ஐக்கிய நாடுகள் சபையில் கோட்டாவின் அறிவிப்புகளும் அபத்தங்களும்

ராஜபக்‌ஷர்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து நி‌ற்கின்ற நிலையில், கோட்டாவின் இந்த அறிவிப்புகள் கவனம் பெறுகின்றன.

தென் இலங்கையில் பேரினவாதத்தின் காவல் முகங்களாக, ராஜபக்‌ஷர்கள் பார்க்கப்படுகிறார்கள். அவர்களின் ஆட்சி அதிகாரத்துக்கான எழுச்சி, தமிழ், முஸ்லிம் சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறை, போர் வெற்றிவாதக் கோசங்களில் தங்கியிருப்பது.

ராஜபக்‌ஷர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றிக்கான முதலீடாக, அதை இனவாதத் தீயாக வளர்த்துக் கொள்வார்கள். கடந்த ஜனாதிபதி, பொதுத் தேர்தல் ஆகியவற்றிலும் அந்தத் தீயிலேயே வெற்றியைச் சமைத்தார்கள். 

ஆனால், அந்த வெற்றி சில மாதங்களுக்குள்ளேயே காணாமல் போகும் அளவுக்கு நிலைமை மாறியது. இன்றைக்கு நாட்டு மக்கள், ராஜபக்‌ஷர்களின் மீது பெரும் அதிருப்தியோடு இருக்கிறார்கள். நாட்டின் பொருளாதாரத்தை அதலபாதாளத்துக்குள் தள்ளிவிட்டார்கள் என்கிற கோபம் பெருந்தீயாக எரிகின்றது. 

சீனாவை மட்டும் நம்பிக்கொண்டு ஒட்டுமொத்த சர்வதேச நாடுகளையும் வேண்டா வெறுப்பாகக் கையாண்டு, நாட்டின் இராஜதந்திர நகர்வுகளை மாத்திரமல்லாமல் பொருளாதாரத்தையும் ராஜபக்‌ஷர்கள் சிதைத்ததுதான் அந்தக் கோபத்துக்கான காரணமாகும்.

சீனா என்கிற பெயரைக் கேட்டதும் ஒரு காலம் வரையில், தென் இலங்கை மக்களிடம் பெரும் வரவேற்புக் காணப்பட்டது. அது, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் மீதான அதிருப்தியால் எழுந்தது. 

ஆனால், இன்றைக்கு மேற்கு நாடுகளையும் விட, சீனா மீதான அதிருப்தி மக்களிடம் எழுந்திருக்கின்றது. அது, நாட்டைத் திட்டமிட்டு பெரும் கடனாளியாக்கிவிட்டமை மீதான கோபம். 

இன்றைக்கு சீனாவும் தன்னுடைய கடன் வளங்கும் மூலங்களை மட்டுப்படுத்திவிட்டு, ராஜபக்‌ஷர்களை நோக்கி, கடன்களுக்கான வட்டிகளைக் கோருகின்றது. அந்த வட்டிகளுக்காக, நாட்டின் பிரதான பகுதிகளையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கின்றது. 

இவ்வாறான நிலையை, காலம் கடந்து உணர்ந்திருக்கின்ற ராஜபக்‌ஷர்கள், மேற்கு நாடுகளை நோக்கி, புதிதாக நேசக்கரம் நீட்ட எத்தனிக்கிறார்கள். அதனைத்தான், ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வுகளில் கலந்து கொள்ளச் சென்ற கோட்டாவின் அறிவிப்புகள் வெளிப்படுத்தி நிற்கின்றன. 

புலம்பெயர் அமைப்புகள், தனிநபர்கள் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட தரப்புகள் மீதான தடையை, கடந்த மார்ச் மாதம் இலங்கை அரசு வர்த்தமானியில் அறிவித்தது. இந்தத் தரப்புகளில் பெரும்பாலான அமைப்புகள், தனிநபர்கள் மீதான தடை, கடந்த நல்லாட்சிக் காலத்தில் நீக்கப்பட்டிருந்தது. 

