கொரனா: சமூகப் பொறுப்பை மறந்து பயணிக்கின்றோமா…?

‘உலக’ பொருளாதார தடையால் தனிமைப்படுத்தப்பட்ட கியூபாவின் மருத்துவ நிபுணத்துவத்தை உள் வாங்கிக் கொண்டு பயணித்தது மட்டும் அல்லாது அதிக பாய்ச்சலுடன் பரவிய இத்தாலியின் அழிவை கட்டுப்படுத்த தன்னால் ஆன வரை முயன்று கொண்டும் இருக்கின்றது.

ஆரம்பத்தில் சீனாவில் கொரனா கண்டறியப்பட்டு அந்நாடு அல்லோகல்லல் பட்டபோது தமது நாடுகளில் சமூகப் பொறுப்பை மறந்து தலைவிருத்தாடிய மேற்குலகம் இன்று வெடவெடத்துப் போய் கொண்டிருக்கின்றது கொரனாவின் தாக்கத்தால்.

இதனைப் பார்த்து யாரும் எள்ளி நகையாடவில்லை ஏன் சீனா கூட ஏளனம் செய்வில்லை மாறாக இதனை தடுத்து நிறுத்த இரு கரம் கொண்டு உதவ முயல்கின்றது மனித குலம்.

இதன் உச்சக் கட்டமாக கடலில் தத்தளித்த பிரிதானிய பிரஜைகளை அதிகம் கொண்ட உல்லாசக் கப்பலை தனது தரையிற்கு கொண்டு வந்து மனிதாபிமானத்தின் உச்சத்திற்குச் சென்று எவ்வித பிரதி உபகாரமும் இன்றி சிகிச்சையும் வாழ்க்கையும் அளித்து வருகின்றது கியூபா.

இத்தனைக்கும் பிரித்தானியாவும் இதே கியூபாவிற்கான பொருளாதாரத் தடையில் கியூபாவை வறுமையை நோக்கித் தள்ள முயன்று கொண்டுதான் வருகின்றது கடந்த பல தசாப்தங்களாக.

இனியாவது உலக மக்கள் இந்த மேற்குல ஏகபோகங்களை நிராகரித்து இந்த மனித நேயத்தின் அடையாளமான கியூபாவை அரவணைத்து செல்ல வேண்டும் அவர்களுடன் கரம் கோர்க்க ஒரணியில் நின்று குரல்கொடுத்தேயாக வேண்டும்.

மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் ஒரு வகை உறைநிலை செயற்பாடுதான் இந்த கொரனா வைரஸ் தொற்றுவதை தடுக்க ஒரே வழி என்றவகையில் தமது நாடுகளை உறைநிலைக்கு கொண்டுவந்திருக்கின்றன பல நாடுகள். அந்நாட்டு மக்களும் இதற்கு ஒத்துழைப்புகளை கணிசமான அளவில் வழங்கிவருகின்றனர்.

ஆனால் தொற்று நோயுடன் இலங்கை வந்தவர்கள் இலங்கை விமான நிலையத்தில் இறங்கி தலைமறைவானதும் பின்பு இவர்களை கைது செய்ய ஊரடங்கு போட்டுத் தேடுதல் வேட்டை நடாத்துவதில் அரசின் கவனக் குறைவு என்பதை விட மக்கள் சமூகப் பொறுப்பை தட்டிக்கழிக்கும் செயற்பாடுகளே மேலோங்கி நிறப்பதையே அதிகம் பார்க்க முடிகின்றது.

அங்கிருந்து வரும் செய்திகளில் நோய் தொற்று பற்றிய விழிப்புணர்வு என்பதைக் காட்டி வரும் அக்கறையை விட தேர்தலில் காட்டும் அக்கறையே அரசியல் தலமைகளிடம் அதிகம் தென்படுகின்றது. இந்தப் போக்கின் எச்ச சொச்சங்கள் மக்களிடமும் காணப்படுகின்றது. இது ஆரோக்கியமான நிலமை அல்ல.

இலங்கை அரசு தேர்தலை ஒத்தி வைத்து மக்களை இந்த கொடி கொரனாவில் இருந்து காப்பாற்றுவதற்கான சமூக விழிப்புணர்விற்குள் தள்ளியே ஆகவேண்டும்.

உலகின் பல நாடுகளிலும் ஏற்பட்டது போல் தமக்கு தேவையிற்கு அதிகமான பொருட்களை வாங்கி குவித்து தட்டுப்பாடுகளை ஏற்படுத்திய நிலமை ஒரு வகை பொருட்களை வியாபாரிகள் பதுக்குவதற்கு ஒப்பான செயற்பாடுகள் ஆகும். இது வன்மையான கண்டனத்திற்குரியது.

தொற்று நோய் எல்லோருக்கும் பொதுவானது. இதன் தாக்கமும் பொதுவானதே. எனவே பொருட்களுக்கான தேவையும், தட்டுப்பாடும் பொதுவானவையே.

