகாண மற்றும் உள்ளுராட்சி அமைப்புக்களுக்கான தெளிவான அதிகாரப் பகிர்வுகளும், மேலும் அவற்றின் சுயாதீனமான செயற்பாட்டு அவசியமான அதிகாரங்களை அரசியல் யாப்பு ரீதியாக மிகத் தெளிவாக வரையறுப்பதோடு, அவை அதற்குரிய வகையான அனைத்து நிறுவன கட்டமைப்புகளைக் கொண்டிருக்கவும் உரிய ஏற்பாடுகள் அவசியமாகும்.  

இந்த நாடு நம்பி எதிர்பார்த்திருக்கும் நல்ல நல்ல தம்பிகளே! எங்கே நீங்கள்! 

மத்திய ஆட்சியின் அதிகார பீடத்தில் அமரும் எவரும் தத்தமது கட்சி வேறுபாடுகளுக்கப்பால், அவர்களின் பேச்சுகளில் வேறுபட்டாலும், அவர்கள் தமது கைகளில் அதிகாரத்தைக் குவித்து வைத்திருக்க வேண்டும் என்பதில் குறியாகவே உள்ளனர். இதனாலேயே அரசியல் உறுதியற்ற நிலைமைகள் தொடர்ந்தும் அதிகரிப்பதோடு, தேசியரீதியிலான நெருக்கடிகளை வெற்றி கொள்வதில் பொது மக்களின் ஒத்துழைப்புகளை ஆட்சியாளர்களால் பெற முடிவதில்லை. அத்தோடு தேர்தற் காலங்களில் அதீதமாக பொய்யான வாக்குறுதிகளை வழங்கியவர்களுக்கு, மிகுந்த எதிர்பார்ப்புடன் வாக்களித்த பொது மக்கள், ஆட்சியாளர்களாக ஆனவர்கள் சொன்னவற்றை சாதிக்கவில்லை என்றவுடன் இன மத வேறுபாடுகளுக்கப்பால் அரசாங்கத்துக்கு எதிரானவர்களாக ஆகின்றமை இயல்பான விளைவாகி விடுகின்றது. இலங்கையில் இதனையே கடந்த ஆட்சிக் காலத்திலும் காண முடிந்தது. இப்போதும் காண முடிகின்றது.  

இப்போதுள்ள ஆட்சியாளர்கள் மாற்றப்பட்டாலும், பின்னரும் அதுவே நடக்கும். மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்படுபவர்களாக மட்டுமல்ல, தொடர்ந்து அதிகரித்துச் செல்லும் நெருக்கடிகளை சமாளிக்க முடியாத நிலைமையே தொடரும் என்பதையே இங்கு காண முடிகின்றது. ஆனால் இன்னமும் ஆட்சியாளர்களோ அல்லது எதிர்க்கட்சிக்காரர்களோ உண்மைகளை உணர்ந்து செயற்படுவார்களாக இல்லை மாறாக ஆட்சியில் இருப்பவர்கள் எப்படியாயினும் தமது ஆட்சியைத் தொடர்ந்தும் கொண்டு செல்வது எப்படி என்பதிலும் அடுத்த தேர்தலிலும் எப்படி வெல்வது என்பதிலுமே அக்கறையாக உள்ளனர் அதேபோல எதிர்க்கட்சிக்காரர்கள் என்பவர்களோ எப்படியாயினும் செயற்பட்டு எதையாயினும் மக்களுக்குச் சொல்லி அடுத்த தடவை ஆட்சியைக் கைப்பற்றி விட வேண்டும் என்பதிலேயே அக்கறையாகவும் குறியாகவும் உள்ளனர். 

எனவே எப்படியாயினும் தேர்தலில் வெல்வது, ஆட்சியைக் கைப்பற்றுவது, ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வது, அடுத்த தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றுவது இவை மட்டுமே தேர்தல் அரசியல்வாதிகளின் தாரக மந்திரங்களாக இருக்கும் வரை நாட்டின் பொருளாதார முன்னேற்றமும்,தேசிய இறைமையும், அரசியல் உறுதியும், அனைத்து மக்களுக்குமான அடிப்படை சுதந்திரங்களும் பல்வேறுபட்ட இன மக்களுக்கிடையிலான சகோதரத்துவமும் எப்போதும் சாத்தியமற்றதாகவே அமையும் என்பதனையே இதுவரைக்குமான அனுபவத்திலிருந்து கூற வேண்டியுள்ளது. மாறாக அரசியல் பொருளாதார சமூக முன்னேற்றங்களுக்கான போக்குகளைக் கொண்ட பாதையில் இலங்கை பயணிக்கப் போவது எப்படி! எப்போது! என்பதை எதிர்கால வரலாறுதான் நிர்ணயிக்க வேண்டும்;. 

அனைவருக்கும் நன்றி

இக்கட்டுரைத் தொடரின் 23 பகுதிகளையும் முழுமையாகவோ அல்லது அவ்வப்போது சில பகுதிகளை மட்டுமோ வாசித்து பாராட்டும் வகையாகவோ, குறைகள் கண்ட வகையாகவோ அல்லது எதிரும் புதிருமாகவோ அபிப்பிராயங்களைக் கொண்டுள்ள அனைவருக்கும் நன்றிகளையும் வணக்கங்களையும் கூறி இக்கட்டுரைத் தொடரை இத்துடன் முடித்துக் கொள்கிறேன். 

இக்கட்டுரைத் தொடரில் கூறப்பட்டுள்ளவை பற்றிய உங்கள் அபிப்பிராயங்களை பலரும் அறிய வேண்டும் என்று விரும்புகிறவர்கள் முகநூலில் வெளியிடுங்கள், எனக்கு மட்டும் தெரிவிக்க விரும்புகிறவர்கள் முகநூலின் உட்செய்திப் பகுதியிலோ அல்லது எனது ஈமெயிலிலோ தெரிவிக்கவும். எனது ஈமெயில் முகவரி gowry005@hotmail.com உங்கள் அபிப்பிராயம் எவ்வாறாக இருப்பினும் அவற்றை வெளிப்படத்தினால் அது என்னைத் திருத்திக் கொள்ளவும், எனக்கு உற்சாகம் அளிப்பதற்கும் உதவியாகும் என்பதை அன்பு கலந்த மரியாதையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.