‘கொடுமை’க்கானலாக மாறிய கொடைக்கானல்: மனம் நொந்து திரும்பும் சுற்றுலாப் பயணிகள்

(பி.டி.ரவிச்சந்திரன்)

‘மலைகளின் இளவரசி’ என அழைக் கப்படும் கொடைக்கானலின் இயற்கை எழிலை ரசிக்க ஆவலோடு வரும் சுற்றுலாப் பயணிகள், தங்கள் பயணத்தை முடித்து திரும்பும் போது, இத்தனை சிரமங்களுக்கு இடையில் இயற்கை எழிலை ரசிப்பது சாத்தியமில்லை என்ற மனநிலை யில் கொடைக்கானலை ஒரு கொடுமைக்கானலாகவே பார்த்து விட்டு மனம் நொந்து செல்கின்றனர்.

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறாக ஆக்கிரமிப்புகளை அதிகம் செய் துள்ளது நகராட்சி நிர்வாகம் தான். ஆக்கிரமிப்புகளைக் கண் காணித்து அகற்றவேண்டியவர்களே வருவாயைக் கணக்கில்கொண்டு சாலைகளை ஆக்கிரமித்து கடை களை அமைத்துள்ளனர். மேலும் வாகன நிறுத்துமிடம் இல்லாத ஹோட்டல்கள் முன்பு சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் குறிப்பிட்ட நாளுக்குள் அத்தனை இடங்களையும் சுற்றிப் பார்க்க முடியாமல் பயணிகள் அவதிப்படுகின்றனர்.

பாலிதீன் பயன்பாடு

கொடைக்கானல் நகரம் பாலி தீன் இல்லாத நகரமாக அறிவிக்கப் பட்டபோதும், இதற்கான முயற்சி களில் நகராட்சி நிர்வாகம் இன்னும் முழுமையாக ஈடுபடவில்லை. இதன்விளைவாக ஹோட்டல்களில் வாழை இலைகளுக்கு பதிலாக பாலிதீன் ஷீட்களையே இன்றும் பயன்படுத்தி வருகின்றனர். “சுற் றுலாப் பயணிகள் பாலிதீன் பைகள் கொண்டுவந்தால் அதை வாங்கிக் கொண்டு துணிப்பைகளை கொடுப் பது வரவேற்கத்தக்கது. அதேநேரத் தில் சுற்றுலாப் பயணிகளுக்கு அறி வுரை கூறும் வனத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் சுற்றுலாத் துறை யினர் கொடைக்கானலில் உள்ள ஹோட்டல்கள், கடைகளில் பாலிதீன் பயன்பாட்டைத் தவிர்க்க ஏன் முழுமையான நடவடிக்கை எடுக்க வில்லை?” என்று கேட்கிறார்கள் இயற்கை ஆர்வலர்கள்.

கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா அருகே பயன்படாத நிலையில் உள்ள நடமாடும் கழிப்பிடம் | கொடைக்கானல் ஏழு ரோடு பகுதியில் இருந்த ஏரிக்கு செல்லும் வழியில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள நகராட்சி கடைகள்.
சுகாதாரக் கேடு

கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள சுற்றுலாத் தலங்களில் பயணிகளின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வகை யில் கழிப்பிடம், குடிநீர் வசதிகள் போதுமான அளவு செய்துதரப்பட வில்லை என்பது சுற்றுலாப் பயணி களின் குற்றச்சாட்டாக உள்ளது. சுற்றுலாத் தலங்களில் போதுமான குப்பைத் தொட்டிகளும் இல்லை. இதனால் சாலைகளில் குப்பை சிதறிக் கிடந்து சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. அவற்றை தினமும் அகற்றாததால் சுற்றுலாத் தலங்களில் துர்நாற்றத்துக்கு குறைவில்லை.

விலை பட்டியல் இல்லை

கொடைக்கானலின் தற்போ தைய நிலை பற்றி இயற்கை ஆர்வலர் எபெக்ட் வீரா கூறும்போது, “சுற்றுலாத் தலங்களில் இகோ டாய் லெட் வசதி செய்துதரப்படும் என்ற வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப் படவில்லை. இதனால் பல இடங் கள் திறந்தவெளி கழிப்பிடமாக உள் ளன. சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் பூங்கா, ஏரிப்பகுதியில் போது மான கழிப்பிட வசதிகள் இல்லை. நகராட்சியில் 125 துப்புரவு பணி யாளர்கள் இருக்கவேண்டிய நிலை யில் 75 பேர் மட்டுமே இருக்கின்றனர். இதனால் தினமும் காலையில் குப்பையை அகற்றமுடிவதில்லை. கொடைக்கானல் நகரில் எந்த ஹோட்டலிலும் விலை பட்டியல் இல்லை. இதேபோல் விடுதி களிலும் அவர்கள் நிர்ணயிப்பதுதான் கட்டணம். இதை கட்டுப்படுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப் பதில்லை.

சுற்றுலாப் பயணிகளை நம்பியே கொடைக்கானலின் வாழ்வாதாரம் உள்ளது. இதை புரிந்துகொள்ளாமல் இங்கு சுற்றுலா பயணிகளை முகம் நோகச் செய்வதுதான் இங்கு நடந்து கொண்டிருக்கிறது. தற்போதைய நிலை தொடர்ந்தால் விரைவில் இயற்கையை அழிவுப்பாதைக்கு நாமே அழைத்துச்செல்லும் பாதக செயலை செய்பவர்களாகி விடுவோம். வனத்துறை, நகராட்சி, சுற்றுலாத் துறையுடன் உள்ளூர் மக்களும் கூட்டு முயற்சி செய்து கொடைக்கானலை காப்பாற்றினால் நம் அடுத்த தலைமுறை நம்மை வாழ்த்தும்” என்றார்.

குறையும் ஈரப்பதம்

கொடைக்கானல் மலைப்பகுதி யில் ஆண்டு சராசரி மழை அளவு 1260 மில்லிமீட்டர். காற்றில் ஈரப்பதம் 80 முதல் 90 சதவீதம், வெப்பநிலை அதிகபட்சமாக 24 டிகிரி செல்சியஸ். குறைந்தபட்சமாக 3 டிகிரி செல்சியஸ். கடந்த 25 ஆண்டுகளில் கொடைக்கானலின் சீதோஷ்ண நிலை இயல்பைவிட வெகுவாக மாறியுள்ளது. குறைந்தபட்ச வெப்ப நிலை 3 டிகிரிசெல்சியஸ் நிலையை எட்டி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. தற்போது 7 டிகிரி செல்சியஸ்தான் குறைந்தபட்ச வெப்பநிலையாக பதிவாகிறது.

சில ஆண்டுகளாக பகல் நேரத்தில் காற்றில் ஈரப்பதம் 60 சதவீதத்துக்கு மேல் இருப்பதில்லை. இதனால் அதிக குளுமை ஏற்படுவதில்லை. ஆண்டுமுழுவதும் குளுமையாக காணப்படும் கொடைக்கானலில் தற்போது பல மாதங்களில் பகலில் வெயிலின் தாக்கம் காணப்படும் நிலை உள்ளது.

இதற்கு காரணம் மரங்கள் வெட்டப்படுவது, வாகனங்கள் அதிகரிப்பால் காற்று மாசு, பாலி தீன் பயன்பாட்டால் மழைநீர் நிலத் துக்குள் புகுவது தடுக்கப்படுவது தான் என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.