ஆனால், ராஜபக்‌ஷர்கள், தங்களின் ஆட்சி அதிகார வரலாறு, தமிழர்  விரோத நிலைப்பாடுகளால் நிலைத்திருப்பது என்பதை அறிவிப்பதற்காகவே, புலம்பெயர் அமைப்புகள், தனிநபர்கள் மீதான தடையை மீண்டும் அமல்படுத்தினார்கள். 

எனினும், இன்றைக்கு புலம்பெயர் தரப்புகளை முதலீடு செய்வதற்கு, கோட்டா அழைக்கும் நிலை வந்திருக்கின்றது. அதற்குப் பொருளாதாரம் நலிவடைந்து, நாடு திவாலாகும் நிலையை அடைந்திருப்பதே ஒரே காரணமாகும்.

ஆயுத மோதல்கள், முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்த போது, வடக்கு – கிழக்கில் மட்டுமல்லாது, நாடு முழுவதுமாக முதலீடுகளை மேற்கொள்வதற்கான முன்வைப்புகளோடு புலம்பெயர் தமிழர் தரப்புகள் முன்வந்தன. ராஜபக்‌ஷர்களின் முதல் ஆட்சிக் காலத்தில், அதற்காகப் பல தடவைகள் பேச்சுகளும் நடத்தப்பட்டன. 

ஆனாலும், சீனா வழங்கும் கடன்களால் செழிக்க முடியும் என்கிற நம்பிக்கையும் தமிழர் விரோதப் போக்கும், புலம்பெயர் தரப்புகளை ராஜபக்‌ஷர்கள் விரட்டியடிப்பதற்கு காரணமாயின. 

குறிப்பாக, வடக்கு மாகாண சபைத் தேர்தல்களில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெற்றிபெற்று ஆட்சி அமைத்ததும், முதலமைச்சர் நிதியமொன்றை ஆரம்பித்து, அதனூடாகப் புலம்பெயர் தரப்புகளினூடாக முதலீடுகளை உள்வாங்க முயற்சிக்கப்பட்ட போதும், அதனை ராஜபக்‌ஷர்கள் நிராகரித்தார்கள். அவர்களைத் தொடர்ந்து வந்த நல்லாட்சி அரசாங்கமும் அதனை நிராகரித்தது. 

முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னராக நாள்களில், குறிப்பாக வடக்கு மாகாண சபை தேர்தலுக்குப் பின்னரான காலத்தில், புலம்பெயர் தரப்புகளை நாட்டில் முதலிடுவதற்கு அனுமதித்திருந்தால், நாட்டின் பொருளாதாரத்தில் கணிசமான முன்னேற்றத்துக்கான வாய்ப்புகள் இருந்திருக்கும். 

குறிப்பாக, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் இலட்சக்கணக்கில் உருவாக்கப்பட்டிருக்கும். கடந்த மார்ச் மாதம், புலம்பெயர் தரப்புகள் மீதான தடையை அறிவித்துவிட்டு, ஆறு மாதங்களிலேயே புலம்பெயர் தரப்புகளை முதலீடுகளை செய்ய அழைப்பது என்பது, ‘ராஜபக்‌ஷர்கள் என்னத்தைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்கிற நிலைக்கு வந்திருப்பதைக் காட்டுகின்றது.

முள்ளிவாய்க்கால் இறுதி மோதல் நாள்களில், தங்களது உறவுகளை இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினரிடம் நேரடியாகக் கையளித்த ஆயிரக்கணக்கானவர்கள், இன்னமும் உயிரோடு இருக்கிறார்கள். தாங்கள் உயிரோடு கையளித்தவர்களின் நிலை என்ன, அவர்கள் மீண்டும் வீடு திருப்புவார்களா என்பதை அறிவதற்காக, கடந்த 12 வருடங்களாக அவர்கள் பல தரப்புகளின் கதவுகளையும் தட்டிவிட்டார்கள். 

இலங்கை அரசின் கதவுகள் எப்போதோ மூடப்பட்ட போதிலும், தங்களது உறவுகள் உயிரோடு திரும்பிவிடுவார்கள் என்கிற நம்பிக்கை, அந்த மக்களிடம் கதவுகளை ஓங்கித் தட்டுவதற்கான ஓர்மத்தை வழங்குகின்றது. 