இதில் எனக்கு மட்டும் என்ற வகையில் பொருட்களை அள்ளும் சுயநலம் அன்றாடம் பொருட்களை வாங்கி வசிப்பவர்களை பட்டினியில் போடும் செயற்பாட்டிற்குள் தள்ளும். இது நிச்சயமாக குற்றச் செயலே… மனிதாபிமானம் அற்ற செயல். வேண்டுமாயின் சற்று அதிகமாக வாங்கி வைத்திருக்கலாம் முன் எச்சரிகையாக அதனை விடுத்து ஒரு அங்காடி நடத்தும் அளவிற்கு பொருட்களை வாங்கி எமது வீட்டில் பதுக்குவது பிழையான விடயமே.

அரசுகள் பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் ஏற்படாது அப்படி ஏற்படும் இடத்து இதற்கான மாற்று ஒழுங்குகள் செய்யப்படும் என்ற அறிவுறுத்தல்களை செய்த வண்ணம் இருக்கும் போதும் கூட வளர்ச்சியடைந்த நாடுகளிலேயே இந்த எம் வீட்டிற்குள் பதுக்கல்கள் ஏற்புடையது அல்ல.

இது ஒருவகையில் நான் வாழ்ந்தால் மட்டும் போதும் என்ற சிந்தனையின் வெளிப்பாடே ஆகும். இன்று எம்மிடம் மேலோங்க வேண்டியது ‘நாம்” வாழ்ந்தால் என்பதே ‘நான்” வாழ்ந்தால் என்பது அல்ல. இந்த சிந்தனையே எம்மை நோய் தொற்றில் இருந்தும் காப்பாற்றும் நாம் மீட்சி பெற வாய்புக்களையும் ஏற்படுத்தும்.

மக்களிடம் ஏற்பட்டுவரும் இந்த பதட்டத்தை தமது மூலதனமாக்கி தட்டுப்பாடுகளை…. விலையேற்றங்களை…. ஏற்படுத்தி அதிக லாபம் செய்யும் வியாபாரிகள் தண்டனைக்குரிய குற்றவாளிகள். அதுவும் பல தேசங்களில் அரசுகள் அவசரகால நிலமை அறிவித்த பின்பும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் இந்த கடைக்காரர்கள் சமூகத்தில் இருந்து ஒதுக்கப்பட வேண்டியவர்கள்.

நிலமைகளை சீரான பின்பு இவர்களுக்கான தண்டனையை மக்கள் இவர்களை நிராகரிப்பதன் மூலம் செய்தே ஆகவேண்டும் அப்படி செயற்பட்டால்தான் இது போன்ற மக்களின் வாழ்விற்கு பேரிடர் ஏற்படும் போது இந்த மோசமான கடைக்காரர்கள் தமது அறத்திற்கு எதிரான செயற்பாட்டை செய்யாமல் தவிர்பர். இதில் நாம் இவர்களுக்கான மன்னிப்பை தவிர்க்க வேண்டும்.

தனித்திருக்க வழங்கப்பட்ட விடுமுறைகளை மீண்டும் கூடிக் களிப்பதற்காக TNagar ன் ரங்கநாதன் தெருவிலும், கொழும்பு வீதிகளிலும், யாழ் வீதிகளிலும், தேர்தல் திருவிழா என்று அலைவதிலும், ஈடுபடுவதிலும் தவிர்க்க வேண்டும். கூட்டம் கூடுதல் ஆபத்தை உணராமல் செயற்படும் செயற்பாடுகள். சமூகப் பொறுப்பை மறுக்கும் செயற்பாடுகள் இவை.

மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்த்தல் என்பதில் அக்கறையுடன் செயற்படவில்லை எனின் அரசுதான் மேலிருந்து கீழாக கடுமையான சட்ட ஒழுங்கு முறை அமுப்படுத்தல் அடிப்படையில் இவற்றை செயற்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டும்.

கொரனா விடயத்தில் வருமுன் காப்போனே புத்திசாலி…. வாழ்வதற்கான உறுதிப்பாட்டை எடுத்தவனாக இருப்பான். இத்தாலியின் பாடங்களை நாம் எமக்கான கெட்ட பாடங்களாக எடுப்போம். எம் தேசத்தில் வெறும் சிறு எண்ணிக்கைதான் தொற்று… இறப்பு… என்று சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் செயற்பட வேண்டும்.

முழு மனித குலத்தையும் காப்பாற்றுவதில் எம் ஒவ்வொருவரினதும் பங்கு மகத்தானது தொற்றுவதை தடுத்தால் நாம் இதில் இருந்து விடுபடுவது இலகு. இதற்கு நல்ல உதாரணம் சீனா.

தொற்றலை முழுமையாக? அல்லது பாரியளவில் தவிர்த்த நாடுகளில் இடதுசாரி அரசு நாடுகளான கியூபா, நிகரகுவா, வெனிசுலா, உருகுவே, வியட்நாம், ஏன் ரஷ்யா போன்ற நாடுகளை நாம் முன் உதாரணமாக கொள்ளலாம்.

எமது சமூகப் பொறுப்புக்களை தட்டிக் கழிக்காமல் நோய் தொற்றை தவிர்க்கும் தனியாக இருத்தல், தள்ளி நிற்றல், சுகாதாரமாக இருத்தல் என்பதை கைகொள்வோம்.

மாறாக தனிமையாக இல்லாது சமூகமாக, நட்பாக, உறவாக, மனித நேயத்துடன் செயற்படுவோம். இவ்வாறு செயற்பட்டால் கொரனாவை கோடி வழியாக விரட்டி விட முடியும்.