ஆனால், அந்த மக்களின் உறவுகளை உயிரோடு கையேற்ற இலங்கை அரச கட்டமைப்போ, மரணச் சான்றிதழ்களை வழங்குவதற்கு ஆர்வமாக இருக்கின்றது. ஒருவர் மரணமடைந்துவிட்டார் என்றால், அந்த மரணம் எவ்வாறு நிகழ்ந்தது, எப்போது நிகழ்ந்தது என்பதை அறிவித்து வழங்கப்படும் ஆவணமே, மரணச் சான்றிதழாகும். 

விடயம் அப்படியிருக்க, உயிரோடு கையளிக்கப்பட்டவர்கள் எவ்வாறு மரணித்தார்கள்; மரணத்தின் சூத்திரதாரிகள் யார் என்பதை அறிவிக்காமல், எவ்வாறு மரணச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ள முடியும்? 

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்ந்து, இலங்கையின் ஆட்சியிலிருந்த அனைத்து அரசாங்கங்களும் மரணச்சான்றிதழை வழங்கி, விடயத்தை முடிக்கவே முயற்சிக்கின்றன. 

மாறாக, அது தொடர்பில் எழுப்பப்படும் நியாயமான எந்தக் கேள்வியையும் எதிர்கொள்வதற்குத் தயாராக இருப்பதில்லை.

இப்போது, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரணச்சான்றிதழ் வழங்குவது தொடர்பில், கோட்டா அறிவித்திருப்பதும் அவ்வாறானதோர் அறிவித்தலே! அதிலும் முக்கியமாக, முள்ளிவாய்க்கால் இறுதி நாள்களில் இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினருக்கு உத்தரவுகளை வழங்கும் அதிகாரியாகச் செயற்பட்டவர்களில் கோட்டா பிரதானமானவர். 

அப்போது, பாதுகாப்பு அமைச்சராக இருந்த மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு அடுத்து, அந்த அமைச்சின் செயலாளராக செயற்பட்ட கோட்டாவே பொறுப்புக்கூற வேண்டியவராகிறார். ஆனால், அவரோ தனக்கும் முள்ளிவாய்க்காலில் வைத்து பாதுகாப்புத் தரப்பினரிடம் கையளிக்கப்பட்டவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லாதது மாதிரியாகப் பேசிக் கொண்டிருக்கிறார். 

போர்க்குற்றத்துக்கான ஏதுகைகள் கொண்டிருக்கின்ற ஒரு விடயத்தை, மரணச் சான்றிதழ் ஊடாகக் கடந்துவிட முடியும் என்பது, எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படிப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட மக்களிடம் உள்ளகப் பொறிமுறை ஊடாக நீதியை வழங்குவது தொடர்பில், கோட்டா பிரஸ்தாபித்திருப்பது அபத்தங்களின் நீட்சி.

கொலைக் குற்றத்தைப் புரிந்த ஒருவனிடம், அந்தக் கொலை தொடர்பிலான விசாரணையைக் கையளிப்பதன் மூலம், நீதியான விசாரணை நடத்தப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட்டுவிடும் என்கிற புதிய நிலைப்பாட்டைக் கட்டமைப்பதற்கு, ராஜபக்‌ஷர்களும் பேரினவாத சக்திகளும் தொடர்ச்சியாக முயற்சித்து வருகின்றன. 

அதாவது, மிருசுவில் படுகொலைக் குற்றவாளியான சுனில் ரட்ணாயக்கவுக்கும் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர கொலை வழக்கின் குற்றவாளியான துமிந்த சில்வாவுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டதும் ராஜபக்‌ஷர்களின் புதிய நீதியின் படியே!

அவ்வாறான நீதியொன்றை வழங்குவதற்காகவே, உள்ளகப் பொறிமுறை ஊடாக, விடயங்களைக் கையாளலாம் என்று கோட்டா அறிவித்திருக்கின்றார். 

இந்த அறிவிப்புகளால் எல்லாம், தமிழ் மக்களையும் சர்வதேசத்தையும் ஏமாற்றிவிடலாம் என்பதெல்லாம் ராஜபக்‌ஷர்களின் பகற்கனவு என்பதே யதார்த்தம் ஆகும்.